கல்வி உரிமைச் சட்டம்: சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

புதுடில்லி: "கல்வி உரிமை சட்டம் அரசியல் சாசன சட்டப்படி செல்லத்தக்கதே. எனினும், அந்தச் சட்டம் அரசிடமிருந்து நிதியுதவி பெறும் அல்லது நிதியுதவி பெறாத சிறுபான்மையின கல்வி நிறுவனங்களை கட்டுப்படுத்தாது" என, சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன பெஞ்ச் நேற்று உத்தரவிட்டது.
கட்டாயக் கல்வி
மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2009ல் பிறப்பித்த சட்டம் கல்வி உரிமைச் சட்டம். இந்த சட்டத்தின் படி 6 வயது முதல் 14 வரையுள்ளவர்களுக்கு இலவசமாக கட்டாயக் கல்வி அளிக்கப்பட வேண்டும். மேலும், பள்ளிகளில் 25 சதவீத இடங்கள், பொருளாதார நிலையில் மிகவும் நலிவடைந்த ஏழைகளின் குழந்தைகளுக்கு ஒதுக்கப்பட வேண்டும்.
இந்த சட்டத்தை எதிர்த்து தனியார் பள்ளி நிறுவனங்கள் மற்றும் சிறுபான்மையின கல்வி நிறுவனங்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த மூன்று நீதிபதிகளை கொண்ட சுப்ரீம் கோர்ட், "இந்த வழக்கு, அரசியல் அமைப்பு சட்ட அம்சங்களை கொண்டுள்ளதால் ஐந்து நீதிபதிகளை கொண்ட, அரசியல் சாசன பெஞ்ச் தான் விசாரிக்க முடியும்" என தெரிவித்து, வழக்கை அரசியல் சாசன பெஞ்சிற்கு மாற்றி உத்தரவிட்டிருந்தது.
அதற்கு முன்னதாக, "இந்தச் சட்டம் சிறுபான்மையினர் நடத்தும் அரசிடம் இருந்து நிதியுதவி பெறும் பள்ளிகளை கட்டுப்படுத்துமா" என்ற கேள்வியை எழுப்பியிருந்ததால் வழக்கை விசாரித்த ஒரு நீதிபதி, மூன்று நீதிபதிகள் அடங்கிய பெஞ்சிற்கு வழக்கை பரிந்துரை செய்திருந்தார். வழக்கை விசாரித்த மூன்று நீதிபதிகள், அதன்பின் ஐந்து நீதிபதிகள் பெஞ்சிற்கு பரிந்துரை செய்திருந்தனர்.
தலைமை நீதிபதி லோடா மற்றும் நீதிபதிகள், கலிபுல்லா, ஏ.கே.பட்நாயக், தீபக் மிஸ்ரா, முகோபாத்யாயா ஆகியோரை கொண்ட, அரசியல் சாசன பெஞ்ச், நேற்று இந்த வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பித்தது. நீதிபதிகள் தங்கள் உத்தரவில், "கல்வி உரிமைச் சட்டம் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது தான். எனினும், அந்த சட்டத்தின் அம்சங்கள் அரசிடம் இருந்து நிதியுதவி பெறும் அல்லது பெறாத சிறுபான்மை கல்வி நிறுவனங்களை கட்டுப்படுத்தாது" என, தெரிவித்தனர்.
கட்டாயம் கிடையாது
மேலும், "அரசியல் அமைப்புச் சட்டத்தின் 21 ஏ பிரிவின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள இந்த சட்டம், அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படைகளை குலைக்காது" எனவும் உத்தரவிட்டனர்.
இதன் மூலம், சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களில் கல்வி உரிமைச் சட்டம் செல்லுபடியாகாது என்பது தெளிவாகி உள்ளது. அது போல், அந்த கல்வி நிறுவனங்களில் 25 சதவீத இடங்களை, ஏழைகள் மற்றும் பொருளாதார ரீதியில் நலிவடைந்தவர்களுக்கு ஒதுக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது என்பதும் உறுதியாகி உள்ளது.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post