ஐ.ஐ.டி. கவுன்சிலில் முதன்முறையாக 2 பெண் விஞ்ஞானிகள்!


புதுடில்லி: இதுவரை ஆண்கள் மட்டுமே இடம்பெற்றிருந்த, பெண்களுக்கு இடம் அளிக்கப்படாத ஐ.ஐ.டி.,களின் உச்ச நிர்வாக அமைப்பான ஐ.ஐ.டி. கவுன்சிலில், முதன்முறையாக 2 பெண் விஞ்ஞானிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய மனிதவள அமைச்சகம் இந்த நியமனத்தை செய்துள்ளது. ஐ.ஐ.டி. கவுன்சில் என்பது நாட்டிலுள்ள 16 ஐ.ஐ.டி.,களின் உச்ச நிர்வாக அமைப்பாகும்.
டெஸி தாமஸ் மற்றும் விஜயலட்சுமி ரவீந்திரநாத் ஆகிய இருவர்தான் அந்த புதிய அந்தஸ்தை, முதன்முறையாக பெற்ற இரண்டு பெண் விஞ்ஞானிகள்.
இதுதொடர்பாக அமைச்சக வட்டாரங்களில் கூறப்படுவதாவது: ஐ.ஐ.டி. கவுன்சிலில் முதன்முறையாக பெண்கள் நியமிக்கப்பட்டதன் முக்கிய காரணம், அறிவியல் என்பது ஆண்களுக்கு மட்டுமே உரியதல்ல, மாறாக, அதில் பெண்களும் வெற்றிகரமாக பங்காற்ற முடியும் என்பதை நிரூபிப்பதற்குத்தான். இந்த இரண்டு பெண்களும் முன்மாதிரியாக செயல்பட முடியும் என்று தெரிவிக்கப்பட்டது.
யார் இந்தப் பெண்கள்?
டெஸி தாமஸ் என்பவர், இந்திய ஏவுகணைத் திட்டத்திற்கு தலைமை வகித்த முதல் பெண். அக்னி - 4 ஏவுகணை திட்டத்தின் பொறுப்பாளராக அவர் இருந்தார். விஜயலட்சுமி ரவீந்திரநாத், தேசிய மூளை ஆராய்ச்சி மையத்தை அமைப்பதற்கு உதவியவர். மேலும், நியூரோஜெனரேட்டிவ் பிரச்சினைகள் குறித்து இவர் மேற்கொண்ட ஆய்வுகள், நோய் மாற்று சிகிச்சை மேம்பாட்டில் பயன்படுத்தக்கூடியதாகும்.
ஐ.ஐ.டி. கவுன்சில்
இந்த அமைப்பின் தலைவராக இருப்பவர், மத்திய மனிதவளத்துறை அமைச்சர். தவிர, நாடாளுமன்றத்தின் 3 உறுப்பினர்கள், அனைத்து ஐ.ஐ.டி.,களின் தலைவர்கள் மற்றும் இயக்குநர்கள், UGC தலைவர், CSIR தலைமை இயக்குநர், IISc தலைவர் மற்றும் இயக்குநர்கள், மத்திய மனிதவள அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட ஒருவர் மற்றும் மத்திய அரசு மற்றும் AICTE -ஆல் நியமிக்கப்படும் 3 நபர்கள் ஆகியோரைக் கொண்டதுதான் ஐ.ஐ.டி. கவுன்சில் என்னும் நிர்வாக அமைப்பு.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post