தீவிரமாகும் பட்டதாரி ஆசிரியர்களின்ரேஷன் கார்டு, சான்றிதழ்களை திரும்ப ஒப்படைக்கும் போராட்டம்-Dinakaran News


வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை திரும்ப பெறக்கோரி, தற்கொலை முயற்சி, ரேஷன் கார்டு மற்றும் சான்றிதழ்களை திரும்ப ஒப்படைக்கும் பட்டதாரி ஆசிரியர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
ஆனால், பிரச்னையை தீர்க்க வேண்டிய பள்ளி கல்வித் துறை அமைச்சர் மவுனமாக இருப்பதாக ஆசிரியர்கள் குற்றம்சாட்டுகின்றனர். 

ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியோரில் சுமார் 62ஆயிரம் பேர் உரிய மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றும், வெயிட்டேஜ் மதிப்பெண்ணால் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். இதனால் வெயிட்டேஜ் மதிப்பெண்ணை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தொடர் போராட்டத்தில் அவர்கள்ஈடுபட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்டோரில் 500க்கும் மேற்பட்டவர்கள், கடந்தமாதம் 18ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணா விரதம் தொடங்கினர். 9 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தனர். ஆனால் அது குறித்து அரசு தரப்பில் கண்டுகொள்ளவே இல்லை. இதனால் செப்டம்பர் 1ம் தேதி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கவன ஈர்ப்பு பேரணி நடத்தினர். இதற்கு போலீசார் எதிர்ப்பு தெரிவித்ததால் 3 பட்டதாரிகள் பூச்சிக் கொல்லி மருந்து உட்கொண்டு மயங்கி விழுந்தனர். இந்த சம்பவம் பல்வேறு அரசியல் தலைவர்களின் கவனத்தையும் ஈர்த்தது.பட்டதாரிகளுக்கு ஆதரவாக பல அமைப்புகள் குரல் கொடுத்தன. ஆனால் அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதைத் தொடர்ந்து பட்டதாரிகள் தரப்பில் மதுரை உயர்நீதி மன்றத்தில் பணி நியமன கவுன்சலிங் நடத்த தடை கேட்டு மனு செய்யப்பட்டது. அந்த மனுவின் மீது விசாரணை நடத்திய நீதி மன்றம் கவுன்சலிங் நடத்தலாம் ஆனால், பணி நியமனம் செய்யக்கூடாது என்று தடை உத்தரவு போட்டது. ஆனால், பணி நியமனம் ரகசியமாக நடப்பதாக அறிந்த பட்டதாரிகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தை கடந்த 2ம் தேதி முற்றுகையிட்டனர். இந்நிலையில், நேற்று காலை சுமார் 500க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் தங்கள் குடும்ப அட்டைகளை அரசிடம் ஒப்படைக்கப் போவதாக கூறி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட சென்றனர். போலீசார் அவர்களை தடுத்து 300 பேரை கைது செய்தனர்.

மீதம் உள்ள பட்டதாரிகள் தங்கள் சான்றிதழ்களை ஆசிரியர் தேர்வு வாரியத்தில் ஒப்படைக்க நேற்று காலை டிபிஐ வளாகம் வந்தனர். ‘இந்த அலுவலகம் சுடுகாட்டைப் போன்றது’ என்று கூறி பிணங்களைப் போல தரையில் படுத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். போலீசார் அவர்களை கைது செய்ய முயற்சி செய்தனர். திங்களாக கிழமை குறை கேட்பு நாள் என்பதால் கைது செய்யாமல் விட்டனர்.இதையடுத்து பட்டதாரிகள் அனைவரும் டிஆர்பி அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருந்தனர். மாலையில் சான்றுகளை ஒப்படைக்க டிஆர்பி அலுவலகத்துக்குள் சென்றனர். அவர்களை போலீசார் தடுத்தனர். இதனால் அங்கு மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், சான்றுகளை வாங்க அங்குள்ள அதிகாரிகள் மறுத்துவிட்டனர். 

இந்த தொடர் போராட்டம் குறித்து பட்டதாரி செல்லதுரை கூறியதாவது: 
கடந்த 2009ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் தகுதித் தேர்வு நடத்தி தேர்ச்சி பெற்றவர்களை நியமிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த அரசு வெயிட்டேஜ் மதிப்பெண் என்ற பெயரால் தேர்ச்சி பெற்றவர்களை ஏமாற்றுகின்றது.அதனால் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்கிறோம். கடந்த 20நாட்களாக பெண்களும் ஆண்களுமாக இந்த தொடர் போராட்டம் நடத்தும் எங்களை அரசு கண்டுகொள்ளாதது வேதனை. கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும். இவ்வாறு செல்லதுரை கூறினார்.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post