15 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு பயிற்சி

திருப்பூர்: "புதிய வேலைவாய்ப்பை பெற்றுத்தரும் நோக்கில் நடப்பாண்டில் 15 ஆயிரம் பேருக்கு இலவச பயிற்சி அளிக்க மத்திய ஜவுளித்துறை திட்டமிடப்பட்டுள்ளது" என ஆயத்த ஆடை பயிற்சி மற்றும் வடிவமைப்பு மையங்களின் தென்மாநில மண்டல மேலாளர் நாகராஜ் தெரிவித்தார்.
மத்திய அரசின் ஜவுளித்துறை அமைச்சகம் படிக்காத மற்றும் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு வேறு பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்களை தேர்வு செய்து மாற்றுத்தொழிலுக்கு இலவச பயிற்சி அளிக்கிறது. பின்னலாடை, ஆயத்த ஆடை தொடர்பாக தொழில் நுணுக்கங்கள் கற்றுத்தரப்படுகின்றன.

பயிற்சி முடிப்பவர்களை அருகில் உள்ள நிறுவனங்களில் பணியில் இணைத்துக் கொள்ளவும் பரிந்துரை செய்யப்படுகின்றனர்; சுயதொழில் துவங்கவும் உதவிகள் செய்யப்படுகின்றன. பின்னலாடைத்துறை மட்டுமின்றி கைத்தறி, தொழில்நுட்பம், சமூக நலன் குறித்த பயிற்சிகளும் இம்மையம் மூலம் அளிக்கப்படுகிறது. ஆயத்த ஆடை தொடர்பான பயிற்சி விரைவில் நடைபெற உள்ளது. பங்கேற்க விரும்புவோர் வரும் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
ஆயத்த ஆடை பயிற்சி மற்றும் வடிவமைப்பு மையங்களின் தென்மாநில மண்டல மேலாளர் நாகராஜ் கூறியதாவது: "ஐந்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். நாடு முழுவதும் உள்ள 200 மையங்களிலும் ஒரே மாதிரியான பயிற்சியே அளிக்கப்படும். தமிழகத்தில் 70 மையங்களில் விரைவில் பயிற்சி துவங்க உள்ளது.
நடப்பாண்டில் மகளிர் சுய உதவி குழுவினர், கைத்தறி துறையில் ஆர்வமுள்ளவர்கள், சமூக நலன் மேம்பாட்டுத்துறை, தொழில்நுட்ப பயன்பாடு உள்ளிட்ட பிரிவுகளில் 15 ஆயிரம் பேருக்கு இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது. புதிய வேலைவாய்ப்பு பெற்றுத்தரும் நோக்கத்தில் இலவசமாக வழங்கப்படும் இப்பயிற்சியில் வேலைவாய்ப்பு இல்லாதவர்கள் பங்கேற்க வேண்டும். இதன் மூலம் பணி குறித்து முன்கூட்டியே தெரிந்து கொள்ள முடியும்.
பயிற்சி பெறும் பெண்கள் மற்றொரு இடத்துக்கு சென்று பணிபுரிய தயங்கினால் சொந்தமாக தொழில் துவங்கிக் கொள்ளவும் வாய்ப்பாக இது அமைகிறது. திருப்பூரில், அவிநாசி ரோடு, இந்திரா நகரில் உள்ள ஆயத்த ஆடை பயிற்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில் விண்ணப்பங்கள் தரப்படுகின்றன." இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post