பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று நடந்த பிளஸ் 2 மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வில் தமிழ் இரண்டாம் தாள் கேள்விக்குப் பதில் பிளஸ் 1 பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகினர்.
பரமக்குடியில் நேற்று காலை 10 மணிக்கு பிளஸ் 2 மாணவர்களுக்கான தமிழ் இரண்டாம் தாள் தேர்வு நடந்தது. வினாத்தாளில் கேட்கப்பட்டிருந்தவை அனைத்தும் பிளஸ் 1 பாடத்தில் இருந்து கேட்கப்பட்டிருந்தன. மாணவர்கள் செய்வதறியாது திகைத்தனர்.
மாவட்டத்தில் உள்ள 130க்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மெட்ரிக் மாணவர்கள் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கும் இதே கதி தான். உடனடியாக அனைத்து பள்ளியில் இருந்தும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டனர்.
இதனால் காலை 10.30 மணிக்கு அனைத்து தலைமையாசிரியர்களுக்கும், வந்த தகவலில் அடிப்படையில் தேர்வு 25ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. மாணவர்கள் மனச்சோர்வுடன் வெளியேறினர். இந்த கல்வி ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே மாவட்ட கல்வித்துறையின் கவனக்குறைவால் காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளில் வினாத்தாள்கள் மாறி, மாறி அச்சிடப்படுவது வாடிக்கையாகியுள்ளது.
மாணவர்களின் கனவுகளை நனவாக்கிக் கொள்ள பிளஸ் 2 தேர்வு மிகப்பெரிய வடிகாலாக உள்ளது. ஆனால் ஒவ்வொரு முறையும் மாவட்டத் தேர்வுத்துறையின் அஜாக்கிரதையால் மாணவர்களின் கல்வியில் விளையாடி வருகிறது.
மாவட்ட மேல்நிலை தேர்வு ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் கூறியதாவது: இது குறித்து தெரியவில்லை. நான் தற்போது வெளியில் உள்ளேன். அலுவலகம் சென்று பதில் கூறுகிறேன், என்றார்.
முதன்மை கல்வி அலுவலர் சிவகாமசுந்தரியை தொடர்பு கொண்ட போது, அலுவலகப் பணியாளர் ஒருவர் பேசினார். அவர் முதன்மை கல்வி அலுவலர் வெளியில் சென்றுள்ளதாகவும், எதுவாக இருப்பினும் அவர் வந்த பின் தொடர்பு கொள்ளவும் என்றார். பலமுறை தொடர்பு கொண்ட போதும், இதே பதிலை அந்த ஊழியர் கூறினார்.
Tags
kalvi news