கோவை: தமிழ் பண்பாடு, கலாச்சாரம் காக்க "தாயகம் கடந்த தமிழ்" கருத்தரங்கம் தமிழ்ப் பண்பாட்டு மையம் சார்பில் கோவையில் வரும் 20 ம் தேதி துவங்கி மூன்று நாட்கள் நடத்தப்படுகிறது.
கோவையில் "தாயகம் கடந்த தமிழ்" என்ற தலைப்பில் உலகத் தமிழ் எழுத்தாளர் கருத்தரங்கம் வரும் 20ம் தேதி துவங்கி 22ம் தேதி வரை நடக்கிறது. இதில், 12 வெளிநாடுகளில் இருந்து எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், ஊடகவியலாளர்கள் என, 35 பல்துறை வல்லுனர்கள் பங்கேற்கிறார்கள்.
கோவை காளப்பட்டி ரோட்டில் உள்ள டாக்டர் என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடக்கும் முதல் நாள் கருத்தரங்கத்தை மாலை 5:00 மணிக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ராமசுப்ரமணியன் துவக்கி வைக்கிறார். "தாயகம் கடந்த தமிழ்" என்ற கட்டுரை நூலை தஞ்சை தமிழ்ப் பல்கலை., துணைவேந்தர் திருமலை வெளியிடுகிறார்.
முனைவர் சிலம்பொலி செல்லப்பன், இலங்கை ஜெயராஜ் வாழ்த்துரை வழங்குகின்றனர். தமிழ்ப் பண்பாட்டு மைய அறங்காவலர் கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியன் வரவேற்கிறார். கருத்தரங்க அமைப்புக்குழு தலைவர் புதிய தலைமுறை இதழ் ஆசிரியர் மாலன் கருத்தரங்கம் குறித்து அறிமுகம் செய்கிறார். டாக்டர். நல்லா.பழனிசாமி தலைமை வகிக்கிறார்.
கருத்தரங்கின் இரண்டாம், மூன்றாம் நாள் நிகழ்வுகள் கோவை கே.எம்.சி.எச். மருத்துவமனை வளாகத்திலுள்ள கருத்தரங்க கூடத்தில் நடக்கிறது. தாயகம் கடந்த தமிழ் ஓர் அறிமுகம், தாயகம் பெயர்தல் வலியும் வாழ்வும், புதிய சிறகுகள், தமிழ் கூறும் ஊடக உலகம், தொழில்நுட்பம் தரும் வாய்ப்புகள், மொழி பெயர்ப்பு - வெளியுலகின் வாயில், தாயகத்திற்கு அப்பால் தமிழ்க் கல்வி ஆகிய ஏழு அமர்வுகள் நடக்கிறது.
தமிழ் கலாச்சாரம் காக்க வேண்டும்
கோவையில் நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், "தமிழ்ப் பண்பாட்டு மைய"த்தின் தலைவர் டாக்டர். நல்லா. பழனிசாமி கூறியதாவது: தமிழ்மொழி, கலாசாரத்தை வளர்த்து பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் தமிழ்ப் பண்பாட்டு மையம் துவங்கப்பட்டது. உலகில் பெரும்பாலான மொழிகள் காலப்போக்கில் அழிந்து வருகின்றன. அந்த நிலை தமிழுக்கு வந்து விடக்கூடாது.
நம் குடும்பத்தில் தமிழ் பேச தயங்குகிறோம். ஆங்கில மொழியில் பேசினால் கவுரவம் என நினைக்கிறோம். ஆங்கிலம் படிக்க வேண்டும்; தமிழ் மொழியை அவசியம் படிக்க வேண்டும். இப்படிப்பட்ட நிலையில் தமிழ்ப் பண்பாடு, கலாச்சாரத்தை வளர்க்கவும், தமிழறிஞர்கள், படைப்பாளிகளை ஊக்கவிக்கவும் கருத்தரங்கம் நடக்கிறது என்றார்.
தமிழர் நலம் காக்கவேண்டும்
கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கூறியதாவது: கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடந்தது. அதன் நோக்கம், பின்புலம் வேறு. உலகம் முழுவதும் வாழும் தமிழர்களை ஒருங்கிணைக்கவும், தமிழின் வளம், தமிழர் நலம் பாதுகாக்கவும் கருத்தரங்கு நடத்தப்படுகிறது, என்றார்.
நாம் தான் பாதுகாக்க வேண்டும்
"புதிய தலைமுறை" இதழ் ஆசிரியர் மாலன் கூறியதாவது: சினிமா, டிவி. யின் மோகத்தால் தமிழ் உணர்வு மழுங்கி வருகிறது. தமிழ் பேசுவதை கேலிக்கூத்தாக நினைக்கிறோம். இதே மனோபாவம் தொடர்ந்தால் தமிழ் மொழியில் எழுதுவதும் பாதிக்கும். தமிழ் நூல்களை அச்சுப்பிரதியாக இல்லாமல் மின் நூலாக கொண்டு வந்தால் வெளிநாடு வாழ் தமிழர்களும் படிக்க முடியும். தமிழை பாதுகாக்க தமிழர்களால் மட்டுமே முடியும். கோவையில் நடக்கும் கருத்தரங்கில், தமிழ் மாணவர்கள், பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள் பங்கேற்கவேண்டும் என்றார்.
Tags
News