திருச்சி: "வெற்றிக்காக பாடுபாடும் மாணவர்கள் வெற்றி வாய்ப்பு வரும் வரை விழிப்போடு இருக்க வேண்டும்" என சிட்டி யூனியன் வங்கி சேர்மன் பாலசுப்பிரமணியன் பேசினார்.
திருச்சி ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரியில் பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. 92 பல்கலை ரேங்க் பெற்றோர் உள்பட 1,977 மாணவியருக்கு பட்டம் வழங்கப்பட்டது. கல்லூரியின் பட்டமளிப்பு விழாவுக்கு முதல்வர் வித்யாலட்சுமி வரவேற்றார். தலைவர் ராமானுஜம் தலைமை வகித்தார். கல்லூரி செயலாளர் குஞ்சிதபாதம் முன்னிலை வகித்தார். துணை முதல்வர் ரமா, வசந்தா மற்றும் துறைத்தலைவர்கள் பலர் பங்கேற்றனர்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கும்பகோணம் சிட்டி யூனியன் வங்கி சேர்மன் பாலசுப்பிரமணியன் மாணவியருக்கு பட்டம் வழங்கி பேசியதாவது:
மாணவியர் விடாமுயற்சியோடும், தன்னம்பிக்கையோடும் கடுமையாக உழைத்தால் தான் இலக்கை அடைய முடியும். கல்வி என்பது மதிப்பெண் பெறுவது மட்டுமல்ல. தனித்திறமையை வளர்த்துக்கொண்டு தனித்துவம் பெறுவதாகும். கல்வி கற்க வேண்டும் என்ற எண்ணம் வேண்டும். நமக்குள் மறைந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வருவதே கல்வி.
பட்டம் பெற்றதோடு நின்றுவிடாமல் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெண்களின் பங்களிப்பு முக்கியமானது. 21ம் நூற்றாண்டில் இந்தியாவும், சீனாவும் மிகப்பெரும் வல்லரசு நாடாக மாறும்.
வெற்றிக்காக நாம் காத்திருக்க வேண்டும். வெற்றி வாய்ப்பு வரும்போது சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஒரு சமயம் அலெக்ஸாண்டிரியாவில் உள்ள ஒரு பெரிய நூலகம் எரிந்துவிட்டது. அதிலிருந்து சில புத்தகங்களை ஒருவன் வாங்கி படித்தான். அதில் "டச்ஸ்டோன்" பற்றி எழுதப்பட்டிருந்தது. அந்தக்கல்லை கொண்டு எந்த உலோகத்தை தொட்டாலும் தங்கமாக மாறிவிடும். கூழாங்கல் போல் இருக்கும் அந்த கல் சூடாக இருக்கும். கடற்கரையில் பரவியிருந்த ஏராளமான கூழாங்கற்களை அவன் தொட்டுப்பார்த்தான். குளிர்ச்சியான கற்களை கடலில் தூக்கி வீசினான்.
தொடர்ந்து சில மாதங்களாக கற்களை வீசினான். அப்போது பழக்க தோசத்தில் கையில் கிடைத்த "டச்ஸ்டோனை"யும் கடலில் வீசிவிட்டான். தொடர் முயற்சியில் ஈடுபட்ட அவன் விழிப்புடன் இல்லாததால் அந்த கல்லை இழந்தான். எனவே, மாணவர்கள் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கூறியதுபோல, இளைஞர்கள் அதிகம் கொண்ட இந்தியா 2020ல் பொருளாதாரம் உள்பட அனைத்திலும் வல்லரசாக நாம் பாடுபட வேண்டும். பெண்கள் நாட்டில் பல்வேறு துறைகளில் முன்னோடியாக திகழ்கின்றனர்.
வெளிநாட்டு நிறுவனங்களில் இந்தியர் பலர் முதன்மை அதிகாரியாக உள்ளனர். இந்தியாவில் ஆங்கிலப்புலமை கொண்டோர் அதிகம். உலக அளவில் இன்ஜினியர்கள், விஞ்ஞானிகள் அதிகம் கொண்ட நாடாக இந்தியா, 2வது இடத்தில் உள்ளது.
அமெரிக்காவில் 38 சதவீதம் இந்திய டாக்டர்களும், நாசாவில் 36 சதவீதம் இந்திய விஞ்ஞானிகளும், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் 28 சதவீதம் இந்தியர்களும் பணியாற்றுகின்றனர். 1980ல் 3.5 சதவீதமாக இருந்த நாட்டின் மொத்த உற்பத்தி (ஜி.டி.பி.,) தற்போது இரட்டிப்பாகி உள்ளது. மாணவியர் உயர்கல்வி கற்று உயர்ந்த நிலையை அடைந்து, நாட்டையும் உயர்த்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
Tags
kalvi news