திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்: "தினமணி' ஆசிரியர் கே.வைத்தியநாதன்

திருக்குறளை இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என "தினமணி' ஆசிரியர் கே.வைத்தியநாதன் வலியுறுத்தி உள்ளார்.
புதுவைத் திருக்குறள் மன்றம் (புதிமம்) 2ஆம் ஆண்டு தொடக்க விழா மற்றும் திருவள்ளுவர் திருநாள் சிறப்புரை நிகழ்ச்சி புதுச்சேரி சித்தன்குடி ஜெயராம் திருமண நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் தொடக்க விழா உரையில் "தினமணி' நாளிதழ் ஆசிரியர் கே.வைத்தியநாதன் பேசியதாவது:
கம்பனுக்கு விழா எடுத்து சிறப்பிக்கும் புதுவையில், வள்ளுவனுக்கு விழா எடுத்து சிறப்பிக்க வேண்டாமா? என்கிற கேள்வி எனக்கு நீண்ட நாள்களாகவே இருந்து வந்தது. இப்போது அந்தக் குறையை புதிமம் நிவர்த்தி செய்துள்ளது. அதில் தினமணியும் பங்கு கொண்டிருப்பதில் பெருமிதம் கொள்கிறேன்.
1,330 குறள்களில் உலகையே சுருக்கி சிறிய அறிவுக் களஞ்சியமாக வள்ளுவப் பேராசான் நமக்கு அளித்துள்ளார். தினந்தோறும் நாங்கள் எழுதும் தலையங்கத்துக்கு பொருத்தமான திருக்குறளை தேர்ந்தெடுப்பதை பலர் பாராட்டுகிறார்கள். அதில் ரயில் விபத்தில் இருந்து உக்ரைன் அரசியல் வரை எதைப் பற்றி எழுதினாலும் அதற்கு ஏற்றவாறு ஒரு திருக்குறள் பொருத்தமாக காணப்படுகிறது. வேடிக்கை என்னவென்றால் தலையங்கத்துக்கு நாங்கள் அறத்துப்பால் மற்றும் பொருட்பால் ஆகியவற்றில் உள்ள 1,080 குறள்களில் இருந்து மட்டும் தான் தேர்வு செய்கிறோம்.
கண்ணதாசன் ஒருமுறை, பரிமேலழகர் எழுதிய உரைக்கு பதிலாக வித்தியாசமாக உரை எழுத வேண்டும் என்ற தனது விருப்பத்தைத் தெரிவித்தார். அறம், பொருள், இன்பம்   என்பதற்கு பதிலாக, இன்பம், பொருள், அறம் என்று அமைய வேண்டும் என்பது கவியரசரின் கருத்து. ஏனெனில் முதலில் இன்பம்; அந்த இன்பத்தை துய்ப்பதற்கு தேவைப்படுவது பொருள். பொருளை அடைந்த பிறகு ஏற்படுகின்ற சிந்தனை அறம். அதுதான் சரியான அமைப்பாக இருக்கும் என்பது அவரது கருத்து. கவிஞர் கண்ணதாசனின் நிறைவேறாத ஆசைகளில் ஒன்று திருக்குறளுக்கு உரை எழுதுவது.
ஆங்கிலத்தில் இருந்திருந்தால் திருக்குறள் உலகளாவிய அளவில் போற்றிப் புகழப்பட்டிருக்கும் என சிலர் நினைக்கின்றனர். அது தவறு. உலகின் சிறந்த நூல்கள் எதுவுமே ஆங்கிலத்தில் எழுதப்படவில்லை. பைபிளானாலும், கீதையானாலும், திருக்குரான் ஆனாலும் ஆங்கிலத்தில் எழுதப்படவில்லை என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன். நாம் திருக்குறளை உலகளாவிய அளவில் சரியாக எடுத்துச் சென்று அதன் பெருமையை உலகுக்கு உணர்த்தவில்லை என்பதுதான் திருக்குறள் உலகப் பொதுமறையாக தமிழகத்துக்கு வெளியே பரவலாக
போற்றப்படாததற்கு காரணம்.
இன்று நிர்வாகவியல் பற்றி உலகெங்கும் பேசுகின்றனர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நிர்வாகவியலின் அடிப்படைகளை வள்ளுவப் பேராசான், தெரிந்து செயல்வகை; காலம் அறிதல்; இடன் அறிதல்; தெரிந்து தெரிதல்; தெரிந்து வினையாடல் போன்ற அதிகாரங்களில் பதிவு செய்து விட்டார். மேலே குறிப்பிட்ட அதிகாரங்கள் நிர்வாகவியல் மாணவர்களின் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும்.
அதேபோல இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் உலகின் அரசியல் நிலையில் மாற்றம் ஏற்படும் என்றும் வள்ளுவப் பேராசான் முன்பே உணர்ந்திருந்தார். அரசன் என்றோ மன்னன் என்றோ அவர் எங்கும் குறிப்பிடவில்லை.
மக்களாட்சி மலரும் என்று முன்பே அவருக்கு தெரிந்திருந்ததால்தான் "தூங்காமை கல்வி துணிவுடமை இம்மூன்றும் நீங்கா நிலன் ஆள்பவர்க்கு' என்று இறைமாட்சியில் குறிப்பிடுகின்றார்.
திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்பட வேண்டும்: திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என தில்லியில் நடந்த தமிழ் இலக்கிய அமைப்புகள் மாநாட்டில் கோரிக்கை வைத்திருந்தோம்.
திருக்குறளுக்கு நிகரான நூல், இந்தியாவில் வேறு எந்த மொழியிலும் இல்லை. அவ்வாறு இருப்பதை நிரூபித்தால் அக்கோரிக்கையை திரும்ப பெற்றுக் கொள்கிறோம். "தினமணி'யின் சார்பாகவும் அனைவரின் சார்பாகவும் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை இந்த மாமன்றத்தின் மூலம் மீண்டும் வலியுறுத்துகிறேன் என்றார் வைத்தியநாதன்.
முன்னதாக புதிமம் அமைப்புச் செயலர் முனைவர். அ.அறிவுநம்பி வரவேற்று பேசியதாவது:
தினந்தோறும் தலையங்கத்தின் இறுதியில் அதற்கு பொருத்தமான திருக்குறளை பதிவு செய்யும் ஒரே நாளிதழ் தினமணி. அவ்வகையில் தினமணி ஆசிரியர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் புதிமம் பெருமை கொள்கிறது. மேலும், புதிமம் நிகழ்ச்சிக்கு வந்துள்ள சென்னை பச்சையப்பன் கல்லூரி முன்னாள் முதல்வர் தெ.ஞானசுந்தரம் உள்ளிட்ட அனைவரையும் வரவேற்கிறேன் என்றார் அறிவுநம்பி.
புதிமம் தலைவர் முனைவர் கலியன் எதிராசன் தலைமையுரை ஆற்றினார். புதுவை கம்பன் கழகத் தலைவர் நா.கோவிந்தசாமி, பாரதிதாசனார் மகன் கவிஞர் மன்னர் மன்னன், மன்றத்தின் சிறப்புத் தலைவர்கள் வெ.ராமச்சந்திரன், வே.பொ.சிவக்கொழுந்து, பாவலர்மணி சித்தன், தி.முருகேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர். புதிமம் துணைத் தலைவர் கலைமாமணி சுந்தர. லட்சுமி நாராயணன் நன்றி தெரிவித்தார்.
இதில் புதுவை ஸ்ரீ சாரதா கலாமந்திர் மாணவர்களின் வீணை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post