மும்பை: புதிதாக ஒரு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை ஏற்படுத்த, மராட்டிய மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இதன்மூலம், மாநிலம் முழுவதுமுள்ள அனைத்து பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள், இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகளை வழங்கும் செயல்பாட்டை இப்பல்கலை எளிமைப்படுத்தும்.
இப்புதிய பல்கலையின் பகுதிவாரியான மையங்கள், மும்பை, புனே, நாக்பூர் மற்றும் அவுரங்காபாத் ஆகிய இடங்களிலும், துணைநிலை பகுதிவாரியான மையங்கள் கோலாப்பூர், சோலாப்பூர், அம்ராவதி, நான்டட் மற்றும் ஜல்கவான் ஆகிய இடங்களிலும் அமைக்கப்படும்.
இப்பல்கலையின் தலைமை மையம், டாக்டர்.பாபாசாகேப் அம்பேத்கர் தொழில்நுட்ப கல்வி பல்கலையின் வளாகத்தில் அமையும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, மாநில பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தம் செய்யப்படும்.
இப்பல்கலை தொடர்பாக, அலுவலகங்கள் அமைக்கவும், வளாகங்களை வாடகைக்கு அமர்த்தவும், ரூ.15 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சிவில் கட்டுமானம் மற்றும் பார்மசி கல்வி நிறுவனங்களில் ஏற்கனவே கற்பிக்கப்படும் பாடங்களைத் தவிர, இப்பல்கலைக்கழகம், அனைத்துப் பாடங்களையும் உள்ளடக்கியிருக்கும்.
Tags
News