பயணங்கள் நமக்கு அளவில்லாத பாடங்களை கற்றுக்கொடுக்கிறது. மனிதனின் வாழ்க்கையில் இடப்பெயர்வானது பிறந்தது முதல் ஆரம்பித்துவிடுகிறது. மருத்துவமனை, வீடு, பள்ளிக்கூடம், பயிற்சி மையம், கல்லூரி, நிறுவனம் என ஒன்றிலிருந்து ஒன்றாக கிளை விட்டு வாழ்க்கை நகர்ந்துகொண்டே இருக்கிறது. நகர்தல் பெரும்பாலும் இறுதியில் நகரத்திற்கு அழைத்து வந்துவிடுகிறது.
ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாறும்பொழுது புதியவற்றை கற்றுக்கொள்கிறோம். புதிய நண்பர்களை கண்டுகொள்கிறோம். நடவடிக்கைகளில் மாற்றங்கள் ஏற்படுகிறது. ஒரு நாள் முழுவதற்குமான செயல்பாடுகளில் முந்தைய இடத்திற்கும், புதிய இடத்திற்கும் பெரிய வித்தியாசங்கள் ஏற்படுகிறது.
பள்ளி செல்லும் மாணவராக இருந்தால் புதிய நண்பர்களுடன் ஆட்டோவில், பேருந்தில் பயணிக்கும் வாய்ப்பும், புதிய நட்பும் உருவாகிறது. மனது புதியவற்றோடு, பழைய இடங்கள், அங்கிருந்த நண்பர்கள் ஆகியவற்றோடு ஒப்பிட்டு பார்க்கிறது. சில காலங்கள் முடிந்த பிறகு புதிய இடம் நம்மோடு நெருக்கமாகிவிடுகின்றது. பள்ளிக் காலத்தை பொறுத்த வரை 5 லிருந்து 6ஆம் வகுப்புக்கும், 10லிருந்து பதினோறாம் வகுப்பிற்கு மாணவர்கள் செல்லும்பொழுதும் "நண்பர்களை பிரிகிறோமே" என்ற வருத்தம் மாணவர்களிடையே அதிகமாகிறது.
வேறு வகுப்பிற்கு சென்ற பிறகு, மதிய உணவு இடைவேளையில் பழைய நண்பர்களோடு சாப்பிடும் நேரங்கள் மகிழ்ச்சியானவை. "என்னுடைய வகுப்பில், நமது பழைய வகுப்பைப் போன்று பழகுவதற்கு இனிமையானவர்கள் இல்லை" என நண்பர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வது பிரிந்த பொழுதுகளில் நடக்கும். கல்லூரியை நோக்கிய பயணம் நட்பின் எண்ணிக்கையை விரிவுபடுத்துகிறது.
பள்ளிக்காலம் ஒரு அடிப்படையை நமக்குள் உருவாக்கியிருக்கும். கல்லுரிக்காலம் வாழ்க்கைப் பயணத்திற்கான தெளிவை உண்டாக்குகிறது. எதிர்காலத்திற்கான முடிவுகளில் நண்பர்களின் பங்களிப்பு சிறிதளவாவது கலந்து இருக்கிறது. நண்பர்களிடமிருந்து நல்ல பழக்க வழக்கங்களையும், கெட்ட பழக்க வழக்கங்களும் ஒட்டிக்கொள்ளும் காலமும் இந்தக் காலம் தான். தன்னிடம் புதிதாக வந்திருக்கும் பழக்கம் நன்மைக்கானதா அல்லது தீமைக்கானதா என்று மனம் ஆராய்வதில்லை மாறாக "நண்பர்களோடு இருக்கிறோமே அதுவே மகிழ்ச்சி" என்றுதான் மனம் திருப்தி கொள்கிறது.
பணிபுரியும் காலத்திலும், அதன் பிறகான வாழ்க்கையிலும் படிக்கும்பொழுது உருவான நண்பர்கள் நல் ஆலோசகர்களாகவும், கவலைகளை பகிர்ந்துகொள்வதற்கான நல்ல வடிகாலாகவும், முகியமாக மகிழ்ச்சியையும், மனதில் இளமையையும் உருவாக்கும் முக்கிய மையமாகத் திகழ்கிறார்கள். நட்பிற்குள்ளாக ஏற்படும் சிறு சிறு சச்சரவுகள் பெரிதாக மாறாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பெரும் பொறுப்பு நண்பர்களுக்கு இருக்கிறது. நட்பின் பெயரால் வன்முறையையும், தவறான பாதையையும் தேர்ந்தெடுப்பது முன்னேற்றத்திற்கான தடைக்கல்.
நமது பெற்றோர் நம் மீதான நம்பிக்கையில் நமக்கு முடிவுகளை எடுப்பதற்கு உரிமை அளித்திருக்கிறார்கள். அதில் முக்கியமானது நண்பர்களைத் தேர்ந்துகொள்ளும் உரிமை. நட்பு தேவைகளை மையப்படுத்தி இல்லாமல் உணர்வுகளையும், நல்ல எண்ணங்களையும், நாட்டிற்கும் சமுதயத்திற்கும் நன்மை விளைவிக்கும் வகையில் இருக்க வேண்டும்.
Tags
Latest News