
வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை தொடர்ந்து, மத்திய அரசு ஊழியர்கள், பஞ்சப்படியை அடிப்படை ஊதியத்துடன் சேர்த்து வழங்க வேண்டும் உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்றும் நாளையும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இதில் நாடு முழுவதும் 12 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். இதுகுறித்து வருமானவரி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் வெங்கடேசன் கூறியதாவது:
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7வது ஊதியக்குழு அமைக்கப்படுமென்ற ஒரு அறிவிப்பை மத்திய நிதி அமைச்சர் வெளியிட்டார். மத்திய அரசு கேட்டுக் கொண்டபடி, கடந்த ஆண்டு அக்டோபர் 25ம் தேதி சம்பள வரையறை குறித்து ஊழியர் தரப்பும் அரசுக்கு இறுதி செய்து வழங்கியது. ஆனால் அரசு சம்பளக் குழுவில் உறுப்பினர்களை நியமிப்பது குறித்தோ, பஞ்சப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைப்பது குறித்தோ, இடைக்கால நிவாரணம் வழங்குவது குறித்தோ எந்த முடிவும் எடுக்கவில்லை.
எனவே, மத்திய அரசு ஊழியர் சம்மேளனத்தின் அகில இந்திய செயற்குழு கடந்த மாதம் டெல்லியில் கூடி பிப்ரவரி 12 மற்றும் 13ம் தேதிகளில் வேலை நிறுத்தம் செய்வதென்று முடிவெடுத்தது.அதன்படி, இன்றும், நாளையும் நாடு தழுவிய 2 நாள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுகிறது. அகில இந்திய அளவில் 105 சங்கங்களை சேர்ந்த 12 லட்சம் பேரும், தமிழக அளவில் 45 சங்கங்களை சேர்ந்த 2 லட்சம் பேரும், இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.
Tags
Latest News