மாணவரை போல், ஆசிரியர்களை நிற்க வைத்து தேர்வுத்துறை தண்டனை

சென்னை: பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் விபரங்களை சரிவர பூர்த்தி செய்யாத ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர்களை, நேற்று, இயக்குனரகத்திற்கு வரவழைத்து, நீண்ட நேரம் நிற்க வைத்து, தேர்வுத் துறை, தண்டனை அளித்தது.
"பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவியரின் முழுமையான விபரங்களை, ஒரு படிவத்தில் பூர்த்தி செய்து, அந்த விபரங்கள் சரியானவை; உண்மையானவை என, சம்பந்தபட்ட மாணவர், வகுப்பு ஆசிரியர், தலைமை ஆசிரியர் மற்றும் மாணவரின் பெற்றோர் ஆகிய, நான்கு பேரும் கையெழுத்திட வேண்டும்" என தேர்வுத்துறை உத்தரவிட்டு இருந்தது.
அதன்படி பூர்த்தி செய்த படிவங்கள் பெறப்பட்டன. இதில், திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில், பிளஸ் 2 படிவங்கள், சரியாக பூர்த்தி செய்யப்படவில்லை. மாணவர்களின் புகைப்படத்தை மாற்றி ஒட்டியது, பிறந்த தேதியை தவறாக பதிவு செய்தது உள்ளிட்ட பல தவறுகளை செய்ததாக கூறப்படுகிறது. இதனால், சம்பந்தபட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியர் ஆகிய இருவரையும், நேற்று, தேர்வுத்துறை இயக்குனர் சென்னைக்கு அழைத்தார்.
ஆசிரியர் அனைவரிடமும் எந்தவித விசாரணையும் நடத்தாமல், பல மணி நேரம் அப்படியே காத்திருக்க வைத்து, தேர்வுத்துறை நூதன தண்டனை வழங்கியதாக கூறப்படுகிறது. மாணவர் தவறு செய்தால், வகுப்பிற்கு வெளியே நிற்கவைத்து தண்டனை வழங்குவது ஆசிரியர்களின் வழக்கம். அதுபோல், ஆசிரியர்களையே மணிக்கணக்கில், இயக்குனரகத்தில் நிற்க வைத்து நூதன தண்டனை அளித்ததை நினைத்து, ஆசிரியர் அதிர்ச்சி அடைந்தனர்.
தமிழ்நாடு முதுகலை ஆசிரியர் சங்க பொதுச்செயலர், பாலகிருஷ்ணன் கூறுகையில், "தேர்வுத்துறையின் நடவடிக்கை, அதிர்ச்சி அளிக்கிறது. ஆசிரியர்களிடம், உரிய விசாரணையை நடத்தி, அனுப்பி இருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு, மாணவர்களைப் போல், நீண்டநேரம் நிற்கவைத்து, தண்டனை அளித்திருப்பது, மிகவும் கொடுமை. இதுபோன்ற போக்கை, தேர்வுத்துறை கைவிட வேண்டும்" என்றார்.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post