புதுடெல்லி : மத்திய அரசில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் தங்கள் குழந்தைகளின் படிப்பு, நோய் மற்றும் நலனுக்காக தொடர்ந்து 2 ஆண்டுகள் வரை விடுப்பு எடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கொல்கத்தாவைச் சேர்ந்த மத்திய அரசு பெண் ஊழியர் காக்காலி கோஸ். இவர் தன்னுடைய மகனின் அரசு பொதுத்தேர்வுக்காக 2 ஆண்டு விடுப்பு கேட்டு விண்ணப்பித்திருந்தார். ஆனால், தொடர்ந்து 2 ஆண்டுகள் விடுப்பு அளிக்க முடியாது என்று அவரது விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். குழந்தைகளின் நலனுக்காக மத்திய அரசு பெண் ஊழியர், 2 ஆண்டு விடுப்பு எடுக்கலாம் என்று தீர்ப்பாயம் உத்தரவிட்டது.ஆனால், தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து, அரசு தரப்பில் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், குழந்தைகள் நலன் விடுப்பின் (சிசிஎல்) கீழ் ஒரே நேரத்தில் 730 நாட்கள் விடுப்பு எடுக்க முடியாது என்று உத்தரவிட்டனர்.
இதனால் பாதிக்கப்பட்ட காக்காலி கோஸ், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிபதிகள் எஸ்.ஜே.முகோபாத்யாயா, வி.கோபால கவுடா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்து நேற்று வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:மத்திய அரசின் சுற்றறிக்கைகள் மற்றும் விதி எண் 43சியை ஆராய்ந்ததில், மத்திய அரசு பெண் ஊழியர்கள், 18 வயதுக்கு உட்பட்ட தங்கள் குழந்தைகளின் நலனுக்காக ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 730 நாட்கள் வரை விடுப்பு எடுக்கலாம். இது பெண் ஊழியரின் முழு பணிக்காலத்தில் 2 குழந்தைகளுக்காக பயன்படுத்திக் கொள்ளலாம். கைக்குழந்தையை பாதுகாப்பதற்கு மட்டுமின்றி, தங்கள் குழந்தைகளின் படிப்பு, நோய் உள்ளிட்ட காரணங்களுக்காகவும் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றத்தின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.இவ்வாறு நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்
Tags
Latest News
Great Facility for Government ladies Staff.Tamil Newspaper Today
ReplyDelete