காலை 6 மணிக்கு ஒத்திகை வாக்குபதிவு ஓட்டுபதிவுக்கு முந்தைய நாள் வாக்குசாவடிக்கு செல்லவேண்டும் தலைமை அலுவலர்களுக்கு உத்தரவு

              வாக்குபதிவுக்கு முந்தைய நாள் பகல் 12 மணிக்கே வாக்குசாவடிக்கு செல்ல வேண்டும் என்று வாக்குசாவடி தலைமை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் ஈடுபடும் வாக்குசாவடி தலைமை அலுவலர், வாக்குபதிவு அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம் நேற்று மாவட்டம்தோறும் நடந்தது. பயிற்சி கூட்டத்தில் அதிகாரிகள் கூறியதாவது:

* வாக்குசாவடி தலைமை அலுவலர்கள் தங்களுக்கு பணி வழங்கப்பட்டுள்ள வாக்குசாவடியின் அமைவிடம் மற்றும் வழித்தடம் குறித்து முன்கூட்டியே அறிந்துகொள்ள வேண்டும். வாக்குபதிவுக்கு முந்தையநாள் பகல் 12 மணிக்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குசாவடிக்கு சென்றடையும் வகையில் பயணத்தை திட்டமிட்டுக்கொள்ள வேண்டும். வாக்குசாவடியை சென்றடைந்த உடன் அங்குள்ள அடிப்படை வசதிகள் மற்றும் வாக்குபதிவு நடத்த தேவையான உபகரணங்கள் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். இதற்காக வாக்குசாவடி நிலை அலுவலர், கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர் ஆகியோரின் உதவியை கேட்டுப்பெற வேண்டும்.

* வாக்குபதிவுக்கு தேவையான தேர்தல் பொருட்களை மண்டல அலுவலர் ஒப்படைக்கும்போது பட்டியலின்படி வாக்குபதிவு இயந்திரங்கள், குறிப்பிடப்பட்ட வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட அனைத்து தேர்தல் பொருட்களும் தனது வாக்குசாவடிக்கு உரியதுதானா என்பதை சரிபார்த்து பெற்றுக்கொண்டு அதற்கு ஒப்புகை ரசீது வழங்க வேண்டும்.

* வாக்குபதிவு அலுவலர்கள், போலீசார் அனைவரும் வந்துள்ளனரா என்பதை உறுதி செய்து, வரவில்லை எனில் மண்டல அலுவலருக்கு தகவல் தெரிவித்து அவர்கள் வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்குசாவடியில் போதுமான இட வசதி, வாக்காளர்கள் உள்ளே நுழையவும், வெளியேறவும் தனித்தனி வழிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். 

* வாக்குசாவடிக்குள் எந்த ஒரு அரசியல் தலைவரின் படம் இருந்தாலும் அதனை நீக்கிவிட வேண்டும் அல்லது அதனை முழுமையாக மூடிவிட வேண்டும். வாக்குசாவடிக்கு வெளியே வாக்குசாவடியின் பரப்பு, வாக்காளர் விபரம், வேட்பாளர் விபர பட்டியலை ஒட்டி வைக்க வேண்டும். 

* வாக்குசாவடியின் 100 மீட்டர் சுற்றளவுக்குள் எந்தவிதமான அரசியல் விளம்பரங்களோ, 200 மீட்டர் சுற்றளவுக்குள் பந்தல்களோ அமைக்கப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். வாக்குபதிவு தொடங்கும் 1 மணி நேரத்திற்கு முன்னதாக காலை 6 மணிக்கு ஒத்திகை வாக்குபதிவு நடத்த வேண்டும். ஒத்திகை வாக்குபதிவின்போது வாக்குசாவடி அலுவலர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும். முகவர்கள் வரவில்லை எனில் 15 நிமிடம் காத்திருந்து பின்னர் ஒத்திகை வாக்குபதிவு நடத்த வேண்டும். காலை 7 மணிக்கு வாக்குபதிவு தொடங்க வேண்டும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post