சென்னை: தங்கள் பிள்ளைகளை வேறு பள்ளிகளில், சேர்க்க விரும்பும் பெற்றோரிடம், அடுத்த ஆண்டு கல்வி கட்டணம் முழுவதையும் செலுத்த வலியுறுத்தி, தனியார் பள்ளிகள் நெருக்கடி தருகின்றன.
தங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளியில், கல்வித் தரம் சரியில்லை என கருதும் பெற்றோர், வேறு பள்ளியில் சேர்ப்பதற்கு முயற்சிக்கின்றனர். இதற்கான முயற்சிகள், கல்வியாண்டு துவங்கும் முன் மேற்கொள்ளப்படுகிறது.
வரும் கல்வியாண்டில், வேறு பள்ளிகளில் சேர்க்க முடிவு செய்துள்ள பெற்றோர், தற்போது படிக்கும் பள்ளிகளிலிருந்து, டி.சி., எனப்படும் இடமாறுதல் சான்றிதழ் வாங்க முயற்சித்து வருகின்றனர்.
"திடீரென டி.சி., வேண்டுமென்றால், அடுத்த ஆண்டின் கல்வி கட்டணத்தை செலுத்த வேண்டும்" என தனியார் பள்ளிகள், பெற்றோர்களை நிர்பந்திக்கின்றன. ஓர் ஆண்டிற்கான முழு கட்டணத்தையோ அல்லது 50 சதவீத கட்டணத்தையோ செலுத்துமாறு, பள்ளி நிர்வாகங்கள், பெற்றோர்களுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றன. குறிப்பாக 10ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ள மாணவர்களின் பெற்றோர், பிளஸ் 1 படிக்க, வேறு பள்ளிகளில், தங்கள் குழந்தைகளை சேர்க்க விரும்புகின்றனர்.
"மே 23ல், 10ம் வகுப்பு தேர்வு முடிவு வந்த பிறகே சீட் கொடுப்பது குறித்து முடிவு செய்ய முடியும்" என, புதிதாக மாணவர்களை சேர்க்க உள்ள பள்ளிகள் கூறுகின்றன. ஆனால், "மே முதல் வாரத்திற்குள், பிளஸ் 1 கட்டணம் செலுத்த வேண்டும்" என மாணவர்கள் படித்த பழைய பள்ளிகள் நெருக்கடி தருகின்றன. இதனால், பெற்றோர், பெரும் தவிப்பிற்கு ஆளாகி வருகின்றனர்.
கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: &'டி.சி., வாங்கும்போது, கண்டிப்பாக அடுத்த ஆண்டு கல்வி கட்டணம் வசூலிக்கக் கூடாது. அதை மீறும் பள்ளிகள் குறித்து, கல்வித் துறையிடம் பெற்றோர் புகார் அளிக்கலாம்.
வேறு பள்ளிக்கு மாற விரும்பும் மாணவர்களை, சம்பந்தப்பட்ட பள்ளிகள் எவ்வித கெடுபிடிகளும் இல்லாமல் அனுப்பி வைக்க வேண்டும்; கூடுதல் கட்டணம் எதையும் கேட்கக் கூடாது. அவ்வாறு எந்த பள்ளிகளாவது கேட்டால், கல்வித்துறைக்கு, பெற்றோர் தகவல் தெரிவிக்க வேண்டும். அந்த பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Tags
kalvi news