மக்களவை தேர்தலில் அசம்பாவிதங்களை தடுக்க வாக்குச்சாவடிகளில் செல்போன் பயன்படுத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. ஆனால், வாக்குசாவடிகளில் உள்ள தேர்தல் அதிகாரி மட்டும் செல்போனில் எஸ்எம்எஸ் மூலம் தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்க பயன்படுத்தலாம் என்று தேர்தல் விதிமுறையில் குறிப்பிட்டுள்ளது.
மக்களவை தேர்தல் 2014க்கான தேர்தல் விதிமுறையில், ‘‘வாக்குச்சாவடிகளில் செல்போன் பயன்படுத்துவது தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால், வாக்குச்சாவடிகளில் உள்ள தேர்தல் பொறுப்பு அதிகாரி அல்லது முதன்மை அதிகாரி மட்டும் செல்போனில் எஸ்எம்எஸ் மூலம் அங்கு நடக்கும் நடவடிக்கைகள் குறித்து தலைமை தேர்தல் ஆணையத்துக்கு தகவல் கொடுக்க வேண்டும்.
மேலும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி ஏற்கனவே அதிக மற்றும் மிக அதிக பதற்றமுள்ளதாக கண்டறியப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் வீடியோ பதிவு செய்ய தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. இருந்தாலும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் திடீரென ஏற்படும் சம்பவங்கள் மற்றும் அசம்பாவிதங்களை பதிவு செய்ய வீடியோ பதிவு செய்ய தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாக்குச்சாவடிகளில் இதுபோன்ற வீடியோ பதிவு செய்யும்போது, வாக்காளர்கள் யாருக்கு வாக்களிக்கிறார்கள் என்பதை பதிவு செய்ய அனுமதி இல்லை. செய்தியாளர்கள், அனுமதி இல்லாத வீடியோ பதிவாளர்கள், புகைப்பட கலைஞர்கள் உள்ளிட்டோர் வாக்குச்சாவடிக்குள் செல்ல அனுமதி கிடையாது. ஆனால், வாக்குச்சாவடிகளுக்கு வெளியே இருந்து வாக்காளர்களை போட்டோ மற்றும் வீடியோ பதிவு செய்ய செய்தியாளர்களுக்கு அனுமதி உண்டு. எக்காரணத்தை கொண்டும் அவர்கள் வாக்குச்சாவடிக்கு உள்ளே செல்ல அனுமதி இல்லை. இது மட்டும் அல்லாது மாநில அரசின் முக்கிய அதிகாரிகள், தேர்தல் ஆணையத்தின் உரிய அனுமதி சீட்டு எடுத்து வந்தால் மட்டுமே வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
Tags
Latest News