தபால் ஓட்டு நடைமுறை விதிகளால் அதிருப்தி : ஓட்டு வீணாகும் பரிதாபம்

           தபால் ஓட்டுக்காக வழங்கப்படும், படிவம் - 12ல், வாக்காளர் அடையாள எண் மற்றும் இதர விவரங்கள் சேகரிக்க வேண்டிய கட்டாயம் உள்ளதால், ஒட்டு மொத்த போலீசாரும், தபால் ஓட்டு போட முடியாமல் போவதாக புலம்புகின்றனர். தமிழகத்தில் வரும், 24ம் தேதி நடக்கும், லோக்சபா தேர்தலில், 100 சதவீத ஓட்டு பதிவாக, பல்வேறு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

           குறுகிய நாட்களே...: பதற்றமான ஓட்டுச்சாவடிகளில், 100 சதவீதம், ஓட்டுப்பதிவு நடக்க, 1.01 லட்சம் போலீசார், தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர். தேர்தலுக்கு இன்னும், குறுகிய நாட்களே உள்ளதால், தலைவர்கள் பாதுகாப்பு, முக்கிய பிரமுகர் பாதுகாப்பு, இரவு ரோந்து, பிரசார சுற்றுப்பயண பாதுகாப்பு, பொதுக்கூட்டம், மாநாடு, கோவில் திருவிழா மற்றும் வழக்கமான பணிகளில், உள்ளூர் போலீசார் தவித்து வருகின்றனர். இதனால், இவர்கள் ஓட்டளிக்க வசதியாக, தபால் ஓட்டு முறை அமலில் உள்ளது. தபால் ஓட்டு அளிக்க விரும்பும் போலீசாருக்கு, அந்தந்த மாவட்ட தேர்தல் பிரிவு மூலம், படிவம் - 12 வழங்கப்படுகிறது. அந்த விண்ணப்பத்தில், "தொகுதி, வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வரிசை எண், பிரிவு எண், வாக்காளர் அடையாள எண், ஓட்டுச் சீட்டை அனுப்ப வேண்டிய முகவரி' போன்றவற்றை குறிப்பிட வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை, சம்பந்தப்பட்ட லோக்சபா தொகுதியின், தேர்தல் நடத்தை அலுவலருக்கு அனுப்ப வேண்டும். அந்த அதிகாரியின் பரிசீலனை படி, ஓட்டளிக்க விரும்பும் போலீசாருக்கு, தபால் மூலம் அவர்களின் முகவரிக்கு, ஓட்டுச் சீட்டை அனுப்பி வைப்பர். சமீபகாலமாக, 1961 தேர்தல் விதிப்படி, படிவம் - 12ல் கேட்கப்பட்டுள்ள விவரங்களை, போலீசாரால் சேகரிக்க முடியாமலும், இருவரிடம் சான்றிதழ் பெற முடியாமலும், ஓட்டளிக்கும் தகுதியை இழக்கின்றனர்.
           போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: எந்த தேர்தல் வந்தாலும், கட்சியினர் பிரசாரத்தில் துவங்கி, ஓட்டுப்பதிவு இயந்திரத்தை, தொகுதி வாரியாக, ஓட்டுப்பதிவு மையங்களில் வைத்து, திருப்பி எடுத்து வருவது வரை, அனைத்து பணியும் போலீசாருக்கு உள்ளது. ஓட்டுப்பதிவின் போது, வருவாய்த் துறை அதிகாரிகளை போலவே, ஓட்டுப்பதிவு சதவீதத்தை கண்காணித்து, தலைமை அலுவலகத்துக்கு தெரிவிக்க வேண்டும்.
      எட்டாக்கனி தவிர, ஓட்டுப்பதிவுக்கு முன்னும், பின்னும், பணம் பட்டுவாடா, கட்சி சார்பாக ஓட்டுப்பதிவுக்கு தடை செய்வோர் ஆகியவற்றை கண்காணிக்க வேண்டும். இவ்வளவு பணிகளுக்கு இடையே, தபால் ஓட்டு என்பது, போலீசாருக்கு எட்டாக்கனியாக உள்ளது. தேர்தல் நடத்தை அலுவலருக்கு, விண்ணப்பிக்கும் முறையில் கேட்கப்பட்டுள்ள, தொகுதி பெயரை கூட எளிதாக குறிப்பிட்டு விடலாம். வாக்காளர் பட்டியல் எண் மற்றும் தேவையற்ற விவரங்களை, பல்வேறு பணிகளுக்கு இடையே சேகரிக்க முடிவதில்லை. இதனால், சட்டசபை தேர்தல், லோக்சபா தேர்தல் என, பல தேர்தல்களில் ஓட்டளிக்க முடியாமல் கடந்து வந்துள்ளோம். தேர்தலில், போலீசார் மற்றும் பல அரசு அதிகாரிகள் ஓட்டு, 
வீணாகிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post