திட்டக் குழு விரைவில் கலைப்பு: சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி உரை


மத்தியத் திட்டக் குழு விரைவில் கலைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அதற்குப் பதிலாக புதிய அமைப்பு ஒன்று உருவாக்கப்படும் என்றும் அவர் கூறினார்.


நாட்டின் 68-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, தில்லி செங்கோட்டையில் வெள்ளிக்கிழமை ஆற்றிய தனது முதலாவது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி இவ்வாறு தெரிவித்தார்.

                                                                    



தில்லி செங்கோட்டையில் 68-ஆவது சுதந்திர தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, முப்படையினர், தில்லி காவல் துறையினரின் அணிவகுப்பைப் பார்வையிட்ட பிறகு தேசிய மூவர்ணக் கொடியை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றினார்.

பின்னர், அவர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய சுதந்திர தின உரையில், தொலைநோக்குப் பார்வையுடன் இந்தியா செயல்படும் விதம், இளைஞர்களின் நோக்கம், பெண்கள் பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி, வறுமை ஒழிப்பு, ஏழைகள் மேம்பாடு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை விளக்கிக் கூறினார்.

செங்கோட்டையில் வழக்கமாக சுதந்திர தின உரையாற்றும் பிரதமர், குண்டு துளைக்காத கண்ணாடிக் கூண்டு மேடையில் இருந்தபடி பேசுவார். அதேபோல, ஏற்கெனவே எழுதப்பட்ட சுதந்திர தின உரையை வாசிக்கும் நடைமுறை இருந்தது. இவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், "குண்டு துளைக்காத மேடை தேவையில்லை' என்று முன்பே பாதுகாப்புப் படையினருக்கு உத்தரவிட்ட நரேந்திர மோடி, எழுதப்பட்ட உரையை வாசிக்காமல், சில குறிப்புகளை மட்டும் வைத்துக் கொண்டு மனதில் பட்டதை சரளமாகப் பேசினார். மொத்தம் 85 நிமிடங்கள் அவர் பேசினார். அவரது

உரையில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள் வருமாறு:

பிரதம சேவகன்:  நான் இந்த மேடையில் நாட்டின் பிரதம அமைச்சராகப் பேசவில்லை. பிரதம சேவகனாகப் பேசுகிறேன். இந்த நாட்டின் வளர்ச்சிக்காக எனக்கு முன்பு பிரதமராக இருந்தவர்களும் தலைவர்களும் பல நன்மைகளைச் செய்துள்ளனர். அவர்களை இந்த நாளில் நினைவுகூர்ந்து, நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு மேலும் கொண்டு சென்று புதிய இந்தியாவைப் படைப்போம்.
 கடந்த வியாழக்கிழமையுடன் நடந்து முடிந்த நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் பெரும்பான்மை பலத்தை நம்பியிராமல் ஒருமித்த கருத்து அடிப்படையில் செயல்பட வேண்டும் என்ற அரசின் சிந்தனை, செயல் ஆகியவை எதிரொலித்தன. எதிர்க்கட்சிகள், அவற்றைச் சார்ந்த எம்.பி.க்கள் ஆகியோரின் ஒத்துழைப்பால்தான் நம்மால் முக்கிய சட்டங்களை நிறைவேற்றி, வெற்றிகரமாக முதல் பட்ஜெட் கூட்டத்தொடரை நிறைவு செய்ய முடிந்தது.

மத்தியத் திட்டக் குழு தேவையில்லை: 1950-களில் மத்தியத் திட்டக் குழு உருவாக்கப்பட்டது. அப்போது அத்தகைய அமைப்புக்கு ஓர் அவசியம் இருந்தது. அதன்பிறகு, நம் நாட்டிலும், உலக அளவிலும் ஏராளமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. எனவே, இனி நமக்கு மத்தியத் திட்டக் குழுவே தேவையில்லை. அதற்குப் பதிலாக புதிய அமைப்பு உருவாக்கப்படும்.
புதிய சிந்தனை, யோசனை, நம்பிக்கை ஆகியவற்றை உறுதிப்படுத்தும் அமைப்பாக அது திகழும். பொருளாதாரச் செயல்பாட்டை மட்டும் வைத்துக் கொண்டு ஓர்  அரசின் வளர்ச்சியும், நாடும் கிடையாது. கூட்டாட்சித் தத்துவத்தை வலியுறுத்தும் நம் நாட்டை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்வதில் மாநில அரசுகளின் பங்களிப்பு மிகவும் அவசியம். மத்திய, மாநில அரசுகள் குழுவாகச் செயல்பட வேண்டும்.

வன்முறை வேண்டாம்: நம் நாட்டின் வளர்ச்சிக்கு வகுப்புவாதமும், சாதியவாதமும் மிகுந்த தடையாக உள்ளன. இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் இதை நாம் சகித்துக் கொள்ள வேண்டும்? இதனால் யாருக்குப் பலன் கிடைக்கிறது? நாம் அடுத்த 10 ஆண்டுகளுக்காவது வன்முறையைப் புறக்கணித்து விட்டு அமைதி, ஒற்றுமை, நல்லிணக்கம் ஆகியவற்றைப் பேணி வாழ வேண்டும். வன்முறையை விட்டு விட்டு, சகோதரத்துவத்துடன் நாம் பழக முனைந்தால், நம் நாடு நிச்சயம் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும்.

அரசு ஊழியர்களுக்கு கண்டிப்பு: தில்லிக்கு வெளியே, குஜராத்தில் இருந்து நான் வந்தவன். ஆனாலும், இங்கு ஆட்சிக்கு வந்த இரண்டு மாதங்களில் இங்குள்ள அரசுத் துறைகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை அனுமானித்துள்ளேன். ஒவ்வொரு துறையும் ஒருங்கிணைப்பு இல்லாமல் போட்டி மனப்பான்மையுடன் செயல்படுகின்றன. ஒவ்வொரு துறைக்குள்ளும் ஒரு டஜன் துறைகள் செயல்படுவது போல உணர்கிறேன். தங்கள் சொந்த விருப்பு, வெறுப்புக்காக அரசுப் பணியை அவர்கள் பயன்படுத்துகின்றனர். இந்த மோதல்கள் உச்ச நீதிமன்றம் வரை சென்றுள்ளன.

ஓர் அரசு ஊழியர் சொந்த ஆதாயத்துக்காக கோடிக்கணக்கான ஏழைகளுக்குக் கிடைக்கும் நன்மைக்குத் தடையை ஏற்படுத்தக் கூடாது என்றார் பிரதமர் மோடி.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post