தலைமை ஆசிரியர்களுக்கு தனி ஊதியம் பிடித்தம் செய்ய பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவு.



தலைமை ஆசிரியர்களுக்கு அரசாணைகளுக்கு புறம்பாக 2006ம் ஆண்டு முதல் வழங்கப்பட்ட தனி ஊதியத்தை ஒரே தவணையில் பிடித்தம் செய்து அரசு கணக்கில் சேர்க்க பள்ளி கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார். 
அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் ரூ.500 மற்றும் ரூ.600 தனி ஊதியம் பெற்று வந்தனர். இவர்களில் 1.1.2006க்கு முன் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பெற்றால் அடிப்படைஊதியத்துடன் இந்த தனி ஊதியமும் சேர்க்கப்பட்டு, உரிய தர ஊதியமும் அனுமதிக்கப்பட்டு சம்பளம் நிர்ணயம் செய்ய அரசு உத்தரவிட்டிருந்தது. திருத்திய ஊதிய குழுவின்கீழ் ஊதியம் கணக்கிடப்பட்ட தேதி அல்லது 1.6.2009 தேதிக்கு பிறகு தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பெற்ற எவருக்கும் ரூ.500 அல்லது ரூ.600 தனி ஊதியம் வழங்கப்படக்கூடாது. ஆனால் பெரும்பாலான மாவட்டங்களில் முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் அரசாணைகளை தவறாக புரிந்துகொண்டு 1.6.2009க்கு பிறகு அல்லது திருத்திய ஊதிய குழுவின் கீழ் ஊதிய நிர்ணயம் செய்த பிறகு தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பெற்றால் அடிப்படை ஊதியத்துடன் தனி ஊதியம் அனுமதித்து ஆணையிடுகின்றனர். அதிகாரிகள் நடத்திய தணிக்கையில் இந்த விபரங்கள் தெரியவந்துள்ள நிலையில் தலைமை ஆசிரியர்களிடம் இருந்து அவ்வாறுவழங்கப்பட்ட தனி ஊதியத்தை பிடித்தம் செய்ய பள்ளி கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.இதுதொடர்பான உத்தரவில் அவர் கூறியிருப்பதாவது:அரசாணைகளுக்கு புறம்பாக தலைமை ஆசிரியர்களுக்கு தனி ஊதியம் அனுமதிக்கப்படுவது மாநில கணக்காயரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. திருத்திய ஊதிய குழுவின்படி அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் தனி ஊதியம் பெற அனுமதி இல்லை என்று அரசு தெரிவித்துள்ளது.

எனவே உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியராக 1.1.2006க்கு பின்னர் பதவி உயர்வு பெற்று திருத்திய ஊதியக்குழுவின் கீழ் ஊதிய நிர்ணயம் செய்யப்பட்ட பின்னர் தனி ஊதியம் அனுமதிக்க கூடாது.எனவே அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களும் தங்கள் அதிகாரத்தில் உள்ள அனைத்து தலைமை ஆசிரியர்களின் பணி பதிவேட்டை சரிபார்க்க வேண்டும். தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வின்போது தனி ஊதியம் 1.1.2006க்கு பிறகு அல்லது திருத்திய ஊதியக்குழுவிற்கு வரவிருப்பம் அளித்த தேதிக்கு பின்னர் சேர்க்கப்பட்டிருந்தால், ஊதிய மறுநிர்ணயம் செய்ய வேண்டும். கூடுதலாக பெற்ற தொகையை ஒரே தவணையில் பிடித்தம் செய்து அரசு கணக்கில் சேர்க்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post