வாய்ப்புண் வந்து விட்டால் 2, 3 நாட்களுக்கு கடுமையான அவஸ்தைதான். சாப்பிடும் போதும், பேசும்போது வலி ஏற்பட்டு பாடாய்படுத்தி விடும். தட்ப வெப்பம் மற்றும் உடலின் தன்மைக்கு ஏற்ற உணவுகள் சாப்பிடுவது, உணவில் போதுமான சத்துகள் இருக்கும்படி பார்த்துக் கொள்வது, நோயின் அறிகுறி தென்பட்டவுடன் டாக்டரை அணுகுவது என இந்த மூன்று விஷயங்களில் கவனம் செலுத்தினால் வாய்ப்புண் அவஸ்தையில் இருந்து விடுதலை பெறலாம் என்கிறார் டாக்டர் ராஜ்குமார்.
நாம் உண்ணும் உணவை பக்குவமாக உமிழ் நீர் சேர்த்து அரைத்து வயிற்றுக்கு அனுப்பும் முக்கிய வேலையை செய்கிறது வாய். வாயில் புண் ஏற்பட்டால் இந்த வேலையை முழுமையாக செய்ய முடியாது. பல தொந்தரவுகளை உருவாக்கும். புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு வாயில் ஸ்மோக்கர்ஸ் அல்சர் உருவாகும். மன அழுத்தத்தினால்கூட வாய்ப்புண் வரலாம். ஏனெனில் டென்ஷன் காரணமாக வாயில் இருக்கும் ‘மியூகோஸாÕ என்ற மேல்புற தோலில் வெடிப்பு ஏற்பட்டு புண் உருவாகிறது.
வாய்ப்புண் ஏற்பட இன்னொரு காரணமும் உள்ளது. வயிற்றில் உணவுக் குழாய்க்கும் இரைப்பைக்கும் இடையில் உள்ள வால்வு, வாயில் இருந்து செல்லும் உணவை வயிற்றுக்குள் அனுப்பும் ஒரு வழிப்பாதை ஆகும். இது சிலருக்கு ஒழுங்காக செயல்படாமல் தொளதொளவென்று இருக்கும்.
இதனால் இரைப்பையில் உள்ள அமிலத்தை மேல்நோக்கிப் போக விட்டு விடும். இரைப்பை அமிலத்தை தாங்கும் சக்தி உணவுக் குழாய்க்கு கிடையாது. இந்த அமில பாதிப்பின் காரணமாகத் தான் சிலருக்கு நெஞ்சு எரிச்சல் ஏற்படுகிறது. இந்த அமிலம் தொண்டை வரைக்கும் வரும் பட்சத்தில் தொண்டை மற்றும் வாயில் புண்கள் ஏற்படலாம். இது போன்ற சமயங்களில் அமிலம் அதிகமாக சுரக்கிறதா என்பதை கண்டறிய வேண்டும். அமிலத்தை கட்டுப்படுத்தி, சிகிச்சை மூலம் வால்வையும் சரி செய்ய வேண்டும். அமிலத்தை ஹிஸ்டமின் என்ற வேதிப்பொருள் சுரக்க செய்கிறது. இதன் செயல்பாட்டைக் கண்காணித்து மாத்திரைகள் மூலம் கட்டுப்படுத்த முடியும். இதன் மூலம் அதிகமாக அமிலம் சுரப்பதை கட்டுப்படுத்த முடியும். அமிலம் சுரக்கும் பணியில் இன்னொரு வேதிப்பொருளும் ஈடுபடுகின்றது. புரோட்டான் பம்ப் எனப்படும் அந்த வேதிப்பொருளையும் மாத்திரையால் கட்டுப்படுத்தலாம். நாள்பட்ட வாய்ப்புண் புற்றுநோயாக மாற வாய்ப்புள்ளது. எனவே வாய்ப்புண்ணுக்கான சரியான காரணத்தை கண்டறிந்து உடனடியாக சிகிச்சை எடுக்க வேண்டியது அவசியம் என்கிறார் ராஜ்குமார்.
பாதுகாப்பு முறை:
பற்களில் உள்ள கூர்மை காரணமாக வாயில் புண் ஏற்படுபவர்கள் முதலில் பல்லை கவனிக்க வேண்டும். புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் வாயில் ஏற்படும் அல்சரை தவிர்க்க புகைப்பதை கைவிடலாம். வெற்றிலை போடும் பழக்கம் உள்ளவர்கள் பயன்படுத்தும் புகையிலையாலும் வாயில் அல்சர் உருவாகும். புகையிலையை அப்படியே வாயில் அதக்கிக் கொள்ளும் பழக்கம் உள்ளவர்களுக்கும் வாய்ப்புண் பிரச்னை வரலாம். அடிக்கடி டென்ஷன் மற்றும் மன அழுத்தத்துக்கு ஆளாகும் நபர்கள் மனநல மருத்துவரை அணுகி சிகிச்சை பெறலாம். டென்ஷனுக்கான காரணத்தை கண்டறிந்து தவிர்க்கலாம். அமிலம் சுரப்பதால் ஏற்படும் பிரச்னை எனில் மருத்துவரின் அறிவுரைப்படி சிகிச்சை பெறுவது அவசியம்.
வாய்ப்புண் என்பது வயது வித்தியாசம் இல்லாமல் எல்லாருக்கும் வருகிறது. வாயில் புண் ஏற்பட்டிருந்தால் காரம் அதிகம் வேண்டாம். குளிர்ச்சியான உணவு அதிகம் எடுத்துக் கொள்ளலாம். வெள்ளரி, தர்பூசணி, இளநீர் ஆகியவற்றை அடிக்கடி எடுத்துக் கொள்வதன் மூலம் வாய்ப்புண் வருவதை தடுக்கலாம். அடிக்கடி வாய்ப்புண் ஏற்படும் பிரச்னை உள்ளவர்கள் தினமும் ஒரு கீரை உணவில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளலாம். மணத்தக்காளி, வெந்தயக்கீரை, பாலாக்கீரை ஆகியவை உடலுக்கு குளிர்ச்சி அளிக்கும். விரைவில் ஜீரணம் ஆகும் வகையில் நன்கு வேக வைத்த உணவுகளை உண்ணலாம். காரம், மசாலா, புளி அதிகம் சேர்த்த உணவுகள் மற்றும் அசைவ உணவுகளை கட்டாயம் தவிர்க்கவும். உப்பு அதிகளவில் சேர்க்கப்பட்ட வத்தல், வடகம் மற்றும் ஊறுகாய் வகைகளையும் குறைத்துக் கொள்ளவும். எண்ணெயில் பொரித்த உணவு வகைகளையும் கட்டாயம் தவிர்க்கவும். தற்போது வெயில் காலமாக இருப்பதால் இரண்டு லிட்டர் முதல் 5 லிட்டர் வரை தினமும் தண்ணீர் குடிக்க வேண்டும் என்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா.
பாட்டி வைத்தியம்
அகத்திக் கீரை மற்றும் மணத்தக்காளிக் கீரை இரண்டையும் அடிக்கடி சமைத்து சாப்பிட்டால் இரண்டு நாட்களில் வாய்ப்புண் குணமாகும்.
அகத்திக் கீரையுடன் சின்ன வெங்காயம் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும்.
அல்லிக் கொடியை தேங்காய் எண்ணெய்யில் போட்டுக் காய்ச்சி தைலம் தயாரித்து தலையில் தினமும் தேய்த்து வந்தால் உடல் சூடு குறையும்.
உகாமர இலை, வெள்ளரி விதை தலா 100 கிராம் எடுத்து, பொடி செய்து தினமும் காலை, மாலை இரண்டு நேரமும் ஐந்து கிராம் அளவுக்கு சாப்பிட்டால் உடல் குளிர்ச்சி அடையும்.
கரிசலாங்கண்ணிக் கீரை சாற்றில் 30 மில்லி நல்லெண்ணெய் கலந்து வாய் கொப்பளித்தால் குணமாகும்.
கல்யாண முருங்கைக் கீரையுடன் ஊற வைத்த வெந்தயம் ஒரு ஸ்பூன் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் உடல் குளிர்ச்சி அடையும்.
கிராம்பை நெருப்பில் சுட்டு அதை வாயில்போட்டு மென்றால் தொண்டைப் புண் ஆறும்.
குப்பைக் கீரையுடன் பருப்பு சேர்த்து கடைந்து சாப்பிட்டால் உடல் சூடு தணியும்.
குப்பைக் கீரையுடன் ஓமம், மஞ்சள் சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் நெஞ்சு எரிச்சல் குணமாகும்.
கொய்யாப் பூவை கஷாயம் காய்ச்சி வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் குணமாகும்.
சீரகம், சுக்கு, ஏலம், நெல்லி முள்ளி மூன்றையும் சம அளவில் எடுத்து பொடி செய்து அதன் மொத்த எடைக்கு சர்க்கரையைப் பொடி செய்து சேர்த்து தினமும் காலை உணவுக்குப் பின்னர் அரை ஸ்பூன் அளவுக்கு சாப்பிட்டால் உடல் சூட்டால் ஏற்படும் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.
Tags
GK