பட்டதாரி ஆசிரியர் நியமன கலந்தாய்வில் நீதிமன்ற தடையால் பணி நியமன உத்தரவு வழங்கப்படவில்லை. தொலைதூர இடங்களே காட்டப்பட்ட தால் கைக்குழந்தைகளுடன் வந்திருந்த ஆசிரியைகள் இடங்களை தேர்வு செய்ய முடியாமல் திணறினர்.
தமிழக பள்ளிகளில் காலியாக உள்ள இடங்களுக்கு டிஇடி தேர்வில் தேர்ச்சி பெற்று தகுதி வாய்ந்த ஆசிரியர்களை நியமிக்க கடந்த ஒருவாரமாக ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. முதுநிலை, இடைநிலை ஆசிரியர்கள் கலந்தாய்வு முடிந்து விட்டது. இடைநிலை ஆசிரியர் பணிக்கு நெல்லை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஒரு இடம் கூட இல்லை என அறிவித்து கலந்தாய்வு நடந்தது.
இது போல் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு நெல்லை, தூத்துக்குடி, குமரி, மதுரை, சென்னை ஆகிய 5 மாவட்டங்களில் காலி இடங்கள் இல்லை என அறிவிக்கப்பட்டது. இதனால் 5 மாவட்டங்களிலும் நேற்று முன்தினம் உள்மாவட்ட கலந்தாய்வு நடைபெறவில்லை.
இதையடுத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கு நேற்று வெளி மாவட்ட காலி பணியிடங்களுக்கான கலந்தாய்வு அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட் டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் சராசரியாக 400 முதல் 600 ஆசிரியர்கள் வரை பாடவாரியாக பங்கேற்றனர். இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் ஆவர். பலர் கைக்குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் வந்திருந்தனர். இவர்களில் சிலர் கலந்தாய்வு நடந்த வளாகத்தில் பிள்ளைகளை தொட்டில்கட்டி தூங்க வைத்தனர்.
நெல்லை சாப்டர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த கலந்தாய்வில் 448 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
பாட வாரியாக சீனியாரிட்டிபடி தனித்தனியாக காலியிடங்கள் காட்டப்பட்டன. இது தொடர்பான பட்டி யல் நோட்டீஸ் போர்டில் ஒட்டப்பட்டது. இதை பார்த்த ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். காரணம், விழுப்புரம், சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை போன்ற தொலைவில் உள்ள வட மாவட்டங்களிலேயே அதிக காலியிடங்கள் இருந் தன. அந்த மாவட்டங்களில் சிறிய நகரம் அல்லது கிராமங்களில் பள்ளிகள் இருந்தன.
அந்தப்பகுதியை கண்டுபிடிக்க தமிழ்நாடு வரைபடத்தின் உதவியுடன் ஆசிரியர்கள் முயற்சி செய்தனர். திக்குத்தெரியாத தொலைவிலேயே பணி யிடம் இருப்பதை அறிந்து எந்த இடத்தை தேர்வு செய்வது என தெரியாமல் ஆசிரிய ஆசிரியைகள் திகைப்படைந்தனர். இதனால் ஒவ்வொருவருக் கும் கலந்தாய்வு முடிய அதிக நேரம் பிடித்தது.
நேற்று முடியாத பணியிடங்களுக்கான கலந்தாய்வு இன்றும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கலந்தாய்வையொட்டி சாப்டர் பள்ளி வளாகத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது. பணி நிய மனம் வழங்க மதுரை உயர்நீதிமன்றம் தடையாணை பிறப்பித்துள்ளதால் இடங்களை தேர்வு செய்தவர்களிடம் அவர்களது பணியிடத்தை உறுதி செய்து கையொப்பம் பெற்று அனுப்பினர். பணி நியமன உத்தரவு பின்னர் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதனால் உடனே பணியில் சேரலாம் என்ற நம்பிக்கையுடன் வந்த ஆசிரியர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர்.
Tags
TET News