ஆசிரியர் தகுதி தேர்வில் பின்பற்றப்படும் வெயிட்டேஜ் முறை, இடஒதுக்கீடு பிரிவினருக்கு 5 சதவீதம் மதிப்பெண் சலுகை வழங்கும் முறை ஆகியவற்றை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்குகளை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
சலுகை மதிப்பெண்
மத்திய அரசு கொண்டு வந்த கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் அடிப்படையில் ஆசிரியர் பணிக்கு தகுதி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் தமிழக அரசு இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் ஆகியோருக்கு தகுதி தேர்வுகளை நடத்துகிறது. இந்த தகுதித்தேர்வில் 60 சதவீதம் (150-க்கு 90 மதிப்பெண்கள்) எடுத்தால் தேர்ச்சி என்று தமிழக அரசு நிர்ணயம் செய்து தேர்வுகளை நடத்தி வந்தது.
இதற்கிடையில், இந்த தகுதி தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு சலுகை மதிப்பெண் வழங்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததால், அந்த பிரிவுக்கு 5 சதவீதம் மதிப்பெண் சலுகை வழங்கி தமிழக அரசு 2014-ம் ஆண்டு பிப்ரவரி 6-ந் தேதி அரசாணை பிறப்பித்தது. அந்த அரசாணையில், 5 சதவீத மதிப்பெண் சலுகை 2013-ம் ஆண்டு தகுதித்தேர்வு எழுதியவர்களுக் கும், (முன்தேதியிட்டு) பொருந்தும் என்று கூறியிருந்தது.
வழக்கு
இதையடுத்து, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சிலர் வழக்கு தொடர்ந்தனர்.
தகுதித்தேர்வில் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் ‘வெயிட்டேஜ்’ மதிப்பெண் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று அறிவித்து தமிழக அரசு கடந்த மே 30-ந் தேதி அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை எதிர்த்தும் பலர் வழக்கு தொடர்ந்தனர்.
தன்னிச்சையானது இல்லை
இவ்வாறு பல்வேறு கோரிக்கைகளுடன் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் நீதிபதிகள் சத்தீஷ்குமார் அக்னிகோத்ரி, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் விசாரித்து பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
தகுதி தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதம், பிளஸ் 2, பட்டப்படிப்பு மற்றும் பி.எட். படிப்பில் பெற்ற மதிப்பெண்களை கணக்கிட்டு 40 சதவீதம் என்று ‘வெயிட்டேஜ்’ முறையை தமிழக அரசு நிர்ணயம் செய்துள்ளது. ஆனால், அரசு மேற்கொள்ளும் இந்த வெயிட்டேஜ் முறையினால், தங்களுக்கு எந்த விதத்தில் பாதிப்பு ஏற்படுகிறது என்பதை மனுதாரர்கள் நிரூபிக்கவில்லை.
எனவே, தமிழக அரசு பின்பற்றும் இந்த ‘வெயிட்டேஜ்’ மதிப்பெண் முறை தன்னிச்சையானது, நியாயமற்றது என்று கருதமுடியாது. ஒரு வேளை இந்த முறை தன்னிச்சையானது என்றால், அதை நிரூபிக்க வேண்டியது மனுதாரர்களின் பொறுப்பு ஆகும்.
புதிய அரசாணை
இந்த வெயிட்டேஜ் முறை தொடர்பாக 2012-ம் ஆண்டு அக்டோபர் 5-ந் தேதி அரசு பிறப்பித்த அரசாணையில் கூறப்பட்டுள்ள விதிமுறைகள் சரியானது இல்லை என்று தனி நீதிபதி எஸ்.நாகமுத்து சரியாக கண்டறிந்துள்ளார். அந்த முறையில் சில மாற்றங்களை செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். அதாவது, 90 மதிப்பெண் பெற்றவரையும், 104 மதிப்பெண் பெற்றவரையும் ஒரு பிரிவினராக கருதக்கூடாது என்று கூறியுள்ளார். எனவே, தமிழக பள்ளிக்கல்வித்துறை அந்த தவறை திருத்தி, இந்த ஐகோர்ட்டு உத்தரவில் கூறப்பட்டுள்ள முறையை பின்பற்றி கடந்த மே மாதம் புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது. எனவே, இந்த அரசாணையை, பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தன்னுடைய முழு மனதை செலுத்தாமல் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்ற மனுதாரர்களின் வாதத்தை ஏற்க முடியாது.
விதிமீறல் இல்லை
அதேபோல, இடஒதுக்கீடு பிரிவினர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வில் 5 சதவீதம் மதிப்பெண் சலுகை வழங்கியதிலும் விதிமுறை மீறலும் இல்லை என்று முடிவு செய்கிறோம். இந்த ஆசிரியர் தேர்ச்சி முறையில் பின்பற்றப்படும் விதிமுறைகள் அனைத்தும் தமிழக அரசின் கொள்கை முடிவாக உள்ளது. இந்த கொள்கை முடிவு தன்னிச்சையாகவோ அல்லது விதிமுறைகள் மீறியோ இருந்தால் மட்டுமே, அதில் இந்த கோர்ட்டு தலையிட முடியும். மேலும், அரசின் கொள்கை முடிவில் கோர்ட்டு தலையிடும் அதிகாரம் மிகவும் குறைவானது ஆகும். எனவே, வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களையும், ஆவணங்களையும் பார்க்கும் போது, ஆசிரியர் தகுதி தேர்வில் வெயிட்டேஜ் முறை, 5 சதவீதம் சலுகை மதிப்பெண் வழங்கும் முறையில் எந்த விதிமீறல்களும் இல்லை. அரசின் இந்த முடிவுகளில் இந்த கோர்ட்டு தலையிட எந்த ஒரு காரணமும் இல்லை என்று முடிவு செய்து, இந்த அப்பீல் வழக்குகள் அனைத்தையும் தள்ளுபடி செய்கிறோம்.
இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.
Tags
TET News