நூறு நாட்கள் போதுமா?

நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிப் பொறுப்பேற்ற 100-வது நாளையொட்டி, இந்த ஆட்சி தொடர்பாக ஊடகங்கள் - முக்கியமாகக் காட்சி ஊடகங்கள் - நடத்திவரும் கூத்துகள் கூச வைக்கின்றன.
இதுவரை எந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் இல்லாத அளவுக்குப் பலத்த எதிர்பார்ப்புகளுடன் போட்டியிட்டு, பலரும் எதிர்பார்த்தபடியே பிரதமர் பதவியில் அமர்ந்தார் நரேந்திர மோடி. ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்குப் பிறகு, தனிக் கட்சி ஒன்றுக்கு அறுதிப் பெரும்பான்மையை அளித்து, மோடியை மக்கள் தேர்ந்தெடுக்க என்ன காரணம்? தாங்க முடியாத விலைவாசி உயர்வு, சகிக்க முடியாத ஊழல், நிர்வாகச் சீர்கேடுகள், பொருளாதாரச் சீர்குலைவு எல்லாமும் சேர்ந்து தேசத்தை அமுக்கியது தானே? காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் பத்தாண்டு ஆட்சிக் காலத்தில், இந்தியா சந்தித்த பிரச்சினைகள் ஏராளம்; சரிவுகளும் ஏராளம். தன்னுடைய ஆட்சிக் காலத்தின் முதல் பாதியில் சாதித்த மன்மோகன் சிங் அரசு, அடுத்த பாதியில் மக்களைச் சோதித்தது. ஆட்சி யார் கையில் இருக்கிறது, நிர்வாகம் நடக்கிறதா, இல்லையா என்று சந்தேகப்படும் அளவுக்கு ஆட்சி இயந்திரத்தை ஆளுக்கொரு பக்கமாக இழுத்து நாசமாக்கிவிட்டிருந்தனர். அந்த இடத்தில்தான் மோடியைத் தேர்ந்தெடுத்து மக்கள் உட்கார வைத்திருக்கின்றனர்.
இந்தியா போன்ற ஒரு மாபெரும் தேசத்தை நிர்வகித்தல் என்பது சாதாரண காரியம் அல்ல. இந்த நாட்டின் அரசு இயந்திரத்தை இயக்கும் இந்திய ஆட்சிப் பணி உயர் அலுவலர்களின் எண்ணிக்கை மட்டும் 6,000-க்கும் மேல் என்பதும், மத்திய அரசின் ஊழியர்களின் எண்ணிக்கை 30 லட்சத்துக்கும் மேலே என்பதும் இந்திய ஆட்சியின் பிரம்மாண்டத்தையும் சிக்கலையும் நமக்குச் சொல்லக் கூடும். ஒரு தேவதூதர் போல நரேந்திர மோடி இந்தியாவின் அத்தனை பிரச்சினைகளையும், ஆட்சிக்கு வந்த உடனே தீர்த்துவிடுவார் என்று தேர்தலுக்கு முன் இங்கு நடந்த பிரச்சாரங்கள் எத்தனை அபத்தமோ, அதற்குக் கொஞ்சமும் குறைவில்லாத அபத்தம் இந்த 100 நாட்கள் ஆட்சியில் மோடி என்ன சாதித்தார் அல்லது சாதிக்கவில்லை என்கிற மதிப்பீடுகள்!
அரசியல் மேடைகளின் பிரச்சாரக் களம் வேறு. அரசு நிர்வாகத்தை இயக்கும் யதார்த்தக் களம் வேறு. வெற்றிகரமாக நான்கு முறை முதல்வராக குஜராத்தை ஆண்டவர் மோடி. மாநில அரசியலிலிருந்து தேசிய அரசியலில் நுழைந்தவுடன் நேரடியாக ஒரே தாவலில் பிரதமர் ஆகும் வித்தையை அறிந்தவர். அப்படிப்பட்டவர்தான் பதவியேற்ற கொஞ்ச நாட்களில், “ஒரு மத்திய அரசுக்குள் ஏராளமான மாநில அரசுகள் இருக்கின்றன” என்றும் “நான் கற்றுக்கொள்வதற்கு நிறைய இருக்கிறது” என்றும் வெளிப்படையாகச் சொன்னார். எவருக்கும் அவகாசம் தேவை. சில நாட்களுக்கு முன் ‘தி இந்து’நம் வாசகர்களிடம் நடத்திய வாக்கெடுப்பில்கூட இதைக் கவனிக்க முடிந்தது. வாசகர்கள் தீர்மானமான ஒரு முடிவைச் சொல்ல முடியாமல், நான்கு விதமாகத் தங்கள் கருத்துகளில் வேறு பட்டிருந்ததை இங்கே குறிப்பிட்டாக வேண்டும். அரசு நிர்வாகத்தில் புதிதாக அமர்ந்த ஒருவரை - தேசத்தின் தலையெழுத்தையே மாற்றிவிடக் கூடிய தொடர் மாற்றங்கள் எதுவும் நிகழ்ந்திராத பட்சத்தில் - 100 நாட்களில் மதிப்பிட்டு, ஒரு ஆட்சிக்குச் சான்றிதழ் கொடுப்பது நியாயமான காரியம் அல்ல.
நிச்சயமாக, தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்த இந்த 100 நாட்களில் கவனிக்க வேண்டிய, விவாதிக்க வேண்டிய பல விஷயங்கள் நடந்திருக்கின்றன. நேர்மறையாகவும் எதிர்மறை யாகவும். அரசு அதிகாரிகளுக்கான சுதந்திர எல்லையை விரிவாக்கியிருக்கிறது. அண்டை நாடுகளுக்கான மோடியின் பயணம் நம்முடைய உறவை நெருக்கமாக்கி, இந்தியாவின் நிலையை ஒரு படி உயர்த்தியிருக்கிறது. உலக வர்த்தகக் கழக மாநாட்டில் உணவு மானியம் தொடர்பான நிபந்தனைகளுக்குப் பணியாமல் அரசு உறுதியாக நின்றது, தேசத்தின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கை. ராணுவத் தளவாடக் கொள்முதலில் தற்சார்பு என்கிற நிலைப்பாடு, உலகின் மிகப் பெரிய ஆயுத இறக்குமதியாளராக நம்முடைய நிதி வெளியே செல்வதைத் தடுக்கும். அரசு நிர்வாக அனுமதிகளில் சிவப்பு நாடா முறையை அழித்தொழிக்கும் நடைமுறைகள் முன்னெடுக்கப் படுகின்றன. இவையெல்லாம் நேர்மறையான விஷயங்கள்.
தொலைநோக்குடன் அமைக்கப்பட்ட திட்டக் குழு கலைக்கப்படவிருக்கிறது. அமைச்சர்கள் தங்கள் தனிச்செயலர்களை நியமித்துக்கொள்ளும் அதிகாரத்தைக்கூட இழந்திருக்கிறார்கள். வெளிநாடுகளில் பதுக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணத்தை மீட்கும் நடவடிக்கை, கடிதம் எழுதியதோடு நிற்கிறது. இந்தி ஆதிக்கமும், சமஸ்கிருதமயமாக்கல் திட்டங்களும் இந்தி பேசாத மாநிலங்களில் அதிர்வுகளை உருவாக்கியிருக்கின்றன. ‘சாதி மதக் கலவரங்கள் தேசத்தின் வளர்ச்சியைப் பின்னுக்குத் தள்ளும்’ என்று மோடி பேசினாலும், சங்கப் பரிவார அமைப்புகளைச் சேர்ந்த அவருடைய சகாக்களின் இன அடிப்படைவாதப் பேச்சுகளுக்கு அவர் காட்டும் அசாத்திய மௌனம், வளர்ச்சியை நம்பி அவரைத் தேர்ந்தெடுத்தவர்களுக்கு உவப்பானதாக இல்லை. இவையெல்லாம் எதிர்மறையான விஷயங்கள். எனினும், இவை எதையுமே கொண்டு ஒட்டுமொத்த ஆட்சியும் அரசும் இப்படித்தான் என்று மதிப்பிடுவது பரபரப்புக்குத் தீனி போடுவதாக மட்டுமே அமையும்.
ஜனநாயகத்தின் முக்கியமான தூண்களில் ஒன்றான ஊடகங்களுக்கு நிறையவே கடமைகளும் பொறுப்புணர்வும் உண்டு. முக்கியமான கடமைகளில் ஒன்று மக்களின் அரசியலையும் பார்வையையும் செழுமைப்படுத்துவது, கூர்மைப்படுத்துவது. மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டிய விஷயங்கள், அவர்களின் கவனத்தைக் கோர வேண்டிய, விவாதிக்கவைக்க வேண்டிய விஷயங்கள் ஆயிரமாயிரம் இருக்க ஒரு தனிமனிதரைச் சுற்றியே - அவர் பிரதமராகவே இருந்தாலும் - மக்களின் அரசியலைத் திசைதிருப்பி வைத்திருப்பது ஆக்கபூர்வமான ஊடகவியல் அல்ல. ஐந்து ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கக் காட்சி ஊடகங்கள் ஒபாமாவை வைத்து நடத்திய அதே கதையை இங்கே மோடியை வைத்து மறுஒளிபரப்பு செய்துபார்க்கின்றன இந்தியக் காட்சி ஊடகங்கள். எப்போதுமே நம்முடைய பணி சமூகத்தைப் படம் பிடிப்பதுதான். நாம் அரசியல் பார்வையாளர்கள்தானே அன்றி பங்கேற்பாளர்களாகக் கூடாது!

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post