இலங்கை அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான மைத்ரிபால சிறிசேன வெற்றி பெற்றுள்ளார். அவர் ராஜபக்சேவை விட சுமார் 4 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்றுள்ளார்.
ராஜபக்சே 57 லட்சத்து 68 ஆயிரத்து 90 வாக்குகள் பெற்றுள்ளார். சிறிசேன 51.28 சதவிகித வாக்குகளையும், ராஜபக்சே 47.58 சதவிகித வாக்குகளையும் பெற்றிருக்கின்றனர். தமிழர்கள் அதிகம் நிறைந்த கிளிநொச்சியில் மைத்திரிபால சிறிசேனவுக்கு 38ஆயிரத்து 856 வாக்குகளும், ராஜபக்சேவுக்கு 13ஆயிரத்து 300 வாக்குகளும் கிடைத்துள்ளன.
சிங்களர் நிறைந்த காலியில் மைத்ரிபால சிறிசேன39ஆயிரத்து 547 வாக்குகளையும், ராஜபக்சே 23ஆயிரத்து 184 வாக்குகளையும் பெற்றுள்ளனர். முல்லைத்தீவில் சிறிசேனவுக்கு 35ஆயிரத்து 441 வாக்குகளும், ராஜபக்சேவுக்கு 7ஆயிரத்து தொள்ளாயிரத்து 35 வாக்குகளும் கிடைத்தன. தோல்வியை ஒப்புக்கொண்ட ராஜபக்சே, இன்று காலை ஆறரை மணி அளவில் அதிபரின் அதிகாரபூர்வ மாளிகையில் இருந்து வெளியேறினார். வெளியேறுவதற்கு முன்பாக, ராஜபக்சே பிரதான எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கேவை அழைத்து பேசியதாக, அதிபர் மாளிகை ஊடகச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இன்று மாலை, அதிபர் பதவி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெறக்கூடும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இலங்கையின் அதிகாரபூர்வ அதிபர் மாளிகையான அலரி மாளிகைக்கு பதிலாக தனது சொந்த மாவட்டத்திலுள்ள இல்லத்திலிருந்து ஆட்சி செய்யப்போவதாக கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tags
Latest News