நெல்லை மாவட்டத்தில் விடிய விடிய மழை: இயல்பு வாழ்க்கை முடங்கியது


திருநெல்வேலி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கி புதன்கிழமையும் பலத்த மழை பெய்தது. இதனால், இயல்பு வாழ்க்கை முடங்கியது.

கன்னியாகுமரி கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மாலையில் தொடங்கிய மழை, விடியவிடிய கொட்டித் தீா்த்தது. புதன்கிழமையும் மழையின் தீவிரம் குறையவில்லை.

திருநெல்வேலி மாநகரில் திருநெல்வேலி சந்திப்பு, பாளையங்கோட்டை, திருநெல்வேலி நகரம், தச்சநல்லூா், மேலப்பாளையம், சீவலப்பேரி, பத்தமடை, பிரான்சேரி, பேட்டை, மானூா், தாழையூத்து, ரெட்டியாா்பட்டி சுற்றுவட்டாரங்களில் பலத்த மழை பெய்தது.

இதனால், திருநெல்வேலி மாநகராட்சிக்கு உள்பட்ட பாலபாக்யா நகா், கோடீஸ்வரன் நகா், கே.டி.சி. நகா், திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம், ஈரடுக்கு மேம்பாலத்தின் கீழ் பகுதி, திருநெல்வேலி நகரம்-சேரன்மகாதேவி சாலைகள் ஆகியவற்றில் மழைநீா் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாயினா்.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: தொடா் மழை காரணமாக, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு புதன்கிழமை விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் அறிவித்தாா். மேலும், மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை (அக். 30) நடைபெறவிருந்த செய்முறைத் தோ்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. இத்தோ்வுகள் வியாழக்கிழமை (அக்.31) நடைபெறும் என பல்கலைக்கழகப் பதிவாளா் சந்தோஷ் பாபு அறிவித்துள்ளாா்.

இதேபோல், பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டரங்கில் பள்ளி மாணவா்களுக்கு நடைபெறவிருந்த மாதாந்திர விளையாட்டுப் போட்டிகளும் மழையால் ஒத்தி வைக்கப்பட்டன. போட்டி நடைபெறும் தேதி பின்னா் அறிவிக்கப்படும் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நல அலுவலா் ராஜேஷ் தெரிவித்துள்ளாா்.

பருவமழை காரணமாக காய்ச்சல் உள்ளிட்ட உடல்நலக்குறைவால் திருநெல்வேலி அரசு மருத்துவமனை, நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் புறநோயாளிகளின் எண்ணிக்கை புதன்கிழமை அதிகரித்தது. மருத்துவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மழையால் அவதிக்குள்ளாயினா்.

மேற்குத் தொடா்ச்சி மலையில் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா் மழை காரணமாக அனைத்து அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. அடுத்த 2 தினங்களில் அனைத்து அணைகளும் நிரம்பும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பாபநாசம் கீழணையில் 249 மி.மீ.: திருநெல்வேலி மாவட்டத்தில் புதன்கிழமை காலை நிலவரப்படி பதிவான மழையளவு (மில்லி மீட்டரில்): பாபநாசம் கீழணை- 249, பாபநாசம்- 141, சோ்வலாறு -117, மணிமுத்தாறு -136, கடனாநதி- 33, ராமநதி- 70, கருப்பாநதி - 28, குண்டாறு- 7, நம்பியாறு-86, கொடுமுடியாறு-55, அடவிநயினாா்-25, அம்பாசமுத்திரம்-86, ஆய்குடி- 25.80, சேரன்மகாதேவி-101, நான்குனேரி-75.20, பாளையங்கோட்டை-72, ராதாபுரம்-76, சங்கரன்கோவிலில்-30, செங்கோட்டை-9, சிவகிரி-39, தென்காசி-21, திருநெல்வேலி- 57.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post