முழு விபரம்:
வழக்கு கடந்து வந்த பாதை :
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கடவுள் ராமர் பிறந்த இடத்தில் பாபர் மசூதி கட்டப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டு வந்தது. இந்த விவகாரத்தில் 1992 டிசம்பரில் நடந்த போராட்டத்தின் போது பாபர் மசூதி இடிக்கப்பட்டது. சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நான்கு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 2010 செப்டம்பரில் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த வழக்கில் தீர்ப்பளித்தது.
சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை மூன்று பாகங்களாக பிரிக்க வேண்டும். அதில் ஒரு பகுதி ராமர் கோவில் கட்டுவதற்காக ராம் லாலா அமைப்புக்கு அளிக்கப்பட வேண்டும். மற்றொரு பகுதி சன்னி வக்பு வாரியத்துக்கும் மீதமுள்ள பகுதி ஹிந்து மத அமைப்பான நிர்மோகி அகாடாவுக்கும் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு தீர்ப்பளிக்கப் பட்டது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 14 மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. வழக்கை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம் அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து 2011 மே மாதம் உத்தரவிட்டது.
இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல் முறையீட்டு மனுக்களை விசாரிக்க ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசனஅமர்வு அமைக்கப்பட்டது. ராமஜென்ம பூமி விவகாரத்துக்கு மத்தியஸ்தம் மூலம் தீர்வு காண மூன்று நிபுணர்கள் குழுவை கடந்த மார்ச் மாதம் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு அமைத்தது. உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா தலைமையில் வாழும் கலை அமைப்பு நிறுவனர் ரவிசங்கர், சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இக்குழுவில் இடம் பெற்றனர்.
இந்த குழு பல்வேறு தரப்பினருடன் பேசியது. ஆனால் சுமூக தீர்வு காண முடியவில்லை என உச்ச நீதிமன்றத்தில் மத்யஸ்த குழு தெரிவித்தது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல்சாசன அமர்வு இந்த வழக்கை அன்றாடம் விசாரிக்க முடிவெடுத்து அறிவித்தது. இதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி முதல் தினமும் வழக்கு விசாரணை நடந்தது.
அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் அக்.,17ல் தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்தனர். தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் நவ., 17ம் தேதி ஓய்வு பெறுகிறார். அதற்கு முன் அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என கருதப்பட்டது. இதையடுத்து நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.
நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்துமாறு மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளை மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. உத்தர பிரதேசத்திலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன. உ.பி. மாநில தலைமை செயலர் ராஜேந்திர குமார் திவாரி, டி.ஜி.பி. ஓம் பிரகாஷ் சிங் ஆகியோருடன் டில்லியில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் நேற்று ஆலோசனை நடத்தினார். மாநிலத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி இருவரும் தலைமை நீதிபதியிடம் விளக்கினர். அயோத்தி வழக்கில் இன்று காலை 10:30 மணிக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது.
தீர்ப்பு விபரம் :
அதில், 5 நீதிபதிகளும் ஒரே தீர்ப்பு வழங்கி உள்ளனர். ஷியா வாரியம் மற்றும் வக்பு சன்னி அமைப்பின் மேல்முறையீட்டு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. வரலாறு, மதம் கடந்த வழக்கு இது. ஒரு மதத்தின் நம்பிக்கை மற்ற மதத்தின் நம்பிக்கையை தடுப்பதாக இருக்கக் கூடாது. இறை நம்பிக்கைக்குள் சுப்ரீம் கோர்ட் செல்வது தேவையற்றது என கருதுகிறோம்.