வரும் ஜன.,16 ல், தேர்வு குறித்து பிரதமர் மோடியின் உரையை கேட்க 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும். அனைத்து மாணவர்களும் தவறாமல், பள்ளிக்கு வருவதை மாவட்டத்தில் உள்ள அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் உத்தரவிட்டிருந்தார். இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், பிரதமர் உரையை கேட்க மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்ற உத்தரவை திரும்ப பெற வேண்டும் எனவும், இதற்காக வரும் 16 ல் பள்ளிகல்வித்துறை இயக்குனர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்படும்எனக்கூறியிருந்தார்.
இந்நிலையில், பள்ளிகல்வித்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பொங்கல் விடுமுறை ரத்து செய்யப்படாது. ஜன.,16 தேதி பிரதமர் உரையை எங்கிருந்து வேண்டுமானாலும் பார்க்கலாம். வீடுகளில் பார்க்க முடியாத மாணவர்கள் விருப்பமிருந்தால், பள்ளிகளில் காண ஏற்பாடு செய்யவே சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அனைத்து மாணவர்களும் பளளிக்கு வர வேண்டும் என சுற்றறிக்கையில் கூறப்படவில்லை என தெரிவித்துள்ளது.
பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி ஒன்றில், பொங்கலுக்கு மறுநாள் விடுமுறையின் போது பள்ளிக்கு வர வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவ்வாறு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
Tags
school News