Samayam Tamil | Updated: 09 Dec 2019, 01:14:04 PM
நிதி நெருக்கடி காரணமாக பள்ளிக் கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. இதனால் பள்ளிக் கல்விக்கான திட்டங்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நடப்பு 2019-20 நிதியாண்டில் பள்ளிக் கல்வித் துறையின் செயல்பாடுகளுக்காக ரூ.56,536 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. உயர் கல்வியைப் போல அல்லாமல் பள்ளிக் கல்விக்கான நிதியானது அரசின் நிதிநிலை ஒதுக்கீடு வாயிலாக மட்டுமே கிடைப்பதால் அதைச் சார்ந்தே கல்வித் திட்டங்கள் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நிலைமை இப்படி இருக்க, பள்ளிக் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. இந்த ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டில் ரூ.3,000 கோடியைத் திரும்பப்பெற அரசு முடிவுசெய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துடன் மத்திய நிதியமைச்சகம் இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஆலோசனை செய்துள்ளது. மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் தரப்பிலிருந்து பள்ளிக் கல்விக்கான முழு நிதியையும் வழங்க கோரிக்கை வைக்கப்பட்டு வரும் நிலையில், மத்திய அரசு திடீரென இந்த முடிவை மேற்கொண்டுள்ளது. மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் இத்தகவலை மறுத்திருந்தாலும், அடுத்த வாரம் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் தி பிரிண்ட் ஊடகத்திடம் பேசுகையில், “பள்ளிக் கல்வித் துறைக்கான முழு நிதியையும் வழங்க வேண்டும் என்று நாங்கள் நிதியமைச்சகத்தை வலியுறுத்தி வருகிறோம். ஏனெனில் பள்ளிக் கல்வித் துறையானது நிதி திரட்டுவதற்கான மாற்று வழிகள் இல்லை. உயர் கல்வித் துறைக்குக் கூட உயர் கல்வி நிதி நிறுவனம் போன்ற அமைப்புகள் இருக்கின்றன. ஆனால் பள்ளிக் கல்வித் துறைக்கு மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு மட்டுமே ஆதாரம்” என்றார். பள்ளிக் கல்வித் துறைக்கு மத்திய அரசு வழங்கும் நிதியிலிருந்துதான் சமக்ர ஷிக்ஷா அபியான் உள்ளிட்ட கல்வித் திட்டங்கள் செயல்படுகின்றன. கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா போன்றவற்றுக்கும் நிதி தேவைப்படுகிறது. அரசு ஆசிரியர்கள் பலருக்கு ஊதியம் கிடைக்காமல் இருக்கிறது. இதுபோன்ற சூழலில் பள்ளிக் கல்விக்கான நிதியைக் குறைத்தால் கல்விச் சேவையில் பாதிப்பு ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது.
கடந்த மூன்று வருடங்களாகவே பள்ளிக் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு உயர்த்தி வருகிறது. இதனால் கல்வித் தரத்தை மேலும் உயர்த்த முடியும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில், திடீரென நிதியைத் திரும்பப் பெற அரசு முடிவுசெய்துள்ளது. 2017-18ஆம் ஆண்டில் கல்வித் துறைக்காக ரூ.46,000 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டில் ரூ.9,000 கோடி கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டது அதிக வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் ரூ.3,000 கோடியை அரசு திரும்பப்பெறப்போகிறது என்ற அறிவிப்பு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.