ராஜஸ்தானிலுள்ள பத்லா கிராமத்தில், எஃகு தட்டுகளின்மீது எழுப்பப்படும் ஒலி, அங்குள்ள மணல் திட்டுகளின் வழியாகப் பரவி, ஒவ்வொரு வீட்டிலும் சென்றடைந்தது. அக்கிராமத்தில், குழந்தை பிறந்ததைக் குறிக்கும் விதமாக இந்த ஒலியை எழுப்புவது வழக்கம். ஆனால், கடந்த செவ்வாய்க்கிழமை இந்த ஒலி எழுப்பப்பட்டதுக்குக் காரணம் முற்றிலும் சுவாரஸ்யமானது.
ராஜஸ்தான் மாநிலத்தில், திறந்தநிலைப் பள்ளிகளின் தேர்வு முடிவு கடந்த திங்கள்கிழமை இரவு அறிவிக்கப்பட்டது. நமக்கு சாதாரணமான செய்தியாகத் தெரியும் இது, தூங்கிக் கொண்டிருந்த அந்தக் கிராமத்துக்கு கொண்டாடக்கூடிய இரவைத் தந்தது.
அமிரா, வச்சி மற்றும் ஹிரா பானு என இந்தக் கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் பத்தாம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சியடைய, அந்தச் செய்தியைத்தான் கொண்டாடித் தீர்த்துள்ளனர் கிராம மக்கள். கொண்டாட்டத்துக்குக் காரணம், மாணவர்கள் ஒருவர்கூட பள்ளியில் சேரவில்லை என்பதால், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கிராமத்தில் இருந்த அனைத்து அரசுப் பள்ளிகளும் மூடப்பட்டன.
அதையும் தாண்டி, அக்கிராமத்திலேயே முதன்முறையாக பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சியடைந்தவர்கள் என்றால் அது இந்த மூன்று மாணவர்கள்தான். இதனால்தான் அந்தக் கிராமத்திலுள்ள அனைத்துக் குடும்பங்களும் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளை இனிப்புகள் வழங்கி, மாணவிகளுக்கு மாலை அணிவித்து, விழாவைப்போல கொண்டாடிவருகின்றனர்.