தமிழகத்தில் 32 ஆக இருந்த மாவட்டங்களின் எண்ணிக்கை வேக வேகமாக உயர்த்தப்பட்டது. கடந்த ஆண்டில் மட்டும் புதிதாக ஐந்து மாவட்டங்கள் பிறந்தது. இதனால் மாவட்டங்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டில் 37 ஆக உயர்ந்தப்பட்டது.
இப்படி மாவட்டங்களில் பிரிப்பதற்கு பின் நிறைய அரசியல் காரணங்களும் இருக்கிறது. இதன் மூலம் அதிமுக பெரிய அளவில் பலன் அடையும். தேர்தலில் எளிதாக வெற்றிபெற இது பெரிய அளவில் பலன் கொடுக்கும் என்றும் கூறுகிறார்கள்.
கடந்த வருடம் மட்டும், நெல்லை மாவட்டத்தில் இருந்து தென்காசி, விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரத்தில் இருந்து செங்கல்பட்டு, ஆகிய புதிய மாவட்டங்கள் பிறந்தது. வேலூர் மூன்றாக பிரிக்கப்பட்டு, வேலூரில் இருந்து திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்கள் உதயம் ஆனது.
இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் புதிதாக மூன்று மாவட்டங்கள் உருவாக்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்புள்ளது. இன்று நடக்கும் சட்டசபை கூட்டத்தொடரில் இந்த அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.
அதன்படி நாகப்பட்டினத்தில் இருந்து மயிலாடுதுறை, கோவையில் இருந்து பொள்ளாச்சி, சேலத்தில் இருந்து எடப்பாடி ஆகிய புதிய மாவட்டங்கள் உருவாக்கலாம் என்று கூறுகிறார்கள். இதனால் தமிழகத்தில் மாவட்டங்களின் எண்ணிக்கை 40 ஆக அதிகரிக்கும்.