யார் இந்த எஸ்.ஐ சித்தாண்டி?' - டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் அதிர்ச்சி கொடுத்த 5 நிபந்தனைகள்


கடிதம்
கடிதம்

சிபிசிஐடி போலீஸார், குரூப் 4 தேர்வு முறைகேடு விசாரித்துவரும் நேரத்தில் சமூகவலைதளத்திலும் சிபிசிஐடி போலீஸ் உயரதிகாரிகளின் கவனத்துக்கு, `மறைக்கப்பட்ட உண்மை' என்ற பெயரில் கடிதம் ஒன்று வந்தது. அதில்தான் காவல்துறையில் பணியாற்றும் சித்தாண்டியின் குடும்பத்தினர் எப்படி குரூப் 2, குரூப் 4 தேர்வுகளில் தரவரிசைப் பட்டியலில் இடம்பிடித்த தகவலும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்தத் தகவல் கிடைத்ததும் சிபிசிஐடி போலீஸார் விசாரிக்கத் தொடங்குவதற்குமுன் சித்தாண்டி ஒருமாதம் மருத்துவ விடுப்பில் சென்ற தகவல் கிடைத்தது. அவரின் மனைவி பிரியா, குரூப் 2 தேர்வில் தரவரிசைப் பட்டியலில் 5-வது இடம் பிடித்திருந்தார். அவரும் சென்னையில் உள்ள அரசு அலுவலகம் ஒன்றில் பணியாற்றிவரும் தகவலையறிந்த சிபிசிஐடி போலீஸார் அங்கு சென்றனர். ஆனால் பிரியாவும் விடுமுறையில் சென்றிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து சித்தாண்டியின் தம்பி வேல்முருகன், குரூப் 2 தேர்வில் தரவரிசைப்பட்டியலில் 3-வது இடம் பிடித்து காரைக்குடி முத்துப்பட்டணம் இணை சார்-பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராகப் பணியாற்றுவது போலீஸாருக்குத் தெரியவந்தது. அங்கு சென்ற போலீஸார் வேல்முருகனைப் பிடித்து விசாரித்துவருகின்றனர். வேல்முருகன், தேர்வு எழுதிய மையம், அவரின் கல்வித் தகுதி உள்ளிட்ட பின்னணி விவரங்களை போலீஸார் சேகரித்துவருகின்றனர்.

சித்தாண்டியின் இன்னொரு தம்பியான கார்த்தி குரூப் 4 தேர்வில் தரவரிசைப் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். ஒரே குடும்பத்தில் குரூப் 2 தேர்வில் 3 பேரும் குரூப் 4 தேர்வில் ஒருவரும் தரவரிசைப்பட்டியலில் இடம்பிடித்தது தொடர்பாக போலீஸார் விசாரித்துவருகின்றனர். வேல்முருகன் அளிக்கும் தகவலின் அடிப்படையில் தலைமறைவாக இருக்கும் சித்தாண்டி, அவரின் மனைவி பிரியா, இன்னொரு தம்பி கார்த்தி ஆகியோரிடம் விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

எஸ்.ஐ சித்தாண்டி
எஸ்.ஐ சித்தாண்டி

இதுகுறித்து சிபிசிஐடி போலீஸார் கூறுகையில்,``குரூப் 4, குரூப் 2ஏ தேர்வுகளில் முறைகேடு நடந்திருப்பது விசாரணை மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இந்தத் தேர்வுகளில் முறைகேடு செய்தவர்களின் பட்டியலைச் சேகரித்துள்ளோம். அவர்களிடம் விசாரணை நடத்திவருகிறோம். சென்னைக் காவல்துறையில் பணியாற்றும் சித்தாண்டிக்கு நீதிமன்றக் குடியிருப்பில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதனால், அவருக்கு நீதித்துறையில் உள்ள சிலர் மூலம் டிஎன்பிஎஸ்சி அலுவலக அதிகாரிகளின் தொடர்பு கிடைத்துள்ளது. மேலும், அரசியல் கட்சிப் பிரமுகரின் செல்வாக்கும் சித்தாண்டிக்கு இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. ஆனால், அந்தத் தகவல் உறுதிசெய்யப்படவில்லை.

டிஎன்பிஎஸ்சி அலுவலகம்
டிஎன்பிஎஸ்சி அலுவலகம்

இதற்கிடையில், குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக சென்னை டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தின் தேர்வு மையப் பொறுப்பாளராக இருந்தவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதனடிப்படையில் 3 பேரிடம் விசாரணை நடந்துவருகிறது. விசாரணையில் முறைகேட்டில் மூன்று பேருக்கும் தொடர்பு இருப்பது உறுதியானால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள்.

அதேசமயத்தில், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இரண்டு தேர்வு மையங்களின் விடைத்தாள்களை திருத்திய சம்பவத்தில் குற்றம் சுமத்தப்பட்ட சென்னை ஜெயக்குமார் தலைமறைவாக உள்ளார். அதனால் அவரின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது"என்றனர்.

சித்தாண்டி குறித்து சென்னைக் காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது சில தகவல்கள் கிடைத்தன. `2013-ம் ஆண்டு காவலராக சிவகங்கை மாவட்டத்தில் பணியில் சேர்ந்துள்ளார் சித்தாண்டி. பின்னர் 2015-ம் ஆண்டு சென்னைக்கு இடமாறுதலாகி வந்துள்ளார். சென்னையில் போலீஸ் உயரதிகாரி ஒருவருக்கு டிரைவராகப் பணியாற்றினார். பின்னர் அவருக்கு நீதிபதிகள் குடியிருப்பில் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. அப்போது நீதித்துறையைச் சேர்ந்த ஒருவர் டிஎன்பிஎஸ்சியில் முக்கியப் பதவியில் இருந்தார். அவருடன் சித்தாண்டிக்கு நட்பு கிடைத்த பிறகு டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் இவரின் செல்வாக்கு உயர்ந்துள்ளது' என்கின்றனர் சித்தாண்டிக்கு நெருக்கமானவர்கள்.

டிஎன்பிஎஸ்சி அலுவலகம்
டிஎன்பிஎஸ்சி அலுவலகம்

Also Read: எப்படி மாநில அளவில் 3ம் இடம்?- சிவகங்கை வேல்முருகனை வளைத்த சி.பி.சி.ஐ.டி #TNPSC

குரூப் 4 தேர்வின் தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்த திருவராஜ், சித்தாண்டியின் உறவினர் என்ற தகவல் சிபிசிஐடி போலீஸாருக்குத் தெரியவந்துள்ளது. ஏற்கெனவே திருவராஜ், போலீஸாரின் கஸ்டடியில் இருந்துவருகிறார். அதனால் திருவராஜ் மூலம் சித்தாண்டி குறித்த தகவல்களை போலீஸார் சேகரித்துவருகின்றனர். மேலும் சித்தாண்டியின் உயரதிகாரிகளிடம் அவரது விடுமுறையை உடனடியாக ரத்து செய்து பணிக்குத் திரும்ப நடவடிக்கை எடுக்கும்படி சிபிசிஐடி போலீஸார் கூறியுள்ளனர். இதனால் சித்தாண்டிக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. அவர் சிக்கினால் கூடுதல் தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

`டிஎன்பிஎஸ்சி தேர்வில் சித்தாண்டி மூலம் வெற்றி பெற வேண்டும் என்றால், அவர் தரப்பிலிருந்து தேர்வு எழுதுபவர்களுக்கு 5 நிபந்தனைகள் வைக்கப்படும்' என்கின்றனர் உள்விவரம் தெரிந்தவர்கள். 1. தேர்வு எழுதுவதற்குமுன் முழுத் தொகையும் கொடுத்துவிட வேண்டும். 2. கண்டிப்பாகத் தேர்வு எழுதுபவர்கள் சென்னைக்கு வந்து குறிப்பிட்ட சிலரைச் சந்திக்க வேண்டும். அப்போது அவர்கள் சொல்வதைக் கேட்டு அதன்படி நடக்க வேண்டும்.

Also Read: `தம்பிக்கு 3-வது இடம்; மனைவிக்கு 5-வது இடம்!' -டிஎன்பிஎஸ்சி மோசடியில் திகைக்கவைத்த சென்னை எஸ்.ஐ.

3. எந்த ஊரைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேர்வு மையத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். 4. மதிப்பெண் கூடுதலாகவும் தரவரிசைப் பட்டியலில் இடம் பிடிக்க வேண்டும் என்றால் எக்ஸ்ட்ரா தொகை கொடுக்க வேண்டும். 5. எக்காரணத்தைக் கொண்டும் ஓஎம்ஆர் சீட்டில் முதல் 5 கேள்விகளுக்கு மட்டுமே பதிலளிக்க வேண்டும். மீதமுள்ள கேள்விகளுக்கு எந்தவித பதிலும் அளிக்காமல் தேர்வு முடிந்த பிறகு கொடுத்துவிட வேண்டும்' என நிபந்தனை விதித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post