நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வீட்டு கடன் பிரிவில் அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்க பாதுகாப்பான சூழ்நிலையை ஏற்படுத்தக் கொடுக்க வேண்டும் என்பதற்காகப் புதன்கிழமை முக்கியமான ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது.
பொதுவாகப் பில்டர்கள் மக்களிடம் தங்களது வீடுகளை வேகமாக விற்பனை செய்து முடிக்க வேண்டும் என்பதற்காகப் பல பொய்களைக் கூறி விற்பனை செய்வார்கள். இதில் முக்கியமான ஒன்று டெலிவரி டைம்.
டெலிவரி டைம் என்பது குறித்த நாளுக்குள் பில்டர்கள் கூறிய படி வீட்டின் கட்டுமான பணிகளை முடித்து வாடிக்கையாளர்கள் கையில் சாவியைக் கொடுக்க வேண்டும்.
பில்டர்கள் காலந்தாழ்த்துவது தற்போது மிகவும் இயல்பான ஒன்றாக இருக்கிறது. இது மக்கள் மத்தியில் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இது பில்டர்களுக்குப் பெரிய விஷயமாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் வங்கியிலோ அல்லது வெளியிலோ கடன் பெற்று வீடு வாங்குபவர்களுக்கு இது மிகப்பெரிய பிரச்சனை, இதைப் பிரச்சனை என்பதை விடவும் சுமை என்று கூறலாம்.
இந்தப் பிரச்சனையால் பல கோடி மக்கள் இந்தியா முழுவதும் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா இந்தப் பிரச்சனையை உணர்ந்து கொண்டு மக்களுக்குப் போதிய பாதுகாப்புகளை அளிக்க வேண்டும் எனப் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.
இப்புதிய திட்டத்தின் படி பில்டர்கள் தங்களது திட்டத்தைச் சரிவர முடிக்கவில்லை எனில் எஸ்பிஐ வங்கியில் கடன் பெற்ற வாடிக்கையாளர்களுக்குத் தங்களது அசல் தொகையை முழுவதுமாகத் திருப்பிக் கொடுப்பதாக அறிவித்துள்ளது. (ஆனால் வட்டி திருப்பிக் கொடுக்கப்பட மாட்டாது. )
தற்போது இத்திட்டம் அப்பார்ட்மென்ட்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டு உள்ளது கவனிக்க வேண்டிய ஒன்று. அதுவும் எஸ்பிஐ வங்கி அந்தத் திட்டத்திற்கு sole lender ஆக இருந்தால் மட்டுமே இந்தத் திட்டம் செல்லுபடியாகும் என எஸ்பிஐ தெரிவித்துள்ளது.
இத்திட்டத்தின் மூலம் பில்டர்களுக்கு நெருக்கடியும், மக்களுக்கு நம்பிக்கையும் கொடுத்துள்ளது.
தற்போது எஸ்பிஐ வங்கி வீட்டு கடன் திட்டத்தின் கீழ் சுமார் பில்டர்களுக்குப் பெரிய அளவில் கடன் கொடுப்பதில்லை, மக்கள் வாயிலாகத் தான் தங்களது வீட்டு கடன் வர்த்தகத்தை நடத்தி வருகிறது. இதுவரை சுமார் 5000 கோடி ரூபாய் வரையில் பில்டர்களுக்கு எஸ்பிஐ கடன் கொடுத்துள்ளது. இது எஸ்பிஐ வங்கியின் மொத்த 2.248 லட்சம் கோடி ரூபாய் கடன் வர்த்தகத்தில் வெறும் 0.2 சதவீதம் மட்டுமே.