இப்படி காசு வந்தா Income tax கிடையாதாம்ல!

இந்த 2020 - 21 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பிப்ரவரி 01, 2020 சனிக்கிழமை அன்று தாக்கல் செய்தார்.

அந்த மொத்த பட்ஜெட்டிலேயே அப்பட்டமாக நடுத்தர மக்களை பாதிக்கும் விஷயம் என்றால் அது வருமான வரி தான். இதுவரை ஒரே வருமான வரி வரம்பாக இருந்ததை, நம் நிதி அமைச்சர் இரண்டு வகையான வருமான வரி வரம்புகளாக மாற்றி இருக்கிறார்.

அதோடு சில வரிக் கழிவுகளை பெற முடியாது என்றும் சொல்லி இருக்கிறார். ஏற்கனவே வரிக் கழிவு இருக்கும் சில வருமானங்களுக்கும் இந்த புதிய வருமான வரி வரம்பிலும் வரிக் கழிவு தொடரும் எனச் சொல்லி இருக்கிறார். வரி வரம்புகளில் இருந்து தொடங்குவோம்.

பழைய வருமான வரி வரம்பு

1 ரூபாய் முதல் 2.5 லட்சம் ரூபாய் வரை 0 % வரி

2.5 லட்சம் முதல் 5.0 லட்சம் வரை 5 % வரி

5.0 லட்சம் முதல் 10 லட்சம் வரை 20 % வரி

10 லட்சத்துக்கு மேல் 30 % வரி செலுத்த வேண்டும் என வரம்புகள் இருக்கின்றன.

புதிய வருமான வரி வரம்பு

1 ரூபாய் முதல் 2.5 லட்சம் ரூபாய் வரை 0 % வரி

2.5 லட்சம் முதல் 5.0 லட்சம் வரை 5 % வரி

5.0 லட்சம் முதல் 7.5 லட்சம் வரை 10 % வரி

7.5 லட்சம் முதல் 10.0 லட்சம் வரை 15 % வரி

10.0 லட்சம் முதல் 12.5 லட்சம் வரை 20 % வரி

12.5 லட்சம் முதல் 15.0 லட்சம் வரை 25 % வரி

15 லட்சத்துக்கு மேல் 30 % வரி செலுத்த வேண்டும்.

ஆனால் 2 கன்டிஷன்

1. மேலே சொல்லி இருக்கும் பழைய வருமான வரி வரம்பு அல்லது புதிய வருமான வரி வரம்பு என எதை வேண்டுமானாலும் நாமே தேர்வு செய்து கொள்ளலாம்.

2. புதிய வரி வரம்புகளைத் தேர்வு செய்பவர்கள், சுமாராக 70 வரிக் கழிவுகள் அல்லது வரிச் சலுகைகளைப் பெற முடியாது.

ஒரு ஸ்பெஷல் சலுகை

புதிய வருமான வரி வரம்பைத் தேர்வு செய்து வரி தாக்கல் செய்பவர்களுக்கு, ஒரு நல்ல சலுகை போல சில வகையான வருமானங்களுக்கு வருமான வரி விலக்கு கொடுத்து இருப்பதாக எகமானிக் டைம்ஸ் வலைதளத்தில் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. அதாவது சில வழிகளில் இருந்து வரும் பணத்துக்கு வருமான வரி செலுத்த வேண்டாம் எனச் சொல்லி இருக்கிறார்கள். அது என்ன வழிகள்..? வாங்க பாப்போம்.

அஞ்சலக சேமிப்புத் திட்டங்கள்

இந்தியா முழுவதும் பரவி இருக்கும் அஞ்சலகங்களில், முதலீட்டுத் திட்டங்களும் நடத்தி வருகிறார்கள். இந்த அஞ்சலக முதலீட்டுத் திட்டங்களில், சேமிப்பு கணக்குகளில் (Savings Account) பணத்தை முதலீடு செய்வதும் மூலம் ஆண்டுக்கு 3,500 ரூபாய் வரை வரும் வருமானத்துக்கு வரி செலுத்த வேண்டாமாம். இதுவே ஜாயிண்ட் கணக்காக இருந்தால் ஒரு ஆண்டுக்கு 7,000 ரூபாய் வரை வரும் வட்டி வருமானத்துக்கு வருமான வரி செலுத்த வேண்டாமாம். வருமான வரிச் சட்டம் 80TTA பிரிவின் கீழ் வரிக் கழிவு பெறலாமாம்.

Gratuity பணம்

புதிய வரி வரம்பில், ஒருவர் ஒரு நிறுவனத்தில், ஒரு குறிப்பிட்ட ஆண்டுகள் வேலை பார்த்துவிட்டு ஓய்வு பெற்றாலோ அல்லது பணியில் இருந்து விலகினாலோ பணி நன்கொடை கொடுப்பார்கள். இதை தான் ஆங்கிலத்தில் gratuity என்கிறோம். gratuity-ஆக வரும் பணத்தில் யாருக்கு, எவ்வளவு பணத்துக்கு வரிச் சலுகை கிடைக்கும் என்பதையும் சொல்லி இருக்கிறார்கள்.

அரசு & தனியார்

புதிய வரி வரம்பின் கீழ், ஒரு அரசாங்க ஊழியர்கள் வாங்கும் மொத்த Gratuity பணத்துக்கும் வரிச் செலுத்தத் தேவை இல்லை. இதுவே தனியார் நிறுவனத்தின் வேலை பார்க்கிறவர் பெறும் Gratuity தொகைக்கு அதிகபட்சமாக வாழ்நாளில் 20 லட்சம் ரூபாய் வரை வரி செலுத்தத் தேவை இல்லையாம்.

முழு தள்ளுபடி

புதிய வருமான வரி வரம்பில், ஒரு ஊழியர் இறந்துவிட்டால் அவர்களுக்கு கொடுக்கப்படும் Gratuity தொகை முழுமையாக வரி செலுத்தத் தேவை இல்லையாம். Gratuity-ம் நம் சம்பளத்தில் ஒரு பகுதி தானே. ஆக நாம் சம்பாதிப்பதாகவே இதை கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். இந்த வரிக் கழிவை வருமான வரி சட்டப் பிரிவு 10 (10)-ன் கீழ் பெறலாமாம். மேற்கொண்டு விவரங்களுக்கு CBDT Notification no. S.O. 1213(E), 8 மார்ச் 2019-ஐப் பார்க்கவும்.

லைஃப் இன்சூரன்ஸ்

புதிய வரி வரம்பின் கீழ், லைஃப் இன்சூரன்ஸ் பாலிசிகளில் இருந்து வரும் மெச்சூரிட்டி தொகைக்கு முழுமையாக வரி செலுத்தத் தேவை இல்லையாம். இந்த வரிக் கழிவை பிரிவு 10(10D)-ன் கீழ் பெறலாமாம். ஆக லைஃப் இன்சூரன்ஸில் முதலீடு செய்வது அத்தனை வீண் ஒன்றும் இல்லை.

விடுமுறை நாட்கள் பணம்

பொதுவாக ஒரு அலுவலகத்தில் ஆண்டுக்கு குறிப்பிட்ட நாட்களை

மருத்துவ விடுப்புகள்,

சம்பளத்துடன் கூடிய விடுப்புகள்,

அவசர கால விடுப்புகள்

எனக் கொடுப்பார்கள். ஒருவர், ஒரு நிறுவனத்தில் இருந்து விலகும் போது, இந்த சம்பளத்துடன் கூடிய விடுப்புகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டு அதை பணமாகக் கொடுப்பார்கள். அப்படி விடுமுறை நாட்களுக்கு கொடுக்கும் பணத்தில் 3 லட்சம் வரை வரிக் கழிவு பெறலாமாம்.

முதலாளியின் பரிசு

புதிய வருமான வரி வரம்பில், நாம் வேலை பார்க்கும் நிறுவனம், நம் வேலை பிடித்துப் போய் 5,000 ரூபாய்க்குள் பணத்தை பரிசாகக் கொடுத்தால், அதற்கு வரி செலுத்த வேண்டாமாம். இதுவரை உங்கள் நிறுவனம் உங்களுக்கு இப்படி ஏதாவது பரிசு கொடுத்து இருக்கிறதா என்ன..? கொடுத்து இருந்தால், கீழே கமெண்டில் பகிருங்களேன்.

செல்வ மகள் சேமிப்புத் திட்டம்

புதிய வருமான வரி வரம்பில், சுகன்யா சம்ரிதி யோஜனா (Sukanya Samriddhi Yojana) திட்டத்தில் முதலீடு செய்து வரும் வட்டி வருமானத்துக்கு, முழுமையாக வரிக் கழிவு இருக்கிறதாம். ஆனால் இந்த திட்டத்தின் கீழ் முதலீடு செய்ய 80சி பிரிவின் கீழ் வரிக் கழிவு கொடுக்கப் படாது என்பதையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளவும்.

மற்றவைகள் 1

கீழே சொல்லப்பட்டு இருப்பவைகள் எல்லாமே புதிய வருமான வரி வரம்புக்கு பொருந்தக் கூடியவைகள்.

1. விருப்ப ஓய்வு பெற்றால், ஓய்வு பெற்றதற்கான பணச் சலுகைகள் (Retirement Benefit) கிடைக்கும். அதில் 5 லட்சம் ரூபாய் வரை வரி செலுத்த வேண்டாமாம்.

2. நாள் ஒன்றுக்கு, அதிகபட்சமாக ஒரு டோக்கனுக்கு 50 ரூபாய் என, இரண்டு வேளை உணவுக்கு, கொடுக்கும் உணவு கூப்பன்களுக்கு வரி செலுத்த வேண்டாமாம்.

மற்றவைகள் 2

3. என்பிஎஸ் திட்டத்தில் இருந்து பெறும் மெச்சூரிட்டி பணத்துக்கு வரி செலுத்தத் தேவை இல்லையாம்.

4. பிபிஎஃப்-ல் கிடைக்கும் வட்டி மற்றும் மெச்சூரிட்டி தொகைக்கு முழு வரிக் கழிவு பெறலாம்.

5. இபிஎஃப்-ல் இருந்து கிடைக்கும் வட்டி 9.5 சதவிகிதம் வரை வரிக் கழிவு பெறலாமாம்.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post