கோவை: கோவை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ்2 மாணவ, மாணவிகளுக்கு இரண்டாம் திருப்பு தேர்வுகள் நேற்று துவங்கியது. பிளஸ்2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுதேர்வுகள் மார்ச் மாதம் 3ம் தேதி தொடங்க உள்ளது. இதை அடுத்து மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்துவதற்காக பள்ளிகளில் தீவிர பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் கோவை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் பிளஸ்2 மாணவர்களுக்கு இரண்டாம் திருப்புத் தேர்வு மற்றும் பத்தாம் வகுப்பிற்கு முதல் திருப்பு தேர்வு நேற்று நடந்தது. இதில், பிளஸ்2 மாணவர்களுக்கு நேற்று மொழிப்பாடம் தாள் ஒன்றுக்கான தேர்வு நடந்தது. இன்று மொழிப்பாடம் தாள் இரண்டிற்கான தேர்வு நடக்கிறது. நாளை ஆங்கிலம் முதல் தாளும், 23ம் தேதி ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வும் நடக்கிறது.
24ம் தேதி கணிதம், விலங்கியல், நுண்ணுயிரியல், சத்துணவியல், ஆடை வடிவமைத்தல், உணவுமேலாண்மையும் குழந்தை நலனும், வேளாண் செயல்முறைகள், அரசியல் அறிவியல், செவிலியம்(பொது) தேர்வுகளும், 27ம் தேதி வணிகவியல், மனைவியியல், புவியியல், 28ம் தேதி இயற்பியல், பொருளியல், பொது இயந்திரவியல்-1, மின்இயந்திரங்களும் சாதனங்களும்-1, கணக்கு பதிவியலும் தணிக்கையியலும், அலுவலக மேலாண்மை, 29ம் தேதி கணிப்பொறி அறிவியல், தட்டச்சு ஆங்கிலம், தமிழ், புள்ளியியல் செய்முறை தேர்வு, 30ம் தேதி வேதியியல், கணக்குப்பதிவியல், பொது இயந்திரவியல்2, மின் இயந்திரங்களும் சாதனங்களும்2, 31ம் தேதி உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிகக் கணிதம் தேர்வுகள் நடக்கிறது.
தேர்வுகள் காலை 10 மணி முதல் மதியம் 1.15 வரை நடக்கிறது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் திருப்புத் தேர்வு மொழிப்பாடம் முதல் நேற்றும், இரண்டாம் தாள் தேர்வு இன்றும் நடக்கிறது. நாளை ஆங்கிலம் முதல் தாள் தேர்வும், 23ம் தேதி ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வும், 24ம் தேதி கணிதம், 27ம் தேதி அறிவியல் மற்றும் 28ம் தேதி சமூக அறிவியல் தேர்வு நடக்கிறது. தேர்வுகள் காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை நடக்கிறது.
Tags
kalvi news