பிளஸ்–2 செய்முறை தேர்வுகளை பிப்ரவரி முதல் வாரம் முதல் நடத்தி அதன் மதிப்பெண்களை பிப்ரவரி 28–ந் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும் என்று அரசு தேர்வுத்துறை இயக்குனர் கு.தேவராஜன் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் பிளஸ்–2 தேர்வு மார்ச் மாதம் 3–ந் தேதி தொடங்கி மார்ச் 25–ந் தேதி முடிவடைகிறது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மார்ச் 26–ந் தேதி தொடங்கி ஏப்ரல் 9–ந் தேதி முடிகிறது.
பிளஸ்– 2 தேர்வை இந்த ஆண்டு 8 லட்சத்து 26 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள். இதுபோல எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 11 லட்சம் பேர் எழுத உள்ளனர்.வழக்கமாக பிளஸ்–2 மாணவ–மாணவிகளுக்கு செய்முறை தேர்வு (பிராக்டிகல்) பிப்ரவரி மாதம் 1–வது வாரத்தில் தொடங்கும்.
இந்த ஆண்டு பிளஸ்–2 செய்முறை தேர்வு குறித்து அரசு தேர்வுகள் துறை இயக்குனர் கு.தேவராஜனிடம் கேட்டதற்கு, அவர் அளித்த பதில் வருமாறு:–
பிளஸ்–2 தேர்வு பணியில் ஆசிரியர்களை நியமிக்கும் பணி நடைபெற உள்ளது. இந்த பணியை வழக்கமாக முதன்மை கல்வி அதிகாரிகளே செய்வார்கள். இந்த வருடம் நாங்களே செய்கிறோம். ஆனால் ஆசிரியர்களின் பட்டியலை முதன்மை கல்வி அதிகாரிகள்தான் தருவார்கள்.பிளஸ்–2 செய்முறை தேர்வு நடத்துவது அந்தந்த முதன்மை கல்வி அதிகாரிகளின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சில பள்ளிகளில் மாணவர்கள் குறைவாக இருப்பார்கள். அவர்கள் ஒரே வாரத்தில் செய்முறையை நடத்தி முடிப்பார்கள். சில பள்ளிகளில் நிறைய மாணவர்கள் இருப்பார்கள். அவர்கள் செய்முறை தேர்வை நடத்த கூடுதல் நாட்கள் தேவைப்படலாம். எனவே செய்முறை தேர்வை நடத்தி முடிக்க உத்தரவிடுவது அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் பொறுப்பு.
அரசு தேர்வுத்துறையை பொறுத்தவரை பிப்ரவரி மாதம் 28–ந் தேதிக்குள் பிளஸ்–2 செய்முறை தேர்வு மதிப்பெண் அரசு தேர்வுத்துறைக்கு வந்து சேர வேண்டும் என்று கூற உள்ளோம்.இவ்வாறு கு.தேவராஜன் தெரிவித்தார்.
Tags
kalvi news