41 செவ்விலக்கியங்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பு

காரைக்குடி: "தமிழின் பெருமையை, உலகறியச் செய்ய சென்னை செம்மொழி தமிழாய்வு மையம் மூலம், 41 செவ்விலக்கியங்கள், ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு வருகின்றன" என அம்மையத்தின் மொழிபெயர்ப்பு துறை தலைவர் தெரிவித்தார்.
காரைக்குடி, அழகப்பா அரசு கலை கல்லூரியில் நடந்த, "பல்துறை தோற்றுவாய்க்கு சங்க இலக்கியத்தின் பங்களிப்பு" என்ற தேசிய கருத்தரங்கத்தில் மொழிபெயர்ப்பு துறை தலைவர் மருதநாயகம் பேசியதாவது: தமிழ் சங்க இலக்கியங்களில், தத்துவ இயல், வானவியல், விலங்கியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் தாக்கம் உள்ளது.
"யாதும் ஊரே; யாவரும் கேளிர்" என உலகம் தழுவிய மானுடத்தை அறிவித்தது தமிழ்தான். அதே சமயம், கிரேக்க தத்துவ அறிஞர்களான, பிளாட்டோ, அரிஸ்டாட்டில், சீன தத்துவ அறிஞரான, கன்ப்யூசியஸ் எழுதிய நூல்களில், உலகளாவிய தத்துவம் கிடையாது. தமிழ் மொழியை, பிற மொழிகளில் மொழி பெயர்க்கும்போது, நம்முடைய சொற்கள், தொடர்கள், உத்திகள், உவமைகள், மற்றவருக்கு கிடைக்கும். இதனால், பண்பாட்டு புரிதல் பரிமாறப்படும்.
"மனித இனம் ஒன்று" என்ற பரவலான எண்ணத்துக்கு, மொழி பெயர்ப்பு உதவுகிறது. மொழி பெயர்ப்பினால் தான், நூல்கள் உயிர் வாழ்கின்றன. செம்மொழி தமிழாய்வு நிறுவனம் மூலம் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, புறநானூறு, நற்றிணை, குறுந்தொகை உட்பட, 41 செவ்விலக்கியங்கள், ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு வருகின்றன. அவற்றில், இதுவரை, 10 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. மீதமுள்ள, 31 செவ்விலக்கியங்களை மொழி பெயர்க்க, ஆறு ஆண்டுகள் ஆகலாம்.
ஆங்கிலத்தில் மட்டுமன்றி, கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் மராத்தியிலும், மொழி பெயர்த்து வருகிறோம். இவ்வாறு, அவர் பேசினார்.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post