பிளஸ் 2 தேர்வுக்காக மாணவர் புகைப்படம், பதிவு எண்கள் உள்ளிட்ட பல விவரங்களுடன் 60 லட்சம் விடைத்தாள்களின் முதல் பக்க தாள் அச்சடிக்கும் பணி சென்னையில் மும்முரமாக நடந்து வருகிறது.
பொதுத் தேர்விலும், தேர்விற்குப் பின் வழங்கப்படும் மதிப்பெண் பட்டியலிலும் எந்த குளறுபடியும் வரக்கூடாது என்பதற்காக பல புதிய திட்டங்களை தேர்வுத் துறை அமல்படுத்தி உள்ளது. இதில், விடைத்தாளில் செய்யப்பட்டுள்ள மாற்றம் மிகவும் முக்கியமானது.வழக்கமாக விடைத்தாளின் முதல் பக்கத்தில் பதிவு எண், பெயர், தேர்வு பாடத்தின் பெயர் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் மாணவர் கையால் எழுதுவர். இதில், மாணவர் எழுத்தில் தவறு பதிவு எண்களை நிரப்புவதில் தவறு என பல பிரச்னைகள் தொடர்ந்து வந்தன.
இந்த பிரச்னைகளை முற்றிலும் நீக்கும் வகையில் வரும் பொதுத் தேர்வில் புதிய முறையில் விடைத்தாள் வழங்கப்படுகிறது.அதன்படி, வெற்று விடைத்தாள் கட்டின் முதல் பக்க தாளில் மாணவர் வெறும் கையெழுத்து மட்டுமே போட வேண்டியிருக்கும்.
மற்றபடி மாணவரின் புகைப்படம், பதிவு எண், அன்றைய தேர்வு பாடம், எந்த மீடியம், தேர்வு மையத்தின் பெயர், தேதி உட்பட அனைத்து தகவல்களும் ஏற்கனவே அச்சடிக்கப்பட்டு இருக்கும்.இந்த முதல் பக்கத்தை தேர்வுக்கு சில நாட்களுக்கு முன் அந்த தேர்வு மையங்களில் வைத்து விடை எழுதுவதற்கான பக்கங்களுடன் சேர்த்து தைக்கப்படும். இதற்கு தேவையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.விரைவில் வினியோகம்இதற்காக 60 லட்சம் விடைத்தாள்களுக்கு முதல் பக்க தாள் அச்சடிக்கும் பணி சென்னையில் நடந்து வருகிறது.
ஒவ்வொரு தேர்வு மையம் வாரியாக அச்சடிக்கப்பட்ட விடைத்தாள் விரைவில் அனுப்பப்பட உள்ளது. இதேபோல், செய்முறை தேர்வு விவரங்களை பதிவு செய்யும் பணி தற்போது சாதாரண முறையில் நடக்கிறது.
இதனால் செய்முறை தேர்வு பாடம், அவற்றுக்கான மதிப்பெண் விவரங்களை பதிவு செய்தல் போன்றவற்றிலும் தவறுகள் நடக்கின்றன.இதற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஒரு படிவத்தை தயார் செய்து கம்ப்யூட்டர் மூலம் உரிய விவரங்களை பதிவு செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இதற்கான முடிவு விரைவில் எடுக்கப்படும் என தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
Tags
kalvi news