டி.டி. மருத்துவக் கல்லூரியின் 2011-12 மற்றும் 2012-13 ஆம் ஆண்டு எம்.பி.பி.எஸ். மாணவர்களுக்கு 2014-15 ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக புதிய இடங்களை அரசு மருத்துவக் கல்லூரிகளில் உருவாக்க அரசுக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி அளிக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் குன்னவலத்தில் டி.டி. மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வந்தது. 2010-11 ஆம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் 150 மாணவர்கள் சேர்க்கைக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி வழங்கியது.
இதைத் தொடர்ந்து, 2011-12 ஆம் ஆண்டில் 150 மாணவர்களை சேர்ப்பதற்கு அனுமதி கோரி இந்திய மருத்துவக் கவுன்சிலிடம் டி.டி. மருத்துவக் கல்லூரி நிர்வாகம் விண்ணப்பித்தது. இந்த விண்ணப்பத்தை 2011-ஆம் ஆண்டு மே மாதம் எம்.சி.ஐ. நிராகரித்தது.
இந்த நிலையில், எம்.சி.ஐ-யிடம் அனுமதி பெறாமல் 2011-12 ஆம் கல்வியாண்டில் 103 மாணவர்கள் டி.டி. மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து எம்.சி.ஐ-யின், அனுமதி நிராகரிப்பு உத்தரவை ரத்து செய்யக் கோரி டி.டி. மருத்துவக் கல்லூரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில், எம்.சி.ஐ-யின் உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து எம்.சி.ஐ. மேல் முறையீடு செய்தது. இந்த மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து, மருத்துவக் கல்லூரிக்கு புதிய அனுமதி கோரி விண்ணப்பிக்க டி.டி. மருத்துவக் கல்லூரி நிர்வாகத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி டி.டி. மருத்துவக் கல்லூரி, எம்.சி.ஐ-யிடம் புதிதாக அனுமதி கோரி விண்ணப்பம் தாக்கல் செய்தது. இந்த விண்ணப்பத்தையும் எம்.சி.ஐ. நிராகரித்தது.
இந்த நிலையில் எம்.சி.ஐ. அனுமதி பெறாமல் 2012-13 ஆம் ஆண்டில் எம்.பி.பி.எஸ். படிப்பில் 150 மாணவர்களை டி.டி. மருத்துவக் கல்லூரி சேர்த்தது. இதன் பிறகு எம்.சி.ஐ. முடிவை எதிர்த்து கல்லூரி நிர்வாகம் மீண்டும் வழக்கு தொடர்ந்தது.
இந்த நிலையில், டி.டி. மருத்துவக் கல்லூரியை அரசு ஏற்று நடத்த உத்தரவிடக் கோரி, கல்லூரி மாணவர்கள் பாதுகாப்பு சங்கம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த மனு நீதிபதி கே.கே.சசிதரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தலைமை வழக்குரைஞர் ஏ.எல்.சோமயாஜி, அரசு சிறப்பு வழக்குரைஞர் டி.கிருஷ்ணகுமார் ஆஜராகினர். விசாணையின் போது, டி.டி. மருத்துவக் கல்லூரியை ஏற்று நடத்த அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டால் அதை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், கல்லூரியின் மீது கடன் இல்லாமல் இருந்தால் மட்டுமே ஏற்று நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும், இந்தக் கல்லூரியை அரசு ஏற்று நடத்துவதற்கான பரிசீலனையும் நடைபெற்று வருகிறது. எனவே, கல்லூரியின் அனைத்து சொத்துகள் மற்றும் கடன்கள் குறித்து தெரிவிக்க வேண்டும் என அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
விசாரணைக்குப் பிறகு நீதிபதி சசிதரன் பிறப்பித்த உத்தரவு: கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 14-ஆம் தேதி உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி டி.டி. மருத்துவக் கல்லூரியின் 2010-11 ஆம் ஆண்டு எம்.பி.பி.எஸ் மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் அனுமதி வழங்கப்பட்டது. அதே போன்று, 2011-12 மற்றும் 2012-13 ஆம் ஆண்டு எம்.பி.பி.எஸ். மாணவர்களுக்கும், 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2014-15 ஆம் கல்வி ஆண்டில் அனுமதி வழங்க வேண்டும்.
இதற்கான கூடுதல் இடங்களை உருவாக்கி அதில் இந்த மாணவர்களை சேர்க்க வேண்டும். மேலும், டி.டி. மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்காக இந்த ஒரு முறை மட்டுமே கூடுதல் இடங்களை உருவாக்க வேண்டும்.
இந்தக் கல்வி ஆண்டில் சேர்க்கப்படும் மாணவர்களை முதலாம் ஆண்டு மாணவர்களாகவே கருத வேண்டும். இது தொடர்பாக மாணவர்கள் எந்த உரிமையும் கோர முடியாது. அரசு கல்லூரிகளில் மாணவர்களை சேர்ப்பது தொடர்பான நடவடிக்கைகளை பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.
அனுமதி ரத்து செய்வது குறித்து முடிவு எடுப்பதற்கு முன்பு டி.டி. மருத்துவக் கல்லூரிக்கு எம்.சி.ஐ.நோட்டீஸ் அனுப்பவில்லை. அவர்களது விளக்கத்தைக் கேட்க போதிய வாய்ப்பு வழங்கவில்லை.
மேலும், இது போன்று கல்வி நிறுவனங்களால் ஏற்படும் பிரச்னைகளை மாநில அரசும், இந்திய மருத்துவக் கவுன்சிலும் முன்னதாகவே தடுக்க வேண்டும். மேலும், கல்லூரியில் சேருவதற்கு தகுதியான கல்வி நிறுவனங்களின் பட்டியலை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வெளியிட வேண்டும். மேலும், மாணவர்களும் தாங்கள் சேர இருக்கும் கல்லூரிகள் குறித்த நிலையைத் தெரிந்து கொள்ள வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags
kalvi news