அரசு பள்ளிகள் மீது நம்பிக்கை இழக்கும் பெற்றோர் செருப்பு முதல் லேப்டாப் வரை கொடுத்தும் தேய்ந்து வரும் மாணவர் சேர்க்கை

இந்தியாவின் இதயம் கிராமங்களில் உள்ளது என்றார் காந்தி. தமிழகம் மட்டுமல்ல... நாட்டின் பல பகுதிகளிலும் கிராமங்களில் உள்ள திறமை மிகுந்த குழந்தைகள் பெரும்பாலும் அரசு பள்ளிகளையே நம்பி  உள்ளனர். கல்வித்துறை அளித்த கணக்குப்படி, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் மட்டும் 92 லட்சம் மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர் என்பது ஆறுதலான விஷயம். ஆனால் தனியார் பள்ளிகளை ஒப்பிடுகையில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் ஆண்டு தோறும் குறைந்து வருவது தான் அதிர்ச்சியூட்டும் விஷயம்.

கடந்த 2009-10ம் ஆண்டில் அரசு ஆரம்ப பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் 43.67 சதவீதம். அதே ஆண்டில் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் சேர்க்கை விகிதம் 34.5 சதவீதம். ஆனால் கடந்தாண்டில் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. அரசு பள்ளி சேர்க்கை விகிதம் 36.58 சதவீதமாகவும், தனியார் பள்ளி சேர்க்கை விகிதம் 45.41 சதவீதமாகவும் உள்ளது. எல்கேஜி படிப்புக்கு கூட மாதத்திற்கு ஆயிரக்கணக்கில் கறக்கும் பள்ளிகளை தேடி செல்லும் அளவுக்கு தமிழர்களின் பொருளாதார நிலை ஒன்றும் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக உயர்ந்து விடவில்லை. ஆனாலும் விண்ணப்பம் வாங்குவதற்கே விடிய, விடிய பள்ளி வாயில்களில் காத்திருக்கும் நிலையை காணமுடிகிறது. குழந்தைகளின் எதிர்காலத்திற்கு தரமான கல்வியை தரவேண்டும் என்ற கட்டாயத்தின் வெளிப்பாடு தான் இது என்பதில் ஐயமில்லை.

 சமச்சீர் கல்வி அமல்படுத்தப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு ஆண்டு தோறும் அரசு வாரி இறைக்கிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு புத்தகம், நோட்டு, பேக், சைக்கிள், செருப்பு, கணித உபகரணப் பெட்டி, சீருடை, வண்ணப் பென்சில், லேப் டாப் மற்றும் பள்ளியில் இடைநிற்றலை தவிர்க்க மாணவ, மாணவியருக்கு நிதியுதவியும் வழங்கப்படுகிறது. கடந்தாண்டில் மட்டும் பள்ளி கல்வியில் நலத்திட்ட உதவிகளுக்காக மட்டும் ஸி16,965.30 கோடி ஒதுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்தாண்டு முதல் ஆங்கில வழி வகுப்புகள் பல பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ளது. ஆனாலும் கடந்த கல்வியாண்டை ஒப்பிடுகையில் நடப்பாண்டிலும் மாணவர் சேர்க்கை குறைந்திருப்பதாகவே கல்வித்துறையினர் கூறுகின்றனர். அடுத்து வரும் ஆண்டுகளில் மேலும் சரிவு தொடராது என்பதற்கு உத்தரவாதம் இல்லை. அரசு பள்ளிகளில் என்ன குறை...?: தனியார் பள்ளிகளை ஒப்பிடுகையில் மாணவர்களின் தேவைகளை அரசு ஓரளவு பூர்த்தி செய்துள்ளது என்பது உண்மை. ஆசிரியர் நியமனத்திலும் நிலைமை ஓரளவு மாறியுள்ளது. முன்பு ஆசிரியரே இல்லாத பள்ளிகளில் இப்போது 30 குழந்தைகளுக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதை 20:1 என்ற விகிதத்தில் நியமிக்கவேண்டும் என்பது ஆசிரியர்கள் கோரிக்கை. 

ஆசிரியர் எண்ணிக்கை அதிகரித்தால் மட்டும் சேர்க்கை உயர்ந்து விடப்போவதில்லை. பிரச்னையே குழந்தைகளின் எதிர்கால நலன் குறித்து பெற்றோருக்கு உள்ள அச்சமும், அரசு பள்ளிகள் மீதான அவ நம்பிக்கையும் தான்.  அரசு பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர்கள் மட்டுமின்றி, அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் உயர் அதிகாரிகள் கூட அரசு பள்ளிகளை நம்பி குழந்தைகளை ஒப்படைக்க முன்வருவதில்லை. இதுபோன்ற சூழலில் கிராமப்புற சாதாரண மக்கள் மட்டும் அரசு பள்ளிகளை நாடி வரவேண்டும் என எதிர்பார்ப்பது நகைப்புக்குரிய முரண். கல்வியை வழங்குவது அரசின் முக்கிய பொறுப்பு. பள்ளி கல்வி வரையிலும் அரசாங்க கல்வி நிலையங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டிய வகையில் மாற்றங்கள் உருவாக்கினால் தான் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும்.

நாட்டில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பலரும் ஆரம்ப கல்வியை அரசு பள்ளிகளில் முடித்தவர்கள் தான். அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி மாணவர்களை மேம்படுத்துவதில் ஆர்வம் காட்டிய ஆசிரியர் எண்ணிக்கை அப்போது அதிகம். ஆனால் இப்போது தகுதி தேர்வு நடத்தி தான் ஆசிரியர்களை தேர்வு செய்யவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம். இது தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும். அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களிடம் அர்ப்பணிப்பு உணர்வு குறைந்துள்ளது. மேலும் அரசு சார்ந்த புள்ளி விவரங்கள் சேகரிப்புக்கு களப்பணியாளர்களாக ஆசிரியர்கள் இந்த போக்கு களையப்படவேண்டும். கற்பிப்பதில் உள்ள கோளாறு மட்டும் காரணம் அல்ல. மக்களின் மனநிலை மாறினால் மட்டுமே அரசு பள்ளிகள் நிரம்பி வழியும். மக்களின் மனநிலை மாறுவதற்கு அரசு பள்ளிகளின் நிர்வாக செயல்பாட்டை செழுமைப்படுத்துவது மட்டும் தான் மாற்றத்திற்கான விதையாக அமையும்.

கண்காணிப்பு அவசியம்

தேசிய குழந்தைகள் உரிமை ஆணையத்தின் முன்னாள் தமிழக பிரதிநிதி மற்றும் மனித உரிமைகள் ஆர்வலர் ஹென்றி டிபேன், மாவட்டம் தோறும் உள்ள அரசு பள்ளிகளை ஆய்வு செய்து ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தியுள்ளார். ஹென்றி டிபேன் கூறியதாவது: மற்ற மாநிலங்களை விட அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்வி சட்டத்தை அமல்படுத்துதல் மற்றும் உள் கட்டமைப்பு வசதி மேம்பாடு, முப்பருவக் கல்வி முறை, முழு மற்றும் தொடர் மதிப்பீட்டு முறை போன்ற விஷயங்களில் உதாரண மாநிலமாக திகழும் அளவுக்கு நம்மிடம் திட்டங்கள் உள்ளன. ஆனால் அவை பள்ளிகளில் முழுமையாக செயல்படுத்தப்படுகிறதா என்பது கேள்விக்குறியாக உள்ளது. 

கண்காணிப்பு பணியில் இருக்கும் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் 120 பள்ளிகள் வரை ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. இலவச திட்டங்களை செயல்படுத்த வேண்டிய பொறுப்பும் உள்ளதால் பள்ளிகள் முழுமையாக கண்காணிக்கப்படுவதில்லை. கல்வியில் பின் தங்கிய பகுதிகளில் ஆசிரியர் பணியிடங்கள் தொடர்ந்து காலியாகவே உள்ளது. இது போன்ற குறைபாடுகள் சரிசெய்யப்பட்டால் மட்டுமே கல்வித் தரத்தை உயர்த்த முடியும். ஆசிரியர்கள் பொறுப்பை உணர்ந்து பணியாற்றினால் தான் அரசு பள்ளியின் கல்வித் தரம் உயரும். பொறுப்பை தட்டிக் கழிக்கும் ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை அவசியம் என்றார் டிபேன்.

8ம் வகுப்பு வரை ஆல்பாஸ் தேவையில்லை 

அரசு பள்ளிகள் நிலை குறித்து யுனிசெப் குழந்தைகள் ஆலோசகர் பாலமுருகன் கூறுகையில், ‘‘கிராமப்புற பள்ளிகளில் கழிவறை, குடிநீர் வசதிகள் கூட சரிவர இல்லை. கிராம கல்விக்குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் பள்ளிகள் தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவதில்லை. இதில் அரசியல் தான் முக்கிய இடம் பெறுகிறது. ஆசிரியர்களுக்கு தங்களது பணியில் அர்ப்பணிப்பும் இல்லை. எட்டாம் வகுப்பு வரை தேர்ச்சி விகிதம் காட்ட வேண்டிய அவசியம் இல்லை. ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டாலும், கற்பித்தல் பணியில் அக்கறை காட்டாத நிலையில் அரசுப் பள்ளிகளில் கல்வித் தரம் மிகவும் பின்தங்கி வருகிறது,’’ என்றார்.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post