பண்டிகைக் கால விடுமுறைகளும், மாணவப் பருவமும்

மாணவர்களுக்கு பரீட்சை காலம் எப்படி கடினமானதோ அதற்கு நேர் எதிரானது விடுமுறைகளும், பண்டிகைக் காலங்களும்.
விடுமுறைகள் என்றால் விளையாட்டுக்களோடும், பொழுது போக்குகளோடும் மட்டும் கடந்து செல்லும். ஆனால் பண்டிகைக்கால விடுமுறைகள் அப்படிப்பட்டது அல்ல. புதிய உடை, பல்சுவை பலகாரங்கள், உணவு வகைகள், கொண்டாட்டம் என மற்ற விடுமுறைகளை விட மாறுபட்டு அதிக மகிழ்ச்சியை தருவதாக இருக்கும்.
ஆண்டுதோறும் ஒரே விதமான பண்டிகைகளே இருந்தாலும், ஓவ்வொரு ஆண்டுக்குமான பண்டிகைக் கொண்டாட்டங்களானது சூழ்நிலைகள், வயது ஆகியவற்றைப் பொருத்து மாற்றம் காண்கிறது. ஒவ்வொரு மதத்திற்கும் ஒவ்வொரு பண்டிகைகள் இருந்தாலும், கொண்டாட்டங்கள் படிக்கும் காலத்தில் பொதுவானதாக இருக்கிறது. பண்டிகைகளின் போது மற்ற நண்பர்களையும் அழைத்து பலகாரங்களை உண்ண வைப்பது, உணவு வழங்குவது என நட்பையும், ஒற்றுமையையும் அதிகப்படுத்துவதாக அந்தக் காலங்கள் விளங்குகிறது.
வார இறுதிகளில் வரும் பண்டிகைகள் மாணவர்களிடையே "ஒரு விடுமுறை குறைந்து விட்டதே" என சிறு சோர்வை ஏற்படுத்தும் வகையில் இருந்தாலும் கொண்டாட்டங்களில் மட்டும் மாற்றம் இருப்பதில்லை. பொங்கல் கால விடுமுறைகள் பெரும்பாலும் அப்படி இருப்பதில்லை, எப்படி இருந்தாலும் உறுதியாக 4 நாட்கள் தொடர் விடுமுறையாக கிடைக்கும் வகையில் வந்துவிடுகிறது.
பலகாரங்கள் பரிமாற்றம்
ஒவ்வொரு பண்டிகைக்குமான தின்பண்டங்களுக்கு நண்பர்கள் மத்தியில் போட்டியே இருக்கும். தீப ஒளித்திருநாளாக இருந்தால் முறுக்கு, அதிரசம், சீடை போன்ற பலகாரங்களும், கிறிஸ்துமஸ் என்றால் கேக்குகளும், ரம்ஜான் என்றால் பிரியாணிகளுமாக உடன் படிக்கும் நண்பர்களால் வீடுகள் களை கட்டும். பாரபட்சம், விருப்பு, வெறுப்புகளின்றி பகிர்ந்து உண்ணும் பண்டிகைக் காலங்கள் இனிப்புகளோடு இனிமையையும் தருகிறது.
தமிழர் திருநாள்
அனைத்து தரப்பினராலும் மகிழ்ச்சிகரமாக கொண்டாடப்படும் பண்டிகையாக, ஒட்டுமொத்த தமிழர்களின் திருநாளாகவும் பொங்கல் பண்டிகை இருப்பதால், தமிழகத்தின் அனைத்து வீடுகளும் இதனை எதிர்நோக்கி இருக்கின்றன.  மாணவர்களைப் பொறுத்த வரையில் மாறிவரும் கல்வி முறைகளும், பயிற்சி மையங்களும் பண்டிகைகளை ஒரு சுதந்திரமான நாளாக உணரும் வகையில் மட்டுமே மாற்றி இருக்கிறது. மேலும் தொலைக்காட்சி அலைவரிசைகள் வீட்டிற்கு வெளியே செல்லாத வகையில் வீட்டிற்குள்ளேயே கட்டிப்போடும் வேலையை செய்கின்றன. செயற்கையான பொழுதுபோக்குகள் அதிகரிக்க அதிகரிக்க பண்டிகைகள் தனது அடிப்படையை இழந்து வருகின்றது.
ஒரு பண்டிகைக்கான சாராம்சங்கள் உணரப்பட்டால்தான் பண்டிகையின் நோக்கம் நிறைவேறும். மனிதனை கவலைகள், துன்பங்களிலிருந்து மீட்டு வந்து, மரபினை மங்காமல் வளர்ச்சியடைய வைக்கும் பணியினை சிறப்பாக செய்வதற்குத்தான் பண்டிகைகள் தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது. விடுமுறை நாள் என்று பார்க்காமல் பண்டிகைகளை, அது ஏன் உருவாக்கப்பட்டது? என ஆராய்ந்து அதன் நோக்கத்தை நிறைவேற்றுவதுதான் நம்மை உண்மையான வளர்ச்சிக்கு கொண்டு செல்லும். கல்வி நிறுவனங்களில் கற்றுத் தரப்படும் பாடங்கள் வேலை வாய்ப்பினை முன்னிறுத்தி அளிக்கப்படுகிறது. அவை வாழ்க்கைக்குத் தேவையான பாடங்களை அளிப்பதில்லை. ஆனால் அவற்றுள் சிலவற்றை பண்டிகைகள் நமக்கு கற்றுத் தருகிறது.
அடிப்படையை உணர வேண்டும்
எடுத்துக்காட்டாக பொங்கல் பண்டிகை இயற்கையை போற்றுவதற்கும், அதனை பாதுகாக்கும் உழவர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கிறது. இது போன்ற நாட்களில் கிடைக்கும் நேரங்களை, மாணவர்கள் தங்கள் சுற்றுப்புறத்தில் இருக்கும் பகுதிகளில் மரங்கள், செடிகள் நட்டு பராமரிப்பதற்கான பணிகளை தொடங்கலாம்.  விலங்குகள், பறவைகள் வாழ்வதற்கு இடைஞ்சல் இல்லாமலும், அவைகளுக்குமான முக்கியத்துவத்தை நமது வாழ்க்கையில் அளிக்கலாம்.
மேலும் பொங்கல் விடுமுறைகளில்தான் பெரும்பாலான நகர்ப்புற மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். இளம் மாணவர்களுக்கும் அப்போழுதுதான் தங்கள் ஊரை, உறவினர்களை, புதிய வாழ்க்கை சூழலை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கிறது. உறவினர்களோடு இருக்கும் மகிழ்ச்சியானது உறவுகளை வளர்க்கும் எண்ணத்தை மாணவர்கள் மத்தியில் விதைக்க வேண்டும். தனது மரபு வழி இங்கே இருந்துதான் தொடங்குகிறது என்பதை உணர்ந்து, தனது வருங்கால வளர்ச்சியின் போது ஊரின் வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என உறுதிகொள்ள வேண்டும்.
விடுமுறை மட்டுமல்ல...
ஏனெனில் பண்டிகைகள் வாரம்தோறும் வந்து போகும் விடுமுறைகள் மட்டுமல்ல,  சக மனிதனின் அன்பையும், மண்ணின் ஈரத்தையும் நம்மில்  உணரச்செய்யும் நல்ல ஆசிரியருமாகும்.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post