பெரிய நாடுகளில் இருப்பது போல நம் நாட்டுக்கும் இரண்டு விதமான நேரங்கள் பின்பற்றபட உள்ளன. (இது எப்போது என்பது பின்னர் அறிவிக்கப்படும்.) இந்தியாவின் நேரத்தை ஐ.எஸ்.டி., (இந்தியன் ஸ்டாண்டர்டு டைம்) என்று குறிப்பிடுவர். உலகளவில் நேரத்தை கணக்கிடுவதற்கு "கிரீன்விச் மீன் டைம் முறை" (ஜி.எம்.டி) பயன்படுத்தப்படுகிறது.
இந்திய நேரம் ஜி.எம்.டி., யை விட 5.30 மணி அதிகமாக இருக்கிறது. தற்போது தங்களது நேரத்தை 1 மணி நேரம் அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக அசாம் மாநில முதல்வர் தருண் கோகி தெரிவித்துள்ளார். அதாவது இந்தியாவின் மற்ற இடங்களில் பகல் 10 என்றால், இனிமேல் அசாம் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களில் 11 மணி என்று இருக்கும்.
என்ன காரணம்?
என்ன காரணம்?
வடகிழக்கு மாநிலங்களில் அதிகாலை 4 மணிக்கே சூரிய வெளிச்சம் வந்து விடுகிறது. மாலை 5 மணிக்கு பொழுது மறைய தொடங்குகிறது. இதனால் தற்போதுள்ள இந்திய நேரம் ஒத்து வரவில்லை. ஏனெனில் இங்குள்ள தோட்ட தொழிலாளர்களுக்கு இந்த நேரம் சரியானதாக இல்லை. வட கிழக்கு மாநிலங்களில் நேரத்தை 1 மணி முன்னதாக வைப்பதன் மூலம் மின்சார பயன்பாட்டையும் குறைக்க முடியும்.
பூகோள ரீதியில் பார்த்தால் கூட வட கிழக்கு மாநிலங்களை ஒட்டியுள்ள மியான்மரில், இந்தியாவை விட 1 மணி நேரம் முன்னதாக கடைப்பிடிக்கப்படுகிறது. ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் 1/2 மணி நேரம் அதிகப்படுத்தினால் பகல் நேரங்களில் மின்சார பயன்பாட்டை சேமிக்கலாம். உற்பத்தியையும் பெருக்கலாம்.
இந்தியா, கிழக்கு மேற்காக 2,933 கி.மீ. தூரம் பரவியுள்ளது. கிழக்கில் சூரிய ஒளி உதித்த பிறகு இரண்டரை மணி நேரம் கழித்து தான் மேற்கில் "கட்ச்" வளைகுடாவில் உதிக்கிறது. எனவே வடகிழக்கு மாநிலங்கள் நேரத்தை கூட்டிக்கொள்வதே நியாயம் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
எப்போது தொடங்கியது?
இந்தியா சுதந்திரம் பெற்ற பின் 1947 செப்.1ம் தேதி ஐ.எஸ்.டி., நேரம் அறிமுகமானது. உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தை மையமாக கொண்டு ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் நேரம் நிர்ணயிக்கப்பட்டது. ஆனாலும் கோல்கட்டா மற்றும் மும்பை மாநகரங்களில் தனி நேரம் பின்பற்றப்பட்டது. பின் இதில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டதால், கைவிடப்பட்டன.
பகல் நேரம் குறைவு
ஐ.எஸ்.டி., நேரத்தை பின்பற்றும்போது நாட்டின் மற்ற பகுதிகளை விட, அசாம் உள்ளிட்ட வடகிழக்கு பகுதிகளில் பகல் நேரம் குறைவாக இருக்கிறது. இதனால் மாநிலத்தின் பிரதான தேயிலை உற்பத்தி பாதிக்கப்படுகிறது. மேலும் இரவு நேரம் அதிகமாக இருப்பதால் மின்சார பயன்பாடும்வீணாகிறது என்பதே அசாம் முதல்வரின் கோரிக்கை.
பல நாடுகளில் ஒவ்வொரு நகரத்துக்கும் வெவ்வேறு நேரம் கடைபிடிக்கப்படுவது நடைமுறையில் உள்ளது.
நேரம் எப்படி கணக்கிடப்படுகிறது?
பூமி தன்னைதானே சுற்றிவர 24 மணி நேரம் (1440 நிமிடங்கள்) ஆகிறது. பூமியின் மேல் வடக்கு தெற்காக வரையப்பட்ட கற்பனை கோடுகளே தீர்க்கரேகைகள். இங்கிலாந்து நாட்டில் கிரீன்விச் எனுமிடத்தை 0 தீர்க்க ரேகையாக கொண்டும் அதற்கு கிழக்கு திசையில் 180 தீர்க்க ரேகைகளும் மேற்கு திசையில் 180 தீர்க்கரேகைகளும், மொத்தம் 360 தீர்க்கரேகைகள் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டன.
ஒரு தீர்க்கரேகையில் சூரிய ஒளிபட 24 மணி நேரம் அல்லது 1440 நிமிடங்கள் ஆகின்றது. 360 தீர்க்கரேகைகள் 1440 நிமிடத்திற்கு சமம் எனில், சூரிய ஒளி ஒரு தீர்க்க ரேகையை கடக்க 4 நிமிடங்கள் (1440 / 360) ஆகின்றது. 15 தீர்க்க ரேகைகளை கடக்க 60 நிமிடங்கள் (15*4) ஆகின்றது. இதன் அடிப்படையில் ஒரு நாடு பகுதியின் தீர்க்க ரேகை அமைவிடத்தை பொறுத்து அதன் நேரம் கணக்கிடப்படுகிறது.
ஒரு பகுதி 30 தீர்க்கரேகையில் இருந்தால், 0 டிகிரி தீர்க்கரேகையில் இருந்து அப்பகுதியை ஒளி கடக்க 2 மணி (30*4=120 நிமிடம்) நேரம் ஆகும். அப்பகுதி தீர்க்க ரேகையின் கிழக்கு திசையெனில் 12 மணியை கூட்டிக் கொள்ள வேண்டும், மேற்கு திசையெனில் 12 மணியை கழித்துக்கொள்ள வேண்டும்.
இந்தியா கிழக்கு மேற்காக 68 கிழக்கு தீர்க்கரேகையில் இருந்து 97 கிழக்கு தீர்க்கரேகை வரை பரவியுள்ளது. ஒவ்வொரு தீர்க்க ரேகைக்கும் நேரம் கணக்கிட்டால் இந்தியாவில் வட, தென் மாநிலங்களில் வெவ்வேறு நேரம் கிடைக்கும் அதனால் இந்தியாவில் உ.பி.,யின் அலகாபாத் அருகே செல்லும் 82 1/2 டிகிரி தீர்க்க ரேகையை கொண்டு இந்தியா முழுமைக்கும் ஒரே நேர அளவு கணக்கிடப்படுகிறது. அதன்படி கிரீன்விச் நேரத்துடன் 5.30 மணி நேரம் கூட்டிக்கொள்ளப்படுகிறது.
Tags
News