ஆசிரியர்கள் பற்றாக்குறை அதிகரிப்பு: பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் குறையும் அபாயம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு உயர், மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர்கள் இடமாறிச் செல்வதால், முக்கிய பாடங்களுக்கான ஆசிரியர்கள் பற்றாக்குறை 232 ஆக அதிகரித்துள்ளது. பொதுத்தேர்வில் மாணவர் தேர்ச்சி சதவீதம் குறையும் அபாயத்தால் பெற்றோர்கள் கவலை அடைந்துள்ளனர்.
ராமநாதபுரம் கல்வி மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் 41 உயர்நிலை, 51 மேல்நிலைப்பள்ளிகள், பரமக்குடி கல்வி மாவட்டத்தில் 48 உயர்நிலை, 41 மேல்நிலைப் பள்ளிகள் என 181 பள்ளிகள் உள்ளன. ஒரு பள்ளிக்கு தலா 6 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்ற வேண்டும்.
மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட 470 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களில், 122 பணியிடங்கள், 1096 பட்டதாரி ஆசிரியர்களில் 110 பணியிடங்கள் பல மாதங்களாக காலியாக உள்ளன. இந்நிலையில் நிர்வாக மாறுதல் முறையில் 25க்கும் மேற்பட்ட முதுகலை ஆசிரியர்கள் சில வாரங்களாக இடமாறிச் சென்றுள்ளனர்.
அழகன்குளம், திருவாடானை, தொண்டி, ஏர்வாடி, பாண்டுகுடி உள்ளிட்ட அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தாவரவியல், வணிகவியல், ஆங்கிலம், இயற்பியல், உயிரியல் உள்ளிட்ட பாடங்களுக்கான ஆசிரியர்கள் இடமாறுதல் பெற்றுள்ளனர். அரசு பொதுத்தேர்வு துவங்க 52 நாட்களே உள்ள நிலையில் ஆசிரியர்களின் இடமாறுதலால், மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் குறையும் அபாயம் உள்ளது.
காலி பணியிடங்களுக்கு மாற்று ஆசிரியர்கள் வந்தவுடன், மாறுதல் கோரும் ஆசிரியர்களை விடுவிக்க வேண்டுமென பெற்றோர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மாணவர் நல ஆர்வலர்கள் சரவணன், சத்தியேந்திரன்: அறிவியல் பாட ஆசிரியர்கள் இடமாற்றத்தால், விரைவில் துவங்கவுள்ள செய்முறை தேர்வை மாணவர்களால் தெளிவாக செய்ய இயலாது. மதிப்பெண்கள் குறையும். மருத்துவம், விவசாயம், பொறியியல் போன்ற உயர்கல்வியில் சேர முடியாது. தேர்வுக்கு பின் ஆசிரியர்களை இடமாறி செல்ல அனுமதிக்க வேண்டும், என்றனர்.
தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டச் செயலாளர் ராமகிருஷ்ணன்: மொழி பாடங்கள், அறிவியல், கலை பாட ஆசிரியர்கள் பற்றாக்குறையால், இதர ஆசிரியர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டுள்ளது. மன அழுத்தம் வாட்டுகிறது. தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வகுப்புகளில் முழு ஈடுபாட்டுடன் பாடம் நடத்துவதில் சிரமமாக இருக்கிறது.
இரண்டாம் இடை பருவத்தேர்வுக்கு பின், மூன்று நாள் இடை வெளியில் அரையாண்டு தேர்வு நடத்தப்பட்டதால் மதிப்பெண் குறைந்தது. தேர்ச்சி சதவீதம் குறையும் அபாயத்தை போக்க, கடந்த மூன்று நாட்களாக பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. மாற்று ஆசிரியர்கள் வந்ததும், இடமாறும் ஆசிரியரை விடுவித்தால் நல்லது. இல்லையேல் பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைய வாய்ப்புள்ளது, என்றார்.
முதன்மை கல்வி அலுவலர் சிவகாமசுந்தரி: கலெக்டர் நடத்தும் ஆலோசனைக் கூட்டத்தில் உள்ளேன். ஒரு சில பள்ளிகளில் முதுகலை ஆசிரியர்கள் இடமாறுதல் பெற்றுள்ளனர். அது பற்றி எனக்கு முழு விபரம் தெரியவில்லை. அப்புறம் பேசுகிறேன் என்றார். பலமுறை இதே பதிலை கூறி வருகிறார்.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post