கோவை: "தமிழகத்தில், தமிழ் தொலைக்காட்சிகளில் சமையல் குறிப்பு கூறும் போது கூட ஆங்கில வார்த்தைகளே அதிகம் இடம் பெறுகின்றன" என்று கோவையில் நேற்று நடந்த கருத்தரங்கில் இலங்கை தமிழ் எழுத்தாளர் பொன்னுதுரை பேசினார்.
கோவையில் தமிழ் பண்பாட்டு மையம் சார்பில், "தாயகம் கடந்த தமிழ்" என்ற தலைப்பில் உலகத்தமிழ் எழுத்தாளர்கள் கருத்தரங்கு நேற்று நடந்தது. "தாயகம் பெயர்தல்; வலியும் வாழ்வும்" என்ற தலைப்பில் நடந்த அமர்வுக்கு மாலன் தலைமை வகித்தார். கனடாவில் வசிக்கும் முத்துலிங்கம் பங்கேற்க இயலாததால், அவர் அனுப்பிய ஒளிப்பதிவு ஒளிபரப்பானது.
ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கை தமிழ் எழுத்தாளர் பொன்னுதுரை பேசுகையில், "கடல் கடந்தும் தமிழை வாழ வைத்த பெருமை, சோழப் பேரரசுக்கு உண்டு. சாவகம், பாலித்தீவு, கடாரம் முதலிய தூரக்கிழக்கு நாடுகளில், தமிழ்க் கொடியை நாட்டி, அதன் ஆளுமையை வெளிப்படுத்திய பெருமை அவர்களையே சாரும்.
பெருமை வாய்ந்த இந்த மொழியில், "தமிழ்நாடு" என்ற பெயர் அண்ணாதுரையால் வழங்கப்பட்டது. ஆனால், இப்போது தமிழகத்தில் தமிழ் மெதுவாக செத்துக் கொண்டிருக்கிறது; வெளிநாடுகளில் இந்நிலை இல்லை. தமிழகத்தில் தான், தமிழ் தொலைக்காட்சியில் சமையல் குறிப்பு கூறும்போதுகூட, ஆங்கில வார்த்தைகள் அதிகம் இடம் பெறுகின்றன. இங்கு தமிழ் சாகும்போது, மேலை நாடுகளில் தமிழ் தழைத்தோங்கும்" என்றார்.
கருத்தரங்கில் நடந்த அமர்வுக்கு, கார்த்திகேசு தலைமை வகித்தார். மலேசியத்தமிழ் இலக்கிய பேராசிரியர் கிருஷ்ணன் மணியம் பேசுகையில், "மலேசியத் தமிழர் வரலாற்றில், தமிழ்ப்பள்ளிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. 1800ம் ஆண்டுகளில், சிங்கப்பூரிலும், மலேசியாவிலும் தமிழ் பள்ளிகள் துவக்கப்பட்டன. போதுமான ஆதரவு கிடைக்காததால் காலப்போக்கில் இவை மூடப்பட்டு விட்டன. தமிழ் தொழிலாளர்கள் தோட்டங்களில் வேலை செய்ய வேண்டும் என்பதால், தோட்ட முதலாளிகள் பள்ளிகளை தோட்டங்களிலேயே அமைத்தனர்.
1923ம் ஆண்டில் ஒரு தோட்டத்தில் 10க்கும் மேற்பட்ட பள்ளிகளை துவக்க அரசு தொழிற்சட்டம் இயற்றியது. சட்டத்துக்கு பயந்து பள்ளிகளை துவக்கியதால், தற்போது தமிழ் அங்கு வளர்ச்சி பெற்று, மலேசிய தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு வழி வகுத்துள்ளது" என்றார்.
சிங்கப்பூர் நன்யாங் தொழில்நுட்ப பல்கலை பேராசிரியை சீதாலட்சுமி "சிங்கப்பூர் தமிழ் இலக்கியம்; ஓர் அறிமுகம்" என்ற தலைப்பில் பேசுகையில், "கவிதை மரபுகள் தமிழகத்தில் தோன்றினாலும், அதற்கு இணையாக தமிழ் வளர்க்க சிங்கப்பூர் ஆர்வலர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர். சிங்கப்பூரில் கவிதை வளர்ச்சிக்கு களமாக, தமிழ் முரசு இதழ் திகழ்ந்தது. இங்கும் புதுக்கவிதைகள் குறித்த விவாதங்கள் எழுந்தன.
சிங்கப்பூரில், தமிழர்கள் 7 சதவீதம் வசிக்கின்றனர். தமிழின் மீதான தாக்கத்தையும், வளர்ச்சியையும் ஏற்படுத்தியவை பத்திரிக்கைகள், வானொலி, தொலைக்காட்சிகள் தான். தற்போது இணையதளத்தில் தமிழ் படைப்பாளர்கள் உலா வருகின்றனர்" என்றார்.
மலேசிய தமிழர் டாக்டர் சண்முக சிவா, திரைப்பட இயக்குனர் பாரதி கிருஷ்ணா, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மொழிபெயர்ப்பாளர் நாகரத்தினம் கிருஷ்ணா, மருதநாயகம் உள்ளிட்டோர் பேசினர்.
Tags
News