குரூப்-2 வினாத்தாள் வழக்கு: பிப்., 17ல் விசாரணை

குரூப்-2 வினாத்தாள் வெளியான வழக்கில் கைதான, இரு துணை கமிஷனர்கள் உட்பட, 31 பேரிடம் ஈரோடு ஜே.எம்., 3 நீதிமன்றத்தில், வரும் 17ம் தேதி விசாரணை நடக்க உள்ளது.
தமிழகத்தில், டி.என்.பி.எஸ்.ஸி., மூலம் 3,631 பணியிடங்களுக்கு, 2012 ஆகஸ்ட், 12ம் தேதி குரூப் 2 தேர்வு நடந்தது. இதில், 6.40 லட்சம் பேர் பங்கேற்றனர். ஈரோடு, தர்மபுரி அரூரில் தேர்வுக்கு முன் வினாத்தாள் வெளியானதால் தேர்வு ரத்தானது.
ஈரோடு டவுன் போலீஸார் வழக்கு பதிவு செய்து, செந்தில், தனக்கொடி, தியாகு, வரதராஜன், சென்னை பாலன் என்ற ஸ்ரீதர்ராஜ் உட்பட, 11 பேரை கைது செய்தனர். பின் கோவை சி.பி.சி.ஐ.டி., போலீஸாருக்கு, இவ்வழக்கு மாற்றப்பட்டது.
விசாரணையில் வினாத்தாளை வெளியிட்டதாக, ஆந்திராவை சேர்ந்த, மத்திய ரயில்வே ஊழியர் ஆனந்தராவ், ஒடிஸாவை சேர்ந்த ஹகன், அச்சக ஊழியர் கோத்ரா மோகன்நந்தன், உரிமையாளர் ரிஷிகேஷ் குண்டு, கடலூரை சேர்ந்த சிவகுரு ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 2013 மே 13ம் தேதி நாகை மாவட்ட வணிக வரித்துறை துணை கமிஷனர் ரவிகுமார், அவரது அண்ணன் சுப்பிரமணியம், நவம்பர் முதல் வாரத்தில், சென்னை வணிக வரித்துறை துணை கமிஷனர் ஞானசேகரன் என 31 பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் கைதான அனைவரையும், கோவை சி.பி.சி.ஐ.டி., டி.எஸ்.பி., ராஜராஜன், கஸ்டடி எடுத்து விசாரித்தார்.
தற்போது இரு துணை கமிஷ்னர் உட்பட 31 பேரும் ஜாமீனில் உள்ளனர். இவ்வழக்கு, வரும் 17ம் தேதி, ஈரோடு ஜே.எம்., 3 நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
சி.பி.சி.ஐ.டி., போலீஸார் கூறியதாவது: குருப்-2 வினாத்தாள் வெளியான வழக்கில், இரு துணை கமிஷனர்கள் உட்பட இதுவரை 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான அனைவரும், கஸ்டடி முடிந்து, நீதிமன்ற விசாரணைக்காக ஜாமீனில் வெளியில் உள்ளனர். இவ்வழக்கு சம்பந்தமாக 3,500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நகல் தயார் செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு ஜே.எம்., 3 நீதிமன்றத்தில், வரும் 17ம் தேதி வழக்கு விசாரணைக்கு வருகிறது. நீதிமன்றம் மூலம், 31 பேருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் அவர்கள் ஆஜராகும்போது, அரசு தரப்பு வக்கீல் விசாரணைக்கு பின் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்படும், என்றனர்.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post