அவமதிப்பு கட்டுரை: மோடி, ஜெயலலிதாவிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது இலங்கை அரசு
சர்ச்சைக்குரிய கட்டுரையை வெளியிட்டதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் இலங்கை அரசு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது.
இலங்கை பாதுகாப்பு மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில், தமிழக மீனவர் பிரச்சினை குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா எழுதிவரும் கடிதங்கள் குறித்து கொச்சைப்படுத்தப்பட்டு ஒரு கட்டுரை பதிவேற்றப்பட்டிருந்தது.
'நரேந்திர மோடிக்கு ஜெயலலிதா எழுதும் காதல் கடிதங்கள் எந்த அளவுக்கு அர்த்தமுள்ளவை?' என மிகவும் கீழ்த்தரமாக அந்தக் கட்டுரைக்கு தலைப்பும் வைக்கப்பட்டிருந்தது. அத்துடன், ஜெயலலிதா மற்றும் மோடி ஆகியோரின் புகைப்படங்களைக் கொண்டு, சர்ச்சைக்குரிய சித்தரிப்புப் படம் ஒன்றும் வெளியாகியிருந்தது.
இந்தப் பதிவு தமிழகத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. தமிழக அரசியல் தலைவர்கள் தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர்.
இதன் தொடர்ச்சியாக, சர்ச்சைக்குரிய அந்தக் கட்டுரையை தமது தளத்தில் இருந்து இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் உடனடியாக நீக்கம் செய்தது. | விரிவாக படிக்க: இலங்கை அரசு வலைதளத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை 'அவமதித்த' கட்டுரை நீக்கம் |
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் இலங்கை அரசு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளது.
சர்ச்சைக் கட்டுரை வெளியான அதே அரசு வலைதளத்தில் பகிரங்க மன்னிப்புக் கடிதமும் இடம்பெற்றுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் படத்துடன் அக்கடிதம் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
அதில், "நரேந்திர மோடிக்கு ஜெயலலிதா எழுதும் காதல் கடிதங்கள் எந்த அளவுக்கு அர்த்தமுள்ளவை? என்ற தலைப்பில் ஒரு கட்டுரையும் மதிப்பிற்குரிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மதிப்பிற்குரிய தமிழக முதல்வர் ஜெயலலிதா அகியோரின் சித்தரிப்புப் படமும் இந்த வலைதளத்தில் வெளியாகியிருந்தது.
குறிப்பிட்ட அந்த கட்டுரை, தகுந்த பரிசீலனைக்கு உட்படுத்தப்படாமல் பதிவேற்றப்பட்டுவிட்டது. அந்தக் கட்டுரையானது இலங்கை அரசின் நிலைப்பாட்டையோ, பாதுகாப்பு மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் கருத்தையோ எந்தவகையிலும் பிரதிபலிக்கவில்லை. அதை நீக்கிவிட்டோம்.
பிரதமர் நரேந்திர மோடியிடமும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடமும் நிபந்தனையற்ற மன்னிப்பை கேட்டுக்கொள்கிறோம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Tags
Latest News