சென்னை: கன்னியாகுமரியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையின், பட்ட மேற்படிப்பு மையம், வருங்காலத்தில் பல்கலையாக மாறலாம் என, உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் தெரிவித்தார்.
சட்டசபையில் நேற்று, காங்., எம்.எல்.ஏ., பிரின்ஸ், கன்னியாகுமரி மாவட்டத்தில், பல்கலை அமைக்க வேண்டிய அவசியம் தொடர்பாக, கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
அதற்கு உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் அளித்த பதில்: நாடு முழுவதும், மத்திய பல்கலைகள் 45; மாநில பல்கலைகள் 319; தனியார் பல்கலைகள் 185; நிகர்நிலை பல்கலைகள் 129 என, 678 பல்கலைகள் உள்ளன. இதில், தமிழகத்தில்தான் அதிகளவாக 59 பல்கலைகள் உள்ளன. அரசு சார்பில் 24 பல்கலைகள் செயல்படுகின்றன. துறைகள் ரீதியாக, இசை, மீன்வளம் மற்றும் விளையாட்டு பல்கலையும் செயல்படுகின்றன.
கன்னியாகுமரியை பொறுத்தவரை 24 கல்லூரிகள் உள்ளன. அரசு கல்லூரி இல்லை என்பதால் 2011ல், அரசு கலை, அறிவியல் கல்லூரி ஏற்படுத்தப்பட்டது. மேலும், மனோன்மணியம் பல்கலையின், பட்ட மேற்படிப்பு மையம் உள்ளது. இதனால், பல்கலை அமைப்பதற்கான அவசியம் ஏற்படவில்லை.
அதேநேரம், மதுரையில் அமைக்கப்பட்ட சென்னை பல்கலையின் பட்ட மேற்படிப்பு மையம்தான், மதுரை காமராசர் பல்கலையாக மாறியது. அதேபோல், நெல்லையில் அமைக்கப்பட்ட மதுரை காமராசர் பல்கலையின் பட்ட மேற்படிப்பு மையம்தான், பிற்காலத்தில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையாக மாறியது. அதேபோல், எதிர்காலத்தில், கன்னியாகுமரியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்ட மேற்படிப்பு மையமும், பல்கலையாக மாறலாம். இதற்கான அடித்தளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் பதிலளித்தார்.
Tags
kalvi news