2013-இல் நடைபெற்ற போட்டித் தேர்வுகள்: முடிவுக்காக காத்திருக்கும் தேர்வர்கள் - தினமணி

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டித் தேர்வுகளுக்கான முடிவுகள் எப்போது அறிவிக்கப்படும் என்று தேர்வர்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசுப் பணிகளில் உள்ள காலிப் பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வாணையம், தமிழ்நாடு மருத்துவப் பணி கழகம் உள்ளிட்ட அமைப்புகள் மூலம் போட்டித் தேர்வுகளை நடத்தி பணி நியமனம் செய்யப்படுகிறது.

அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு இதுவரை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலம் 54,420, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 13,581 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.

64,435 கல்லூரி ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியிடங்கள், 16,793 சத்துணவு அமைப்பாளர்கள், சமையல், சமையல் உதவியாளர் பணியிடங்கள், 11,803 அங்கன்வாடி பணியாளர் பணியிடங்கள், அரசு போக்குவரத்துக் கழகங்களில் 16,963, கூட்டுறவு நியாய விலைக் கடைகளில் 6,307 பணியிடங்கள், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 5,489 பணியிடங்கள், பல்வேறு அரசுத் துறை நிறுவனங்களில் 3,717 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.

மேலும் ஆசிரியர் காலிப்பணியிடம் உள்பட 43,666 காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று கடந்த ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி தமிழகத்தில், புதிதாக தேர்வு செய்யப்பட்ட, 14,700 ஆசிரியர்களுக்கான நியமனக் கலந்தாய்வு இப்போது நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 10,105 காலிப் பணியிடங்களும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

முடிவுகள் அறிவிக்காமல் இழுத்தடிப்பு: இதைத் தொடர்ந்து கடந்த 2013 ஆகஸ்ட் மாதம் 3-ஆம் தேதி குரூப் 3 தேர்வு நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத் துறையில் செயல் அலுவலர்களுக்கான (நிலை 3) குரூப் - 7 தேர்வு கடந்த 2013 அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி நடைபெற்றது.

இதேபோல் இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர் நிலை 4-க்கான குரூப் 8 தேர்வு கடந்த 2013 நவம்பர் 17-ஆம் தேதி நடந்தது.

ஆனால் இந்த தேர்வு முடிவுகள் கடந்த ஓராண்டாக வெளியிடப்படாமல் தேர்வாணையம் இழுத்தடித்து வருகிறது.

கடந்த 2013 ஆகஸ்ட் 25-ஆம் தேதி நடைபெற்ற குரூப் 4 போட்டித் தேர்வு மட்டும், முடிவுகள் அறிவிக்கப்பட்டு பணியிடங்களும் நிரப்பப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

முடிவுகளை தாமதமின்றி வெளியிட கோரிக்கை: கடந்த 2013 டிசம்பர் 1-ஆம் தேதி நடைபெற்ற குரூப் 2 தேர்வுக்கான முடிவுகள் அடுத்த 20 நாள்களுக்குள் வெளியிட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தேர்வாணையத் தலைவர் பாலசுப்பிரமணியன் அண்மையில் அறிவித்தார்.

அதே நேரம் கடந்த 2013-ஆம் ஆண்டில் நடைபெற்ற குரூப் 3, குரூப் 7, குரூப் 8 ஆகிய போட்டித் தேர்வு முடிவுகள் வெளியிடுவது குறித்து எந்த உறுதியான தகவலையும் தேர்வாணையம் அறிவிக்காதது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளதாக தேர்வர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

எனவே நடைபெற்று முடிந்த அனைத்து போட்டித் தேர்வுக்கான முடிவுகளையும் தேர்வாணையம் விரைந்து வெளியிட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post