தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் 53 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.ஆசிரியர் தினத்தை ஒட்டி, வியாழக்கிழமை அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:
ஆசிரியராகத் தனது வாழ்வைத் தொடங்கி, இந்திய குடியரசுத் தலைவராக உயர்ந்த ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை, ஆசிரியர் தினமாகக் கொண்டாடி மகிழும் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆசிரியர் பணி என்பது வெறும் கல்வியை மட்டும் கற்பிப்பதல்ல. நல்லொழுக்கத்தையும், சிறந்த பண்பையும், பொது அறிவையும், சமூக சிந்தனைகளையும் மாணவச் சமுதாயத்துக்கு கற்பிப்பதாகும்.
எதிர்கால இந்தியாவின் தூண்களான மாணவர்களுக்கு தரமான கல்வியை அளிப்பதுடன், அவர்களை சிறந்த குடிமக்களாக உருவாக்கிடும் மகத்தான பணியை ஆசிரியர்கள் செய்து வருகிறார்கள்.அவர்களது பணியைப் பாராட்டி, தமிழக அரசு ஆண்டுதோறும் நல்லாசிரியர் விருது வழங்கிச் சிறப்பித்து வருகிறது. மேலும், சிறந்த கல்வியை மாணவர்களுக்கு வழங்கிடும் வகையில், கடந்த மூன்று ஆண்டுகளில் 53 ஆயிரத்து 288 ஆசிரியர்களை தமிழக அரசு நியமனம் செய்துள்ளது.நிகழாண்டு 14 ஆயிரத்து 700 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. மாணவர் சமுதாய மேம்பாட்டுக்கென இடைவிடாது உழைத்திடும் ஆசிரியர்களின்கல்விப் பணி மேலும் சிறந்திட வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
Tags
TET News