"பணி நியமனங்களில் ஒளிவு மறைவின்றி, வெளிப்படை தன்மையை அரசு கடைபிடிக்க வேண்டும்,' என, தமிழக ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.
தமிழக ஆசிரியர் கூட்டணி திருப்பூர் மாவட்ட கிளை சார்பில், திருப்பூர் காந்தி நகர் முத்தண்ண செட்டியார் மண்டபத்தில், நிதியளிப்பு கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் கனகராஜ் வரவேற்றார். தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாநில தலைவர் வின்சென்ட் பால்ராஜ், மகளிரணி செயலாளர் மார்க்ரெட் சில்வியா, பொதுசெயலாளர் முருகேசன் பேசினர்.
அகில இந்திய செயலாளர் அண்ணாமாலை பேசியதாவது: ஆசிரியர்களுக்கு, பங்களிப்பு ஓய்வூதியம் வழங்குவதில் குளறுபடி நடக்கிறது. பங்கு சந்தையில் முதலீடு செய்வது பாதுகாப்பற்றதாக தெரிகிறது. கடந்த 2006ல், மாநிலம் முழுவதும் 48 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கான பணிவரன்முறை, 2008க்கு பிறகே கணக்கிடப்பட்டது. இரண்டு ஆண்டுகளாக, தொகுப்பூதிய ஊழியர்களாக இவர்களை அரசு வைத்திருந்தது. இதனால், எவ்வித பலன்களும் அவர்களுக்கு கிடைக்கவில்லை. ஒருவரை பணியிட மாற்றம் செய்து, அப்பணிக்கு மாவட்டம் தழுவிய "கவுன்சிலிங்' நடத்துகின்றனர். "கவுன்சிலிங்' மூலம் நடக்கும் நியமனங்களில், வெளிப்படை தன்மை இருப்பதில்லை. "கவுன்சிலிங்' மூலம் ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள், நிரப்பப்படாமல் உள்ளன. வரும் காலத்தில் கல்வித்துறையில் பணியிட மாற்றமும், நியமனங்களும் ஒளிவு மறைவின்றி நடக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.மாநில துணை செயலாளர் செந்தில்குமார், மாவட்ட பொரு ளாளர் இளஞ்செழியன், ஜான்பீட்டர், சந்திரசேகர், ராஜசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். செயலாளர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.
Tags
Latest News