சி.பி.எஸ்.இ.,யில் இருந்து அரசு பாட திட்டத்திற்கு மாறியது காரணமா?
ஐ.ஐ.டி.,க்களில் சேரும், தமிழக அரசு பாடத் திட்டத்தில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை, கணிசமாக உயர்ந்துள்ளது. இதற்கு, 10ம் வகுப்பு வரை, சி.பி.எஸ்.இ., பள்ளியில் படித்த மாணவர்கள், பிளஸ் 1, பிளஸ் 2விற்கு, அரசு பாடத் திட்டத்தில் மாறியதும் காரணமாக கூறப்படுகிறது.
சென்னை, டில்லி, கான்பூர் உட்பட, 16 இடங்களில், மத்திய அரசின் தொழில்நுட்ப கல்வி நிறுவனமான, ஐ,ஐ,டி.,க்கள் செயல்படுகின்றன. ஐ.ஐ.டி.,க்கள் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலம், தன்பாத்தில் உள்ள ஐ.எஸ்.எம்., எனப்படும், இந்திய கனிமவள பள்ளி ஆகியவற்றில் சேர, மனிதவள மேம்பாட்டுத்துறையால், கூட்டு நுழைவுத் தேர்வு (ஜே.இ.இ.,) நடத்தப்படுகிறது.
அட்வான்ஸ் தேர்வு:
இந்த தேர்வு, 2012ல், இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு, ஜே.இ.இ., மெயின் மற்றும் ஜே.இ.இ., அட்வான்ஸ்டு என, மாற்றப்பட்டது.முதலில், ஜே.இ.இ., மெயின் தேர்வு எழுத வேண்டும்; அதில் தேர்ச்சி பெறும், 1.5 லட்சம் மாணவர்கள், அடுத்தக் கட்ட, அட்வான்ஸ்டு தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். அதில் வெற்றி பெறுபவர்களே, நாடு முழுவதும் உள்ள ஐ.ஐ.டி.,க்களில் உள்ள 9,700 இடங்களில் சேர்க்கப்படுகின்றனர்.
ஐ.ஐ.டி.,க்களில் சேர, மாணவர்கள், ஆறாம் வகுப்பில் இருந்தே, போதுமான பயிற்சி வகுப்புகளில் சேர வேண்டும் என்பது பெற்றோர் கணிப்பு. இதே இலக்குடன் பலர், தங்கள் பிள்ளைகளை, சி.பி.எஸ்.சி., பள்ளிகளில் படிக்க வைக்கின்றனர். அவர்கள் வெற்றியும் பெறுகின்றனர். ஆனால், தமிழக அரசு பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் அதிகளவில், இந்த தேர்வுகளில் வெற்றி பெறுவதில்லை.
450பேர் வெற்றி:
கடந்தாண்டு, ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வில், தமிழக மாணவர்கள், 450 பேர் வெற்றி பெற்று, ஐ.ஐ.டி.,க்களில் சேர்ந்தனர். இதில், 419 பேர் சி.பி.எஸ்.சி., பள்ளியில் படித்தவர்கள்; 31 பேர் அரசு பாடத்திட்ட பள்ளிகளில் படித்தவர்கள்.தேசிய அளவில் ஒப்பு நோக்கும் போது, தமிழக மாணவர்கள், மிகக் குறைந்த இடங்களையே பெற்றனர். குறிப்பாக, சென்னையில், ஐ.ஐ.டி., இருந்தும், இங்குள்ளவர்கள் சிலரே அதில் சேர முடிந்தது. முறையான பயிற்சி இல்லாதது இதற்கு காரணமாக கூறப்பட்டது.
இந்நிலையில், 2014 - 15ம் கல்வியாண்டிற்கான, ஜே.இ.இ., மெயின் மற்றும் அட்வான்ஸ்டு தேர்வுகள் முடிந்து தற்போது மாணவர்கள், ஐ.ஐ.டி.,க்களில் சேர்ந்துள்ளனர்.இதுகுறித்த ஆய்வில், கடந்தாண்டை விட, தமிழக மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது தெரிய வந்துள்ளது. கடந்தாண்டு, அட்வான்ஸ்டு தேர்வில், 31 அரசு பாடத்திட்ட மாணவர்கள் உட்பட, 450 பேர் வெற்றி பெற்றனர்.
இந்தாண்டு தேர்வில், தமிழகம் சார்பில் பங்கேற்ற, 3,216 பேரில், 65 அரசு பாடத்திட்ட மாணவர்கள்; 537 சி.பி.எஸ்.சி., மாணவர்கள் என, 602 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இது, கடந்தாண்டை விட, 152 பேர் அதிகம்.நாடு முழுவதும், 1.26 லட்சம் பேர், ஐ.ஐ.டி., அட்வான்ஸ்டு தேர்வு எழுதினர். இதில், 27,152 பேர் வெற்றி பெற்றுள்ளனர். கடந்தாண்டை போலவே இந்தாண்டும், ஆந்திரா (4,975 பேர்) முதலிடத்தை பிடித்துள்ளது.
ஆந்திரவை ஒப்பிடும்போது, தமிழக மாணவர்கள் எண்ணிக்கை, எட்டில் ஒருபங்கே.எண்ணிக்கை குறைவிற்கு, சிறந்த பயிற்சி மையங்கள் இல்லை என்றும், மாணவர்கள், அண்ணா பல்கலை போன்ற சிறந்த கல்விமையங்களை மட்டும் குறிவைத்து செயல்படுவதாகவும், ஐ.ஐ.டி., பேராசிரியர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
84சதவீதம் பேர்:
இதுகுறித்து, கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறியதாவது:ஆந்திரா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா மாநிலங்களை ஒப்பிட்டால், நாம் இன்னும், மார்ஜின் அளவில் தான் இருக்கிறோம். எனவே, எண்ணிக்கை உயர்வை பெரிதாக கூறமுடியாது.கடந்த ஆறு ஆண்டுகளாக, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 10ம் வகுப்பு முடிக்கும் மாணவர்கள், பிளஸ் 1, பிளஸ் 2 படிக்க, தமிழக அரசு பாடத்திட்டத்திற்கு மாறுகின்றனர்.இவ்வாறு, 84 சதவீதம் பேர், மாறியுள்ளதாக தெரிய வந்துள்ளது. இவ்வாறு மாணவர்கள் மாறினாலும், அவர்களுக்கு, ஐ.ஐ.டி., - ஜே.இ.இ., குறித்த எண்ணம் இருக்கும். அவர்கள், தேர்வு எழுதும் போது, வெற்றி பெறுகின்றனர்.
தமிழகத்தை பொறுத்தவரை, நுழைவுத்தேர்வு இல்லை. தற்போது, பள்ளிகளில் சனி, ஞாயிறு கூட, சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அரசுப் பள்ளி மாணவர்கள், தாங்களே நினைத்தால் மட்டுமே, ஐ.ஐ.டி., நுழைவு தேர்வுக்கு தயாராக முடியும்.இவ்வாறு, அவர் கூறினார்.
Tags
IIT